சென்னை, ஜூலை 22- உலக தரம் வாய்ந்த அதிநவீன தொழில்நுட்பத்துடன் சூரிய மின்கலம் தயாரிக்கும் பர்ஸ்ட் சோலார் நிறுவனத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி முடித்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம் சிறீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழில் பூங்காவில் அமைந்துள்ள பர்ஸ்ட் சோலார் சூரிய மின்கலம் தயாரிக்கும் ஆலையில் துல்லிய பொறியியல் தொழில்நுட்பத்துடன் மின்கலங்கள் அதி வேகமாக தயாரிக்கப்படுகின்றன.
இந்த ஆலையில் பணி புரியும் ஆயிரம் ஊழியர்களில் பெண்களின் எணிக்கை, 40 சதவீதமாகும். குறிப்பாக முதல் தலைமுறை ஆலை பணியாளர்கள் இதில் பலர் இடம்பெற்றுள்ளனர். சில பெண்கள் அமெரிக்கா, உட்பட வெளி நாடுகளிலில் இருக்கும் பர்ஸ்ட் சோலார் ஆலைகளில் பயிற்சி மேற்கொண்டு, தமிழ்நாடு திரும்பி வந்த பின், இங்கே இருக்கும் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்கள்.
தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ போன்ற சீரிய திட்டங்களுடன் பர்ஸ்ட் சோலார் நிறுவனம் இணைந்துள்ளது. இளைஞர்கள் – பெண்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கி நம் மாநிலம் சூரிய சக்தி துறையில் இருக்கும் தலைசிறந்த வல்லுனர்களின் மய்யமாகவும், நாட்டின் இந்த துறையின் தொழில்நுட்பத்தின் முன்னோடி மாநிலமாக விளங்க பர்ஸ்ட் சோலார் நிறுவனம் அதன் பணியை செய்து வருகின்றன.
இந்த நிறுவனம், திருநெல்வேலி கயத்தாரில் சூரிய மின் உற்பத்தி நிலையத் திலிருந்து இந்த ஆலைக்கு தேவையான 30 சதவீதம் எரிசக்தி உற்பத்தி செய்து அரசுக்கு விநியோகத்தை பகிர்ந்து, இங்கே அமைந்துள்ள ஆலைக்கு சிப்காட் மூலமாக எரிசக்தியை பெற்றுக் கொள்கிறது.
இங்கு நாள் ஒன்றுக்கு 17,000 சூரிய மின்கலங்கள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள சூரிய எரிசக்தி பூங்காக்கள், தனியார் தொழிற்சாலைகள், மற்றும் ஒன்றிய அரசின் விவசாயிகளுக்கு சூரிய எரிசக்தி மூலம் இயக்கப்படும் மானிய விலையில் நீர் இறைக்கும் இயந்திரம் திட்டத்திற்கும் பயன்படுவது குறிப்பிடத்தக்கது.