சென்னை, ஜுலை 22- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (21.7.2025) நடைபயிற்சியில் ஈடுபட்டபோது திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். முதலமைச்சரை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் நலம் விசாரித்தனர்.
உடல்நலக்குறைவு
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் நடைப் பயிற்சி சென்ற அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. எனினும் அதை அவர் பொருட்படுத்தாமல் வழக்கம்போல் நேற்று அண்ணா அறிவாலயம் வந்து கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தி.மு.க.வில் இணைந்த அ.தி.மு.க. மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜாவை இன்முகத்துடன் வரவேற்றார்.
மயிலாடுதுறையில் கடந்த 16ஆம் தேதி அன்று நடைபெற்ற அரசு விழாவில் பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும் என்பது உள்பட அறிவிப்புகளை வெளியிட்டதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
மருத்துவமனையில் அனுமதி
இந்த நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொளத்தூர், திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட தி.மு.க. முகவர்கள் பயிற்சிக் கூட்டத்துக்கு புறப்படத் தயாரானார். அப்போது அவர், தான் சோர்வாக இருப்பதை உணர்ந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு நேற்று காலை 10.40 மணியளவில் சென்றார். அங்கு தனது உடல் பரிசோதனையை மேற்கொண்டார். பின்னர் அவர், அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
நலமுடன் உள்ளார்
இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவப் பணிகள் இயக்குநர் அனில் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கமான காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டிருக்கிறது. எனவே அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தேவையான பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று கூறப்பட்டிருந்தது.
அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவருக்கு வேறு சில பரிசோதனைகள் மேற்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனையில் இருந்தபடி அரசுப் பணிகளை முதலமைச்சர் தொடர்ந்து மேற்கொள்வார்’ என கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி நலம் விசாரித்தார்
இதனிடையே பிரதமர் மோடி, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், தோழமை கட்சி தலைவர்கள், உள்ளிட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர். முழுமையாக உடல்நலம் பெற வாழ்த்து தெரிவித்தனர். மேலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடமும், முதலமைச்சரின் உடல் நலம் குறித்தும் கேட்டறிந்தனர்.