சென்னை, ஜூலை 23- திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காத்திடும் பொருட்டு ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் ஜூன் 1ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
அவர் தொடங்கி வைத்த நாள் முதல் ஒன்றிய பாஜக அரசின் வஞ்சக சூழ்ச்சியையும், அடிமை அதிமுக-வின் துரோகங்களையும் கண்டு வெறுத்துப் போய் இருக்கும் தமிழ்நாட்டு மக்கள் முதலமைச்சர் பின்னால் ஓரணியில் தமிழ்நாடு என அணி அணியாய் அணிவகுத்து நிற்கத் தொடங்கினர்.
அதோடு எல்லார்க்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கோடு திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேராத குடும்பங்களே கிடையாது என்ற அளவிற்கு முதலமைச்சர் ஒவ்வொரு குடும்பத்தையும் பார்த்து பார்த்து கவனித்து வருவதால் தமிழ்நாட்டு மக்கள் குடும்பம் குடும்பமாக கழகத்தில் இணைந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களும், அதிமுக-வினருமே கூட முதலமைச்சர் பின்னால் அணி திரள்வதைக் கண்டு தாங்க முடியாமல் அரண்டுபோய் அவதூறுகளைப் பரப்பி மக்களைக் குழப்ப பார்த்து அதில் தோற்றுப்போனதால் , நீதிமன்றத்திற்கு சென்று ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை எப்படியாவது தடுக்க முடியாதா என தவம் கிடந்தார் பழனிசாமி.
நீதிமன்றத்தை நாடி தடைவாங்க முயன்ற அதிமுக-விற்கு நீதிமன்றம் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி பழனிசாமி முகத்தில் கரியைப் பூசிவிட்டது. மேலும் OTP மட்டும் கேட்காமல் வழக்கம்போல உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள அனுமதித்துள்ளது நீதிமன்றம். இப்படி திமுக உறுப்பினர் சேர்க்கையை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற பழனிசாமியின் பதட்டமே ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை எந்த அளவிற்கு மக்களிடம் சென்றுள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
திமுக உறுப்பினர் சேர்க்கையைத் தடுக்க நினைத்த அதிமுக, பாஜக-வின் சதி செயலை நீதிமன்றமே முறியடித்த பின்னும், “சீப்பை ஒளித்து வைத்துவிட்டு கல்யாணத்தை நிறுத்தி விட்டோம்” என்ற வகையில் அலைப்பேசி கடவுச் சொல் (OTP) பெறுவதை தடுத்து விட்டோம் என கூப்பாடு போடுகிறது அடிமைகள் கூட்டம். வேடிக்கை.!
திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சிறப்பான ஆட்சியை முன்வைத்து தன்னெழுச்சியாக பொது மக்கள் தங்களை கழக உறுப்பினராக இணைத்து வருகின்றனர். அதில் அலைப்பேசி கடவுச் சொல் (OTP) பெறுவது என்பது உறுதிப்படுத்தலுக்கான ஒரு சிறு நடைமுறை மட்டுமே. எனினும் நீதிமன்ற வழிகாட்டலை மதித்து அந்த நடமுறைக்கு மாற்றான நடமுறையை கடைபிடித்து உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ளுமாறு கழக உடன் பிறப்புகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஆர்.எஸ். பாரதி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் திருத்தம்
புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது தேர்வுத் துறை!
சென்னை, ஜூலை 23- 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை தேர்வுத் துறை இயக்குநரகம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்குச் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது. இனி, திருத்தம் கோரும் விண்ணப்பங்களுடன் உரிய ஆவணங்களை இணைப்பது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான ஆவணங்கள்
மாணவர் பெயர் அல்லது பெற்றோர் பெயரைத் திருத்த அசல் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மாற்றுச் சான்றிதழ் (TC) அல்லது தலைமை ஆசிரியரால் சான்றொப்பம் இடப்பட்ட அதன் நகல் தலைமை ஆசிரியரின் கடிதம் கல்விச் சான்றிதழ் பிறந்த தேதியைத் திருத்த: மேற்கண்ட ஆவணங்களுடன் பிறப்புச் சான்றிதழ் பள்ளி சேர்க்கை விண்ணப்பம் பள்ளி சேர்க்கை நீக்கப் பதிவேடு விண்ணப்ப நடைமுறை:
திருத்தம் கோரும் விண்ணப்பத்துடன் இந்த ஆவணங்கள் முறையாக இணைக்கப்பட்டிருந்தால், அதை இயக்குநரகத்திற்குப் பரிந்துரை செய்ய வேண்டும். ஆவணங்கள் முழுமையாக இல்லாவிட்டால், அத்தகைய விண்ணப்பங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அளவிலேயே நிராகரித்து, சரியான ஆவணங்களை இணைத்து வழங்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனத் தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
இந்த விவரங்களை அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து, உரிய தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது சான்றிதழ் திருத்த நடைமுறையை எளிதாக்கி, காலதாமதத்தைத் தவிர்க்க உதவும்.