சென்னை, ஜூலை 22- உலக அளவில் காவல் துறையினருக்கான விளையாட்டு;g போட்டியில் 50 பதக்கங்கள் பெற்று தமிழ்நாடு காவல்துறை அணி பெருமை சேர்த்துள்ளது. அந்த அணியினரை காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டினார்.
உலக அளவில் காவல் மற்றும் தீயணைப்பு துறையினருக்கான விளையாட்டுப் போட்டிகள் (2025), அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் இந்த மாதம் 6ஆம் தேதி வரை நடைபெற்றது.
இப்போட்டியில் அகில இந்திய காவல்துறை விளையாட்டு அணி சார்பாக தமிழ்நாடு காவல் துறையிலிருந்து காவலர்கள் தினேஷ், அர்ஜூன் மற்றும் ஹரிகிருஷ்ணன், பெண் காவலர்கள் இளவரசி மற்றும் சரண்யா பங்கேற்று முறையே 3- தங்கம், 4 வெள்ளி மற்றும் 4-வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை வென்றுள்ளனர்.
மேலும், 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் உடன் 6-ஆய்வாளர்கள், 1-சார்பு ஆய்வாளர், 1-சிறப்பு சார்பு ஆய்வாளர், 4-தலைமை காவலர் மற்றும் 3-பெண் தலைமை காவலர் ஆகியோர் பங்குப்பெற்று முறையே 19-தங்கம், 11-வெள்ளி மற்றும் 9-வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாடு காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
பாராட்டு
இதையடுத்து, வெற்றி பெற்று பதக்கம் வென்ற தமிழ்நாடு காவல் துறை அணியினர் அனைவரையும் காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார். உடன் காவல்துறை தலைவர்கள் விஜய குமாரி (ஆயுதப்படை), பிரவீன் குமார் அபினபு (பொது) உடனிருந்தனர்.
ராமேசுவரம் மீனவர்கள்
4 பேர் கைது இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமநாதபுரம், ஜூலை 22- தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
அதோடு மட்டுமின்றி மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கை களையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 4 பேரை கைது செய்தனர். அதோடு மீனவர்களின் விசைப்படகினையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் 4 பேரையும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை ஒன்றிய, மாநில அரசுகள் தலையிட்டு தடுக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.