மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மேனாள் கேரள மாநில முதலமைச்சருமான வெள்ளிக் காகத்து சங்கரன் அச்சுதானந்தன் (வயது 101) மறைவுக்கு (21.7.2025) திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினர்களுள் ஒருவர் இவர் ஆவார்.
அய்ந்து முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும், ஒரு முறை முதலமைச்சராகவும் இருந்தவர். ஒன்பது ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராகச் சிறப்பாகப் பணியாற்றியவர். 12 ஆண்டுகள் கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்தவர்.
பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு ஏழாண்டுகள் வரை சிறைச் சென்றவர்.
வறுமையின் காரணமாக ஏழாம் வகுப்பைத் தாண்டி படிக்க இயலவில்லை.
தனது 17ஆம் வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து தொண்டாற்றிய அப்பழுக்கற்ற பொதுவுடைமைவாதியும், இந்தியாவின் மூத்த தலைவருமான தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் அவர்களின் மறைவு – பொது வாழ்வில் ஏற்பட்டுள்ள பெரும் இழப்பாகும்.
அவரது பிரிவால் பெருந் துயரத்திற்கு ஆளாகியிருக்கும் குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
22.7.2025