சென்னை, ஜூலை 23- ஆன்லைன் டெலிவரி ஊழியர்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.50 லட்சம் செலவில் வேளச்சேரி மற்றும் கலைஞர் நகர் பகுதிகளில் குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓய்வுக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன.
இது டெலிவரி பணியாளர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெலிவரி ஊழியர்களின் சவால்கள்:
அண்மைக் காலமாக, ஆன்லைன் உணவு, காய்கறி, ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆர்டர்கள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை டெலிவரி செய்யும் பணியாளர்களும் பெருமளவில் அதிகரித்துள்ளனர். குறிப்பாக உணவு டெலிவரி சேவை பன்மடங்கு பெருகியுள்ளது. இந்த டெலிவரி ஊழியர்கள் உணவகங்களுக்கு வெளியே காத்திருக்கும் போது, கால் கடுக்க நிற்பது, அலைபேசி மின்னேற்றம் (சார்ஜ்) செய்ய முடியாத நிலை, கழிப்பறை வசதியின்மை, வாகனங்களை நிறுத்த போதிய இடமின்மை போன்ற பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
அண்ணா நகர் 2ஆவது நிழற்சாலை, அண்ணா நகர் ரவுண்டானா, ராயப்பேட்டையில் அண்ணா சாலைஜிபி சாலை சந்திப்பு, எக்ஸ்பிரஸ் அவென்யூ மால், மயிலாப்பூர், தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலை, நுங்கம்பாக்கம் போன்ற முக்கியப் பகுதிகளில் டெலிவரி ஊழியர்கள் அதிக அளவில் காத்திருப்பதை காண முடிகிறது. இவர்களின் காத்திருப்பு போக்குவரத்துக்கு இடையூறாகவும் அமைகிறது. மேலும், கோடை மற்றும் மழை காலங்களில் இவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
குறிப்பாக, இந்தத் தொழிலில் ஈடுபடும் மகளிர் டெலிவரி ஊழியர்கள் ஆண்களை விட அதிக சவால்களை சந்திக்கின்றனர்.
மாநகராட்சியின் புதிய முயற்சி
இந்தச் சிரமங்களைக் களைய, சென்னை மாநக ராட்சி ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்காக சோதனை அடிப்படையில் சில இடங் களில் குளிர்சாதன ஓய்வுக் கூடங்களை அமைத்து வருகிறது.
ஏற்கெனவே தியாகராயர் நகர் மற்றும் அண்ணா நகரில் இத்தகைய கூடங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் இரண்டு இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.50 லட்சம் செலவில் கலைஞர் நகர் மற்றும் வேளச்சேரியில் இந்த ஓய்வுக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்த ஓய்வுக் கூடங்களில் இருக்கை வசதிகள், கழிப்பறை, அலைபேசி சார்ஜிங் வசதிகள், சுத்தமான குடிநீர் வசதிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் போன்ற அத்தியாவசிய வசதிகள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்கு வசதியாக அமையும்.