ஒன்றிய அரசு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2 Min Read

இணையதளத்தில் பகிரப்படும் பெண்களின்
ஆபாசக் காட்சிப் பதிவுகளை அகற்ற வழிகாட்டு நெறிமுறைகள்

சென்னை, ஜூலை 23-  இணைய தளங்களில் பகிரப்படும் பெண்களின் அந்தரங்க ஆபாச காட்சிப் பதிவுகளை உடனடியாக அகற்ற ஏதுவாக, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து தாக்கல் செய்ய வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி பருவக் காதல் காரணமாக இணையதளங்களில் பகிரப்பட்டுள்ள தனது அந்தரங்க ஆபாச காட்சிப் பதிவுகளை அகற்றக் கோரி பெண் வழக்குரைஞர் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று (22.7.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபுடுகுமார் ராஜரத்தினம், “பாதிக்கப்பட்ட பெண் வழக்குரைஞரின் அந்தரங்க காட்சிப் பதிவுகள் மற்றும் ஒளிப்படங்கள் 70க்கும் மேற்பட்ட இணையதளங்களில் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது 6 இணையதளங்களில் அகற்றப்படாமல் உள்ளது. அவற்றையும் அகற்ற ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என கோரினார்.

காவல் துறை தரப்பில் ஆஜரான மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா, “பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்குகள் மட்டுமல்லாமல், பெண்களுக்கு எதிரான அனைத்து பாலியல் துன்புறுத்தல்கள் வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை மறைத்து, வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதியளிக்க வேண்டும்.

மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட வழக்கு ஆவணங்களில் இருந்து நீக்கப்பட்டு விட்டது” என தெரிவித்தார்.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்

ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் குமரகுரு, “சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்கள், நேரடியாக தங்களின் காட்சிப் பதிவுகள் மற்றும் ஒளிப்படங்களை அகற்றுவது தொடர்பாக எளிதாக சம்பந்தப்பட்ட துறையை அணுகும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய அரசு வகுத்து வருகிறது” என தெரிவித்தார்.

அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இது தொடர்பான ஒன்றியஅரசின் வழிகாட்டு நெறிமுறைகளை விரைவில் வகுத்து தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 5-க்கு தள்ளிவைத்துள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *