அரியலூர், ஜூலை 23- தமிழ்நாட்டில் அரசுப் பேருந்து கட்டணம் நிச்சயமாக உயராது என்று அமைச்சர் சிவசங்கர் திட்ட வட்டமாக கூறினார்.
வதந்தி
அரியலூரில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று (22.7.2025) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசுப் பேருந்து கட்டண உயர்வு என்பது வதந்தியாக பரவுவது வழக்கமாக இருந்து வருகிறது ஒவ்வொருமுறையும் அதனை மறுத்து வருகிறோம்.
பேருந்து கட்டண உயர்வு என்பது நிச்சயம் கிடையாது என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பலமுறை தெரிவித்து இருக்கிறார். எனவே இப்போதும் அதனை உறுதிப்படுத்துகிறோம்.
சுமை ஏற்றாது
ஏழை, எளிய மக்கள் மீது சுமை ஏற்றப்படக்கூடாது என்பதால் அரசு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை பேருந்து கட்டண உயர்வு நிச்சயம் இருக்காது. பா.ஜனதாவின் கனவு என்ன என்பதை அன்வர்ராஜா கூறியிருக்கிறார். அ.தி.மு.க.வை முழுவதும் ஆக்கிரமித்து அந்த இடத்தை நிரப்புவதுதான் பா.ஜனதாவின் கனவாக இருக்கிறது.
தந்திரம்
தி.மு.க.வினுடைய வாக்குகளை பிரிக்கலாம் என்ற எண்ணத்தோடு தான் பல்வேறு புதிய கட்சிகளை ஒவ்வொரு தேர்தலிலும் பா.ஜனதா களத்தில் இறக்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறது.
இப்போதும் அந்த தந்திரத்தை ஒரு புது முயற்சியாக எடுத்து இருக்கிறார்கள். வருகிற தேர்தலில் அவை அனைத்தையும் முறியடித்து தி.மு.க. வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.