சென்னை, ஜூலை 21- பள்ளி இறுதி வகுப்பை (பிளஸ்-டூ) முடித்த மாணவர்கள், அடுத்தததாக உயர்கல்வி பயில பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட வேறென்ன கல்வி வாய்ப்புகள் உள்ளன என அறிந்து வைத்திருப்பது அவசியம். அதேபோல, பொறியியல் கல்வி நிறுவனங்களில் இணைந்து பயில என்னென்ன படிவங்கள், ஆவணங்கள், விண்ணப்பங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்பதையும் மாணவ, மாணவியர் அறிந்திருப்பது முக்கியம்.
அது குறித்த விவரங்கள் வருமாறு:-
பிளஸ்-டூ முடித்தவுடன் பள்ளியில் வழங்கப்படும் டி.சி., எனப்படும் மாற்றுச் சான்றிதழ் (டிரான்ஸ்பர் சர்டிபிகேட்) மிகவும் முக்கியமான ஆவணம். மேற்படிப்பில் இணைய இது இன்றியமையாதது.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான பின் ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ் கிடைக்க சில நாட்கள் ஆகலாம். அதற்குள் பொறியியல் மேற்படிப்புகளுக்கான சேர்க்கை துவங்கி விடும். அதனால், பள்ளி யில் வழங்கப்படும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை (provisional marksheet) பெறுவது அவசியம். அசல் மதிப்பெண் சான்றிதழ் கிடைத்தவுடன் அதை தவறாமல் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மாணவர் பள்ளியில் நல்ல முறையில் கல்வி பயின்றதற்கு ஆதாரமாக நன்னடத்தை சான்றிதழை (போனபைடு சான்றிதழ்) பள் ளியிலிருந்து தவறாமல் பெறவேண்டும்.ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டத்தில் படித்துவிட்டு மற்றொரு பாடத் திட்டத்திற்கு மாறியிருந்தால், அதற்குரிய இடமாற்று (மைக்ரேஷன்) சான்றிதழை பள்ளிக் கல்வித்துறையிடம் பெற வேண்டும்.
ஒரு மாணவர் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் விண்ணப்பிக்கவும், இந்தியாவின் பிற மாநிலங்களில் விண்ணப்பிக்கவும் அவருக்கு உரிய ஜாதிச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அத்துடன் மாணவர் பெறும் இட ஒதுக்கீட்டுக்கும் அவரது ஜாதிச் சான்றிதழ் மிக அவசியமானது. தேசிய அளவிலான கல்லூரிகளில் விண்ணப்பிக்க, மாவட்ட நிர்வாகம், தாசில்தார், இ-சேவை இணையதளம் ஆகிய ஏதேனும் ஒன்றின் மூலம், ஆங்கிலத்தில் ஜாதிச் சான்றிதழ் பெற வேண்டும்.ஒரு மாநிலத்தில் பள்ளிக்கல்வி பயின்றுவிட்டு, வேறொரு மாநிலத்தில் உள்ள கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள், அதற்கு பிறப்பிடச் சான்றிதழ் (Nativity certificate) பெற வேண்டும். ஒரு மாணவரின் பெற்றோர் வேறு மாநிலத்தில் தங்கிப் பணியாற்றி வந்தாலும் பிறப்பிட சான்றிதழ் பெறுதல் வேண்டும். இதை மாவட்ட நிர்வாகம், தாசில்தார் அலுவலகத்தில் இருந்து பெறலாம்.
மாணவ, மாணவியர்கள் தங்களுக்கான சரியான பிறப்புச் சான்றிதழ் வைத்திருப்பதும் அவசியம்.
மாணவர் அல்லது மாணவி அவரது குடும்பத்தின் முதல் பட்டதாரி, அதாவது அவர்களின் பெற்றோர் பள்ளிப் படிப்பை முடிக்காதவர்கள், மூத்த சகோதர, சகோதரிகள் பட்டதாரியாக இல்லாவிட்டால் அந்த மாணவருக்கு முதல் பட்டதாரிக்கான சலுகைகள் கிடைக்கும். அதற்கான சான்றிதழை தாசில்தார் அலுவலகத்தில் இருந்து பெற வேண்டும்.
பெற்றோரின் வருமானச் சான்றிதழை பெறுவதன் மூலம் கல்விச் சலுகைகள், உதவித் தொகைகள் ஆகியவற்றை பெற முடியும். அவற்றை இணைய வழியிலோ, மாவட்ட நிர்வாகத்திடமிருந்தோ பெறலாம்.மேற்கண்ட சான்றுகளை மாணவ, மாணவியர்கள் அவரவர் பயின்ற பள்ளியிடமிருந்து, மாவட்ட நிர்வாகத்திடமிருந்து, பள்ளிக் கல்வித்துறையிடமிருந்து உடனுக்குடன் பெற்றுக் கொள்வது உயர் கல்வியில் இணைந்து படிப்பதில் ஏற்படும் தடை தாமதங்களை தவிர்க்க உதவும்.