சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! திருப்புமுனை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்க மாநாடுகள் (15) தமிழர் மகாநாடு

viduthalai
10 Min Read

திருச்சி ஜில்லா துறையூரில் சென்ற 6, 7ஆம் தேதி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்ப் புலவர் மகாநாடு, தமிழ் மாணவர் மகாநாடு, தமிழ் மகாநாடு ஆகிய மகாநாடுகள் கூடி முடிந்தன. இம்மகாநாடு சம்பந்தமான அறிக்கைகள் பத்திரிகைகளிலும், துண்டுப் பிரசுரங்களாகவும் வெளிவந்த காலத்தில் நாம் ஒரு வகையில் மகிழ்ச்சியடைந்ததுண்டு. இதற்குக் காரணம் இம் மகாநாடு, தமிழர் சீர்திருத்தத்தையும், தமிழ் மொழி வளர்ச்சியையும் ஒருங்கே கருதி செல்வர்கள், புலவர்கள், மாணவர்கள் ஒரு சீர்திருத்தக்காரர்கள், அரசியல்வாதிகள் முதலிய எல்லாத் தமிழர்களும் ஒன்று சேரும் மகாநாடு என்று கருதியதேயாகும்.

நாம் இவ்வாறு அபிப்பிராயப்பட்டது தவறல்ல என்பதற்கு இம் மகாநாடு நிர்வாகிகளால் வெளியிடப் பட்டிருக்கும் 9ஆவது அறிக்கை ஒன்றே போதுமான சாட்சியாகும். அவ்வறிக்கையில்,

  1. “மக்களுள் வேறுபாடு பிறப்பினால் இல்லை. என்பதை உணர்ந்து ஏழை மக்களை நம்மைப் போல் மேன்மையடைவிக்கவும்

சுதந்தர தாகங் கொண்டுள்ள நம்முடைய நாட்டிற்குக் கல்வியை அடிப்படையாகக் கொண்டாலன்றி அஸ்திவாரமில்லாத, வீடு போலாகுமாதலின், தாய்மொழியைத் தற்காலத்திற்கு ஏற்றமுறைகள் பயில்வித்து நம்முடைய நாட்டை சீர்திருத்தவும்,

  1. சோம்பேறிகள் உண்டு உறங்குவதற்கு இடமாக அமைந்து கிடக்கின்ற பொதுச் சொத்துகளை நம்முடைய ஏழைமக்களின் கைத் தொழில் கல்வி, முதலியவற்றிக்குப் பயன்படுத்த முயற்சிக்கவும்,
  2. அறிவு, ஆற்றல், கல்வி, ஆண்மை, செல்வம் கைத்தொழில், வாணிபம் முதலியவற்றில் ஏனைய நாடுகளினின்றும் நம்முடைய தமிழ் நாடு ஒரு சிறிதும் பின்னிட்டதன்று என்பதை மெய்ப்பிக்கவும், என்ற பகுதிகள் காணப்பட்டன. இப்பகுதிகளைப் படித்தவர் எவரேனும் இம் மகாநாடுகள் சீர்திருத்தங்கருதிய மகா நாடுகள் அன்றெனக் கருதமுடியுமா? என்று கேட்கிறோம்.

இத்தகைய அறிக்கைகளைக் கண்ட பின்னர்தான் நம்மவர்களில் பலர் அதாவது சுயமரியாதைத் தோழர்களில் பலர் தமிழ் சமுக முன்னேற்றத்திற்கான தீர்மானங்கள் பலவற்றை எழுதி மகாநாட்டின் காரிய தரிசிகளுக்கு அனுப்பினார்கள்.

ஆனால், மகாநாடு நடைபெறுவதற்கு இரண்டொரு தினங்களுக்கு முன்னர்தான் மகாநாட்டின் வரவேற்புத் தலைவராகிய திரு. த.வெ. உமா மகேஸ்வரம் பிள்ளைய வர்கள் “தமிழர் மகாநாடு தமிழ் வளர்ச்சியை மட்டும் கருதிய மகா நாடேயன்றி சீர்திருத்த சம்மந்தமான மகாநாடும் “சமய சம்பந்தமான மகாநாடும் அன்று” என்று ஒரு அறிக்கையை வெளியிட்டி ருந்தார்கள். தமது வரவேற்பு பிரசங்கத்திலும் ‘தமிழ் வளர்ச்சி ஒன்றே இம்மகாநாட்டின் நோக்கமெனின் தமிழ்ப் புலவர் மகாநாடும், தமிழ் மாணவர் மகாநாடும் அதனை நிறைவேற்றக் கூடுமே, தமிழர் மகாநாடு இயற்றத்தகும் கருமம் என்ன? தமிழரில் பெரும்பான்மையோர் தமிழ்ப் புலவரும் அல்லர். தமிழ் மாணவரும் அல்லர். தமிழ்க் கலைகளைப் பரவச் செய்ததற்குத் தமிழ் புலவர்களும், தமிழ் மாணவர்களும் இன்றியமையாத கருவிகள் என்றாலும் மொழிப் பற்றுடைய தமிழர்கள், பொருளையும் தமது செல்வாக்கையும் வரையாது கொடுத்து உதவினாலன்றி தமிழ்ப் புலவர்களும் மாணவர்களும் யாரும் செய்ய இயலாது. இம் முத்திறத்தினரும் ஒன்று சேர்ந்து தமிழ் மொழி வளர்ச்சிக்குரிய வழிகளில், தொண் டாற்ற வேண்டுமென கருதியே மூன்று மகா நாடுகளும் கூட்டப் பெற்றிருக்கின்றன.

இம்மகா நாடுகளின் உண்மைநோக்கங்கள் யாதெனத் தெரியாத படியால் மக்களின் சீர்திருத்தத்தில் கருத்துடைய நண்பர்கள் செய்தித் தாள்களிலும், துண்டுத் தாள்களிலும் தாம் நிறை வேற்ற விரும்பும் முடிவுகளை வெளியிட்டு வருவதைப் பார்த்தேன் என்று கூறியுள்ளார். இவ்வாறு இவர் அறிக்கை வெளியிட்டதும் வரவேற்பு பிரசங்கத்திற் கூறியதும் இதற்கு முன் வெளியிட்ட அறிக்கைகளுக்கு முன்னுக்குப் பின்முரண்பட்ட கூற்று என்றுதான் நாம் கூறுவோம். மகாநாடு நடத்துவதாக முடிவு செய்த ஆரம்ப காலமுதல் மகாநாடு தேதிக்கு இரண்டு மூன்று தினங்களுக்குமுன் வரையில் “தமிழர் மகாநாடு தமிழரின் சீர்திருத்தத்திற்காகவும், தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும் கூட்டப்படுகிறது என்று அறிக்கை மேல் அறிக்கைகள் வெளியிட்டவர்கள் மகாநாட்டு நிர்வாகிகளே ஒழிய வேறு யாரும் அல்லர். இவர்களுடைய அறிக்கைகளைக் கொண்டுதான் மக்களின் சமுக சீர்திருத்தத்திற்குப் பாடுபடும் அன்பர்கள் பல முடிவுகளை எழுதி அனுப்பினார்கள் திரு. உமாமகேஸ்வரம் பிள்ளையவர்கள் சில தினங்களுக்குமுன் சீர்திருத்தக் காரர்களின் தீர்மானங்களைக் கண்டு வெருண்டு வெளியிட்ட அறிக்கையையும் தமது வரவேற்பு பிரசங்கத்தில் கூறிய செய்தியையும் மகாநாடு நடத்த ஆரம்பித்தக் காலத்திலேயே வெளியிட்டு மகாநாடு நிர்வாகிகளின் 9ஆவது அறிக்கை போன்ற அறிக்கைகளையும் வெளியிடாமல் இருந்திருப்பார்களானால், யாரும், “செய்தித் தாள்களிலும், துண்டுத் தாள்களிலும் தாம் நிறைவேற்ற விரும்பும்” சீர்திருத்தச் சம்பந்தமான தீர்மானங்களை வெளியிட்டிருக்கமாட்டார்கள் என்பது உறுதி. இனி, இவர்கள் முதலில் தமிழர் சீர்திருத்தத்திற்காகவும், தமிழ்மொழி வளர்ச்சிக் காகவும் மகாநாடு கூட்டுகின்றோம்.” என்று அறிக்கைகளை, வெளியிட்டு விட்டுக் கடைசியாக சீர்திருத்தக்காரர்களின் தீர்மானங்களைக் கண்டபின் “சீர்திருத்த மகாநாடும் அன்று, சமய வளர்ச்சி மகாநாடும் அன்று, மொழி வளர்ச்சி ஒன்றையே கருதிய மகாநாடு” என்று தீர்மானித்ததற்குக் காரணம் என்னவென்பதைப் பற்றிச் சிறிது ஆராய்வோம்.

இம்மகாநாட்டை கூட்ட ஏற்பாடு செய்தவர்கள் அனைவரும் உண்மையான தமிழ் பற்றும் தமிழ் வளர்ச்சியில் நோக்கமும் உடையவர்களாய் இருந்தாலும் “சைவ சமய பக்தர்கள்” என்பதையாரும் அறிவார்கள், இவர்கள் சைவத்தை விட்டால் தமிழ் இல்லை. தமிழைவிட்டால் சைவம் இல்லை. என்னும் கொள்கையினராய் இதுகாறும் இவை இரண்டையும் இருதோள்களிலும் தூக்கிப் போட்டுக் கொண்டு திரிந்தவர்கள் என்பதையும் யாரும் அறிவார்கள், இத்தகையவர்கள் சீர்திருத்தத்தின் பெயரால் கூட்டும் மகாநாடு, சீர்திருத்ததின் பெயராலும் தமிழின் பெய ராலும் சைவத்தை வளர்க்க முயலும் மகாநாடாக இருக்கும் என்று கருதியே பல சீர்திருத்தக்காரர்கள் மகாநாட்டினருக்கு எச்சரிக்கை செய்யவும், பல தீர்மானங்களை அனுப்பவும் முன் வந்தார்கள்.

உண்மையிலேயே இந்த மகாநாட்டினர் சீர்திருத்தில் ஆர்வமுடையவர்களாக இருந்தால் சீர்திருத்தக்காரர்களின் அறிக்கைகளைக் கண்டோ, தீர்மானங்களைக் கண்டோ பயப்பட்டிருக்க வேண்டியதில்லை. விவாதத் திற்கு இடமில்லாத சீர்திருத்தத் தீர்மானங்களையெல்லாம் மகாநாட்டில் நிறைவேற்றியிருக்கலாம். விவாவதத்திற்கு இடமான விஷயங்களை மகாநாட்டினரும் கொண்டு வராமலிருந்தால், சீர்திருத்தக் காரர்களும் கொண்டு வராமலிருந்திருப்பார்கள். மகாநாடும் முதலில் எதற்கென்று கூட்டுவதாக அறிக்கைகள் வெளியிடப்பட்டனவோ அதற்கென்று கூட்டப்பட்டதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டதாகவும் முடிந்திருக்கும். இவ்வாறு செய்ய மகாநாட்டினர் முன்வராததிலிருந்தே, இவர்கள் நோக்கம் வேறு என்பதும் கடைசியில் அது நிறைவேற முடியாமல் போய் விட்டதென்பதும் விளங்கிவிட்டது.

கடைசியாக, மகாநாட்டில் மொழி சம்பந்தமான தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்படும் என்ற முடிவுக்கு வந்த பின்னும் அதைப்பற்றிச் சீர்திருத்தக்காரர்கள் ஒன்றும் ஆட்சேபிக்கவேயில்லை. ஆனால், மத சம்பந்தமில்லாமல் மொழிச் சம்பந்தமாக மாத்திரம் செய்யப்படும் தீர்மானங்களில் தாங்களும் பங்கெடுத்துக் கொள்வதாகவும் சீர்திருத்தக்காரர்கள் ஒப்புக் கொண்டனர்.

திவான்பகதூர் குமாரசாமி ரெட்டியார் கல்வி மந்திரி அவர்கள் தலைமையில் இரண்டாவது நாள் கூடிய தமிழர் மகாநாட்டில் மாத்திரம் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அத்தீர்மானங்கள் யாவும் தமிழ்மொழி சம்பந்தப்பட்டனவேயொழிய மதச் சம்பந்தமானவை அல்ல. சில தீர்மானங்களோடு ஒட்டிக் கொண்டிருந்த மத சம்பந்தமான விஷயங்களும் சீர்திருத்தக்காரர்களால் திருத்தப்பட்டு அவைகள் ஏகமனதாக நிறைவேறின.

இவ்வாறு மகாநாடு வெற்றியுடன் முடியும் பொருட்டு, மத சம்பந்தமாகப் பிடிவாதஞ் செய்யாமல் விட்டுக் கொடுத்த மகாநாடு நிர்வாகிகளையும், மொழிச் சம்பந்தப்படாத மற்ற சீர்திருத்தத் தீர்மானங்களை வற்புறுத்தாமல் விட்டுக் கொடுத்த சீர்திருத்தக்காரர்களையும், எல்லோரும் ஏகமனதாக மொழி வளர்ச்சி கருதி மகாநாட்டை அமைதியோடு நடத்தியதற்காக இருபாலரையும் பாராட்டுகின்றோம். இவ்வாறு அமைதியோடு நடை பெறுவதற்கு முக்கியக் காரணமாயிருந்தவர், தமிழர் மகாநாட்டுக்குத் தலைமை வகித்த கல்விமந்திரி, திவான்பகதூர், குமாரசாமி ரெட்டியார் அவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

மொழிவளர்ச்சி கருதி, பல வேறுபட்ட கொள்கையினரும் ஒன்று சேர்ந்து கூடிய மகாநாடு இது ஒன்றேயாகும். ஆதலால் இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வீண்போகாமல் – ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல் – பலன் அளிக்குமென்று நம்புகின் றோம். கடைசியாக மற்றுஞ்சில விஷயங்களையும் கூறாமலிருக்க முடியாமைக்காக உண்மையாகவே வருந்துகின்றோம் அவையாவன:-

மகாநாட்டின் நிர்வாகத்தினர்களில் சில சில்லரைப் பேர் வழிகளில் நடந்துகொண்ட வெறுக்கத் தகுந்த முறைகளேயாகும். மகாநாட்டிற்குச் சீர்திருத்தக்காரர்களாகிய சுயமரியாதைத் தோழர்களும் ஏராளமாக வந்திருந்தனர். இவ்வாறு வருவார்கள் என்ற விஷயம் முன்னரே மகாநாட்டு நிர்வாகிகளுக்குத் தெரியும். அப்படியிருந்தும், சுயமரியாதைத் தோழர்களின் மனம் புண்படும்படியான வாக்கியங்கள் எழுதிய இரண்டொரு “போர்டு”கள் போடப்பட்டிருந்தன.

இந்த போர்டுகளை எடுத்துவிட வேண்டுமென்று மகாநாட்டுத் தவைவர்களில் சிலர் சொல்லியும் கூட எடுக்கப்படவில்லை. கடைசியில் இவைகள் சுயமரியாதைக்காரர்களின் முயற்சியினாலேயே மகாநாட்டு நிர்வாகிகளுக்குத் தெரிவித்து எடுக்கப்பட்டன.

மகாநாடு தொடங்கும் பொழுது, இடையிலும், சமய சம்பந்தமான பாடல்கள் பாடுவது முறையல்லவென்று தெரிவிக்கப்பட்டும், பிடிவாதமாக அப்பாடல்களையே பாட முயற்சித்தது வெறுக்கத் தகுந்த செயலாகுமென்றே கருதுகின்றோம். இப்பிடிவாதம் காரணமாகவே சிறிது குழப்பமும் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

முதல் நாள் கூட்டத்தில் சுயமரியாதைத் தோழர்களில் சிலர் மேடையின்மேல் உட்கார்ந்ததைக் கண்டு பொறுக்காமல் இரண்டாம் நாள் மேடையின் மேல் உள்ள நாற்காலிகளின் மேல் பெயர்கள் எழுதிய சீட்டுகள் கட்டப்பட்டிருந்தன. ஆனால் அப்பெயர்களில் மகாநாட்டிற்கு வராதவர்கள் பெயர்கள் கூட இருந்ததாகவும், பெயர்கள் எழுதிய சீட்டுப்படி யாரும் உட்காரவில்லை என்பதாகவும் தெரிகிறது. ஆகவே இச்செயல் சுயமரியாதைத் தோழர்கள் மேடையின் மேல் உட்காரக் கூடாது என்பதற்காகச் செய்யப்பட்டது என்பது நன்றாக விளங்கிவிட்டது. இன்னும் சுயமரியாதைக்காரர்கள் கலகம் பண்ணினால் அவர்களை அடிப்பதற்காக ஆட்கள் தயாரித்து வைத்திருந்ததாகவும் நம்பிக்கையான இடங்களிலிருந்து கேள்வியுற்றோம்.

மிகவும் கேவலமாக இருந்த மற்றொரு விஷயம் குறிப்பிடத் தகுந்ததாகும். போலீஸ்காரர்களைப் பிரம்புடன் கொண்டு வந்து வைத்திருந்ததும், அவர்கள் சாதாரணமாக வெளியே செல்ல எழுந்திருப்பபோரைக் கூட பிரம்பைக் காட்டி, “உட்காரு, வெளியே போ” என்று ஆர்ப்பாட்டம் பண்ணியதும் மிகவும் வெட்கக்கேடான செய்கை யாகும். இவ்வளவும் சுயமரியாதைத் தோழர்களுக்குப் பயந்து செய்த காரியம் என்றே சொல்லப்படுகின்றது. இது உண்மையானால் படித்த பண்டித கூட்டத்தாரின் பயங் கொள்ளித்தனத்திற்கும், அறியாமைக்கும் இதை விட, வேறு அத்தாட்சி வேண்டிய தில்லை.

சுயமரியாதைக்காரர்கள் கலகக்காரர்கள் அல்லர் என்பதையும் “போலீஸ்” முதலிய எந்த உதவியும் இல்லாமல் 5000, 10000 மக்கள் கூடியிருக்கும் மகாநாடுகள் பலவற்றை அமைதியுடன் நடத்தியவர்கள், நடத்துகிறவர்கள் என்பதையும் நியாயத்தின் பொருட்டு வாதிட எந்த போலீசுக்கும், அடியாட்களுக்கும் அஞ்சமாட்டார்கள் என்பதையும் மகாநாடு நிர்வாகிகள் உணராமல் போனதற்கு உண்மையில் நாம் பரிதாபப்படுகின்றோம். தமிழ்மொழி சம்பந்தமாகக் கூடிய ஒரு மகாநாட்டைத் தமிழர்கள் போலீஸ் உதவியைக் கொண்டு நடத்தினார்கள் என்றால் இதைவிட வேறு என்ன அவமானம் வேண்டும்!

சுயமரியாதைக்காரர்கள் கலகக்காரர்கள் அல்லர் என்பதையும் “போலீஸ்” முதலிய எந்த உதவியும் இல்லாமல் 5000, 10000 மக்கள் கூடியிருக்கும் மகாநாடுகள் பலவற்றை அமைதியுடன் நடத்தியவர்கள், நடத்துகிறவர்கள் என்பதையும் நியாயத்தின் பொருட்டு வாதிட எந்த போலீசுக்கும், அடியாட்களுக்கும் அஞ்சமாட்டார்கள் என்பதையும் மகாநாடு நிர்வாகிகள் உணராமல் போனதற்கு உண்மையில் நாம் பரிதாபப்படுகின்றோம். தமிழ்மொழி சம்பந்தமாகக் கூடிய ஒரு மகாநாட்டைத் தமிழர்கள் போலீஸ் உதவியைக் கொண்டு நடத்தினார்கள் என்றால் இதைவிட வேறு என்ன அவமானம் வேண்டும்.

இன்னும் சுயமரியாதைத் தோழர்கள் விஷயத்தில் மகாநாட்டு நிர்வாகிகளில் குறுகிய நோக்கமுடைய சில சில்லரைப் பேர்வழிகள் காட்டிய மனோபாவங்களை வெளியிட வெட்கப்படுகிறோம்.

இக்காரியங்களையெல்லாம் வெளியிடுவதன்மூலம் யாரையும் அவமானப்படுத்தப் பட வேண்டுமென்றோ மனம் நோகச் செய்ய வேண்டுமென்றோ நாம் கூறவில்லை. இனிமேலாவது இவர்கள் மகாநாடுக் கூட்டும் காலங்களில் இவ்வாறு கேவல புத்தியுடன் நடந்து கொள்ளுவோரை மகாநாட்டு நிர்வாகங்களில் சேர்த்துக் கொள்ளாம லிருக்கும் பொருட்டே கூறினோம்.

கடைசியாக, சுயமரியாதைத் தோழர்கள் மகாநாட்டில் கலந்து கொண்டிராவிட்டால் இந்தத் தமிழர் மகாநாடு பெரும்பாலும் சைவ சித்தாந்த மகாநாடாகவே முடிந்திருக்கக்கூடும் என்பதில் அய்யமில்லை. சுயமரியாதைத் தோழர்கள் கலந்து கொண்டதனால்தான் இது உண்மை யான தமிழ் மொழி வளர்ச்சி மகாநாடாக முடிந்தது என்பது குறிப்பிடத் தகுந்ததாகும்.

இச்சமயத்தில் தமிழ் பண்டிதர்களுக்கும், தமிழபி மானிகளுக்கும் சில வார்த்தைகள் கூற விரும்புகிறோம். சுயமரியாதைத் தோழர்கள், தமிழ் மொழிவளர்ச்சி விஷயத்தில் எந்த வகையிலும் மற்ற பண்டிதர்களுக்கும் தமிழ் அபிமானிகளுக்கும் பிற்பட்டவர்கள் அல்லர். என்று தெரிவிக்கின்றோம். இதற்குச் சுயமரியாதைத் தோழர்கள் தமிழர் மகாநாட்டிற்குக் கலந்து கொண்டதும், தமிழ் வளர்ச்சிக்கான தீர்மானங்களிலும் முக்கிய பங்கு எடுத்துக் கொண்டதுமே உதாரணமாகும். உண்மையில் “இந்தி” மொழியைக் கண்டிப்பதாக மகாநாட்டில் மெஜாரிட்டியினரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், சுய மரியாதைத் தோழர்கள் இல்லாவிட்டால் தோற்றே போயிருக்கும். “இந்தி” கண்டனத் தீர்மானத்தை சிலர் எதிர்த்த பொழுது, அவ்வெதிர்ப் புக்குச் சரியான பதில் இறுத்தி “இந்தி” கூடாது என்பதை பெரிய “மெஜாரிட்டி” யாரை ஒப்புக் கொள்ளச் செய்தவர்கள் சுயமரியாதைத் தோழர்களே யாவார்கள் என்பதை நாம் கூற வேண்டியதில்லை.

ஆனால் மற்ற பண்டிதர்களில் பலர் விரும்புவது போல புராணங்களை எழுதுவதும், அவைகளைப் பற்றிப் பேசுவதும், தேவார, திருவாசகங்களை பாடுவதும்தான் தமிழ் வளர்ச்சி என்று சுயமரியாதைத் தோழர்கள் கருதுவதில்லை.

மக்களுடைய வாழ்க்கைக்குப் பயன்படக்கூடியதும் அறிவையும் திறமையும் தைரியத்தையும் உண்டாக்க கூடியதும் ஆகிய சிறந்த கலைகளையெல்லாம் தமிழில் எழுதிப் பரவச் செய்வதன் மூலம், மக்களுடைய அறிவையும், தமிழ் மொழியையும் செம்மை செய்வதே தமிழ் வளர்ச்சி என்று கருதியிருப்பவர்கள் என்று கூறுகிறோம். இதுதான் உண்மையான தமிழ் வளர்ச்சிக்கான வழியுமாகும். ஆகையினால் இனியேனும், “மதம்” என்றும் “சமய உணர்ச்சி” என்றும் “தெய்வீகப் பாடல்கள்” என்று சொல்லுகின்ற பல்லவிகளை விட்டுவிட்டு உண்மையான தமிழ் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டுகிறோம். இவ்வகைக்குச் சுயமரியாதைத் தோழர்களும் மற்றவர்களும் துணை நிற்பார்கள் என்பதில் அய்யமில்லை என்று கடைசியாகத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

– குடிஅரசு – தலையங்கம்  – 14.08.1932

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *