சிவகங்கை மாவட்டம் கீழடியில் கண்டெடுக்கப் பட்ட புதைப் பொருள்கள் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் தமிழர்களின் நகர்ப்புற நாகரிகத்தைப் பறைசாற்றுகின்றன.
ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனின் அயரா முயற்சி இந்த உண்மைகளை அறிவியல் பூர்வமாக வெளியில் கொண்டு வந்துள்ளது. அவர் தனது ஆய்வு அறிக்கையை 2023இல் அளித்தார். இந்திய தொல்பொருள் ஆய்வு மய்யம் அதனை நிராகரித்தது.
தொன்மை நாகரிகம் என்றால் அது ஆரிய நாகரிகமே என்று கதைத்து வந்த கூட்டத்துக்கு, இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழர்களின் கீழடி நாகரிகத்தை கி.மு. மூன்றாம் நூற்றாண்டு நாகரிகம் என்று திருத்தி எழுதித் தருமாறு ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை வற்புறுத்தியது ஒன்றிய பிஜேபி அரசு.
அறிவு நாணயத்தோடு அதற்கு இணங்காமல், உண்மை என்பது தான் உண்மை என்ற உறுதி யோடு அமர்நாத் ராமகிருஷ்ணன் நிமிர்ந்து நி்ன்றது பெரிதும் பாராட்டத் தகுந்ததாகும்.
அறிக்கையில் உள்ள எழுத்துப் பிழைகளைத் திருத்த முடியுமே தவிர, அறிவியல் அடிப் படைகளைத் திருத்த முடியவே முடியாது என்று உறுதியாகக் கூறி விட்டார்.
இதற்காக இவர் கொடுத்த விலை அசாதார ணாமானது. 9 ஆண்டுகளில் 12 இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்பதைவிட தூக்கித் தூக்கி எறியப்பட்டார் என்று சொல்லுவது பொருத்தமானதாகும்.
சென்னையிலிருந்து அசாம், அதன் பின் கோவா, மீண்டும் சென்னை – அதனைத் தொடர்ந்து டில்லி.
கீழடி அறிக்கையைத் திருத்த மறுத்த நிலையில் தற்போது நொய்டா – இன்னும் எத்தனை எத்தனை இடங்களுக்குத் தூக்கி அடிக்கப்படுவார் என்று யாருக்கும் தெரியாது.
மக்களவை உறுப்பினர் தோழர் மதுரை சு.வெங்க டேசன் அவர்கள் கூறியிருப்பதுபோல, ஒன்றிய அரசுக்கு அதிகாரம் இருந்தால் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குக்கூடத் துரத்துவார்கள்.
நடப்பது ஆரியர் – திராவிடர் போராட்டம் என்று தந்தை பெரியார் அறுதியிட்டுக் கூறினார்.
கண்மூடித்தனமாக இதனை மறுத்தவர்கள்கூட, நடந்து வரும் நிகழ்வுகளைப் பார்த்த பிறகாவது கண்களைத் திறப்பார்கள் என்பதில் அய்யமில்லை.
இப்படித்தான் சிந்துவெளி, ஹரப்பா நாகரிகத்தை ஆரிய நாகரிகம் என்று பறைசாற்றினார்கள்.
வாஜ்பேயி பிரதமராக இருந்த காலத்தில் அந்த அமைச்சரவையில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி என்ற பார்ப்பனர் சிந்துவெளி தொல் பொருள் ஆய்வில் கண்டு எடுக்கப்பட்ட காளை உருவத்தினை மார்பிங் (Morphing) அதாவது படம் அல்லது உருவம் ஒன்று – வேறு ஒன்றாக மாற்றப்படும் (Transformation Process) ஒரு முறையைக் கையாண்டு குதிரையாகத் திரித்தார்.
‘கெட்டிக்காரர் புளுகே எட்டு நாள்’ என்கிறபோது, இவர்களின் புளுகுகள் எம்மாத்திரம்? முகத்திரை வெட்டவெளியில் கிழித்துத் தொங்கவிடப்பட்டது.
இன்றைக்கு அதே பிஜேபி ஆட்சியில் இருப்பதால், கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழர் நாகரிகத்தின் தொன்மையை எப்பாடுபட்டாவது மாற்ற வேண்டும் என்று துடியாய்த் துடிக்கின்றனர் – ஒற்றைக் காலில் ஊசி முனையில் நின்று தவ மிருக்கின்றனர். இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு, கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் சுருதிப் பேதமின்றி போர்க் குரல் கொடுத்து வருகிறது.
தொடக்க முதலே திராவிடர் கழகம் கண்டனப் போராட்டங்களை, பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறது (பிஜேபி தனிமைப்படுத்தப்பட்டது மட்டுமின்றி, வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அவர்களுக்கு சரியான ‘கூலி’ கிடைக்கும். அதற்குத் துணை போகும் சக்திகளுக்கும் அதில் பங்கு கிடைக்கும் என்பது உறுதி! உறுதி!!)
ஒன்றிய அரசு நிதி உதவியை நிறுத்தினாலும் ‘திராவிட மாடல்’ அரசு நிதி ஒதுக்கியிருப்பது – இனம், பண்பாடுகளைப் பாதுகாப்பதில் அதன் கவனமும், அக்கறையும், முனைப்பும் எத்தகையது என்பதை வெளிப்படுத்துகிறது.
மீண்டும் சொல்லுகிறோம் – நடப்பது ஆரியர் – திராவிடர் போராட்டமே! இதில் திராவிடம் வெல்லும் – அதற்காக தமிழ்நாடு உறுதியாக நிற்கும் என்று உறுதி கூறுகின்றோம்.
அறிவு நாணயத்தையும், அறிவியலையும், இரு கண்கள் எனக் கொண்டு – எத்தகைய இழைப்பையும் எதிர் கொண்டு செயலாற்றும் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நமது பாராட்டுகள் – வாழ்த்துகள்!