தற்கொலைகள்தான் தீர்வா?

viduthalai
4 Min Read

காலையில், கடும் பகலில், மாலையில், இரவு படுக்கப் போகும் நேரங்களில் தொலைக்காட்சி மற்றும் நாளேடுகளைப்  பார்க்கும்போதும், படிக்கப் போகும்போதும் மனித நேயர்களும், மக்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்று விரும்பும் அனைவரும் வேதனையும், வெட்கமும் அடையும் அளவுக்குச் செய்திகள் வருகின்றன. ஒருபுறம் அறிவியலில், விண்வெளிப் பயண சாதனை, நம் சாலையில் மின்சாரக் கார்கள், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றால் மனித குலம் வளர்ச்சிப் பாதையில் ஓங்கி வருகிறது.

என்றாலும் மறுபுறத்தில் மனிதர்களில் உள்ள பலவீனமானவர்கள், தங்களது சிறு சிறு பிரச்சினைகளைக்கூட   (நம்முடைய மூளை வளத்தாலும், இதய பலத்தாலும்) தீர்க்கலாம் என்று எண்ணாமல், தற்கொலை செய்து கொள்ளும் போக்கு நாளும் குறைந்தபாடில்லை.

அறிவியல் மற்றும் மனோதத்துவ நிபுணர்கள், அதிலிருந்து காப்பாற்றி, அறிவுரையூட்டி மீண்டும் மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்த ‘கவுன்சிலிங் மய்யங்களை’ ஏற்படுத்தினர். தற்கொலைகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாத   நிலை இருப்பது ஏன் என்று நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

  1. கணவன் – மனைவி சண்டைகளால், குடும்ப நிகழ்வுகளால்.
  2. ஆசிரியர் கண்டிப்பு – மாணவன் தற்கொலை!
  3. வாங்கிய கடனைக் கொடுக்க வழிவகை தெரியாமல் தற்கொலை!
  4. ‘காமத்திற்குக் கண்ணில்லை’ என்பதை நிரூபிக்கும் மனித மிருகங்களின் கொடூரத்தினால் ஏற்பட்ட தற்கொலை!
  5. தேர்வில் வெற்றி பெறாவிட்டால் தன்னைப் பெற்றோரும், மற்றோரும் கேவலமாகப் பார்ப்பார்களே என்ற பய உணர்வு அல்லது வெட்க உணர்வு காரணமாகத் தற்கொலை!
  6. ஆன்-லைனில் ரம்மி சீட்டாட்டச் சூதாட்டத்தில் ஈடுபட்டு (அர்ச்சகர்கள் உள்பட) ஆளாகும் தற்கொலை!

இப்படி எத்தனை எத்தனையோ வகைகளால் தற்கொலை சமூகத்தில் மலிவாகி வருவது, நாம் பகுத்தறிவுள்ள ஒரு சமூகத்தில் வாழ்கிறோமா என்ற கேள்வியை நமக்குள்ளேயே கேட்டுக் கொள்ள வேண்டியவர்களாகி விடுகிறோம்.

‘நோய் நாடி, நோய் முதல் நாடு’வதுதானே அறிவுடைமை?

சற்று ஆராய்வோமா?

குழந்தைப் பருவத்தில் இருந்தே, நம் குழந்தைகளை அன்பு, செல்லம் கொடுத்து வளர்ப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு அவசியமான ஒன்று அவர்களுக்குத்  தன்னம்பிக்கை ஊட்டுவதும்!

குழந்தைப் பருவத்தில் பயமுறுத்தி – வற்புறுத்தித் தங்கள் விருப்பத்திற்கு இணங்க வளைய வைப்பது அவர்களிடம் தன்னம்பிக்கையை ஒருபோதும் வளர்க்காது; மெல்ல மெல்லத் துணிவுடன் எதற்கும் பொறுப்பேற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை அக்குழந்தைப் பருவத்தில் அவர்களுக்குப் பயிற்சிகள் அளித்துப் பழக்க வேண்டும். தவறுகளைத் தாமே முன்வந்து ஒப்புக் கொள்ளும் பக்குவத்தை உருவாக்க வேண்டும்.

‘வெற்றி – தோல்வி’ என்பதற்கு, அளவுக்கு மீறிய முக்கியத்துவத்தைத் தருவதும் மற்றொரு வகைக் காரணம்.

‘‘எதிலும் வெற்றி, எப்போதும் வெற்றி, எவரிடத்திலும் வெற்றி’’ என்ற தன்முனைப்பை – மிகைப்படுத்தி வளர்த்து விட்டதனால்தான், ஏதோ, வெற்றியடைந்தவர்களே உலகத்தில் விரும்பத்தக்கவர்கள் என்ற ‘வெற்றி வெறி’யை உருவாக்கி, தோல்வி அடைந்தால் அதனால் ஏதோ ‘‘இனி நாம் வாழவே லாயக்கற்றவர்களாகி விட்டோம்’’ என்ற தாழ்வு மனப்பான்மையை அடைய அந்த ‘வெற்றி வெறி’ போதை சமூகச் சீரழிவிற்கு முன்னோடியாக உள்ளது!

குடும்பத்தில் இரண்டு பிள்ளைகள்; இருவரும் நன்கு படிக்கிறார்கள். மகள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றார்.  100க்கு 90 மதிப்பெண் பெற்ற மகனுக்கு மனம் நோகும் நிலையை உண்டாக்குவதால் எப்படியாவது அந்த வெற்றியைத் தட்டிப் பறிக்க – ஏன் குறுக்கு வழியிலே கூட இறங்கும் சமூகக் கீழிறக்கம் தானே ‘ஊற்றாக’க் கிளம்பி, பெருகி உலக முறைகளாகி வருகின்றது!

ஆறறிவுள்ள மனித குலத்திற்கு இது ஏற்கத் தக்கதா?

மனித அறிவினைப் பயன்படுத்தி, அதே மனித குலத்தை அழிக்கும் ‘திணிக்கப்பட்ட போர்’களும், ஆயுத உற்பத்தி வியாபாரிகளுக்குக் கொள்ளை லாபக் கூட்டுக்காகவும் இன்றும் உலகில் ‘போர்’ தேவைப்படுவது வேதனையானது.

இன்று நவநாகரிக உலகத்தில் மதங்களாலும், அரசியல் ஆதிக்க மனப்போக்குகளாலும் போர் நடத்தி நாடு பிடிக்க முயற்சிப்பது தேவையா – நாளைய மனிதன் கிரகங்களில்  குடியேறத் திட்டமிடும்  யுகத்தில்?

களவாடப்பட்ட வெற்றிகளுக்கும், நேர்மையான முறையில் பெற்ற வெற்றிகளுக்கும் வேறுபாடு தெரிகிறதா சமூகத்தில் – இல்லையே!

‘‘ஆகா, அவர் உலகப் பணக்காரர்களில் முதன்மையாம். எத்தனை கோடி எப்படி சம்பாதித்தவர்?’’

கோவிட் – 19 பெருந்தொற்று காலத்தில் சிறு, குறு, பெரிய தொழில் செய்தவர் மேற்படி வருவாய் இழப்புகளால் தற்கொலை செய்துகொண்டபோது, இப்படி ஒரு கொடுமையான கொள்ளைச் சுரண்டல். நாள் ஒன்றுக்கு 1000 கோடி ரூபாய் வருமானமாம்!

ஆனால், அப்படிப்பட்டவர்கள் உலகில்  ஏதோ ‘பெரிய சாமர்த்தியசாலி’ என்று தொழுது பின்செல்லும் கூட்டம் உள்ள வேதனை கண்கூடல்லவா?

சிறு கடன் வாங்கியவர்கள் கடன் அவமானத்தால் தற்கொலை. திமிங்கலங்கள் தப்பித்து, சிறிய மீன்களே பலியாகின்றன.

பெரும் திமிங்கலங்கள் பெருத்த கோடிகளைக் குவித்தால் பாராட்டு, பெருமைப்படுத்தி விளம்பரப்படுத்தும் ‘வெட்கக்ேகடு’.

இப்படி பலவற்றிற்கும் சரியான வழி – தீர்வு என்ன? உண்டு! உண்டு!!

மூளையை வளப்படுத்தி

இதயத்தைப் பலப்படுத்துவதுதான்

எப்படி?

அடுத்து சிந்திக்கலாமா?

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *