போபால், ஜூலை 21 மத்தியப் பிரதேசத்திலேயே, ஹிந்தி மொழி வழி மருத்துவக் கல்விக்கு வரவேற்பு இல்லாமல் போனது, பாஜ அரசுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. நாட்டிலேயே முதல் முறையாக மத்தியப் பிரதேசத்தில் ஹிந்தி மொழி வழி மருத்துவக் கல்வியை 2022 அக்டோபர் 12ஆம் தேதி ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
ஏறக்குறைய மூன்றாண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், ஹிந்தி வழி மருத்துவக் கல்விக்கு எந்த வரவேற்பும் இல்லாதது அம்பலம் ஆகி யுள்ளது. இது தொடர்பாக அண்மையில் வெளிவந்த புள்ளி விவரத்தின்படி, அந்த மாநிலத்தில் ஒரு மாணவர் கூட எம்பிபிஎஸ் தேர்வை ஹிந்தி மொழியில் எழுதவில்லை என தெரிய வந்துள்ளது.
ஒரு மாணவர்கூட
முன் வரவில்லை
ஹிந்தி வழி மருத்துவக் கல் விக்காக மத்தியப் பிரதேச அரசு சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளது. பள்ளிப் பருவத்தில் இருந்தே ஹிந்தி வழியில் படித்த மாணாக்கர்கள் மருத்துவப் படிப்பை தொடர்ந்து படிக்க இடையூறு இல்லாத வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், ஒரு மாணவர் கூட இந்த திட்டத்தை ஏற்கவில்லை என்பது மேற்கண்ட தகவல் மூலம் அம்பலம் ஆகியுள்ளது.
ஹிந்திக்குக் கடும் பின்னடைவு
மத்தியப் பிரதேச மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதி வாளர் கூறுகையில், ‘‘மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் ஹிந்தி மொழிப் பாடங்கள் உள்ளன. எம்பிபிஎஸ் ஹிந்தி வழியில் கற்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. எனினும், கடந்த மூன்றாண்டுகளில் ஒரு மாணவர் கூட ஹிந்தியில் தேர்வு எழுதவில்லை’’, என்றார். ஹிந்தி மொழி வழிக் கல்வியிலும், ஹிந்தித் திணிப்பிலும் தீவிரம் காட்டி வரும் ஒன்றிய அரசுக்கு, ஹிந்தி ஆட்சி மொழியாக உள்ள மத்தியப் பிரேதசத்திலேயே ஹிந்தி வழி மருத்துவப் படிப்புக்கு வரவேற்பு இல்லாதது கடும் பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்கின்றனர் கல்வியாளர்கள்.
ஹிந்தி புத்தகத்தில்
ஆங்கில பதங்கள்
ஹிந்தி வழி மருத்துவப்படிப்பு குறித்து மத்தியப் பிரதேச மாண வர்கள் சிலர் கூறுகையில், ‘‘பாடப் புத்தகங்கள் ஹிந்தி மொழியில் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை வாங்கிப் பார்க்கும் போது, பெரும்பாலான மருத் துவப் பதங்கள் ஆங்கிலத்தில் தான் இருந்தன. ஹிந்தி மொழியில் இல்லை’’, என்றனர்.
மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், சட் டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் ஹிந்தி வழி மருத்துவப்படிப்பு கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு வரவேற்பு இல்லை என்ற செய்தி வெளிவந்துள்ளது.
மருத்துவப் படிப்பைப் போல் ஹிந்தி மொழியில் இன்ஜினி யரிங் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. அதுவும் படு தோல்வியில் முடிந்தது. கடந்த 2022-2023 கல்வியாண்டில் போபாலில் உள்ள மவுலானா ஆசாத் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தில் 1,200 பேர் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தனர். இவர்களில் 150 பேர் ஹிந்தி வழிக் கல்வியைத் தேர்ந்தெடுத்தனர். 4 ஆண்டு படிப்பு முடிவில் பலர் பாதியிலேயே வெளியேறி விட் டனர்.
4ஆம் ஆண்டில் வெறும் 27 மாணவர்களே மிஞ்சினர் என புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன.