நெஞ்சுவலி இல்லாமலும் மாரடைப்பு வரக் காரணங்கள்

Viduthalai

கேள்வி: நெஞ்சு வலி இல்லாமலும் ‘ஹார்ட் அட்டாக்’ வருமா?

மருத்துவர் பதில்: ஒரு சிலருக்கு மாரடைப்பின் அறிகுறிகள் ஏதுமின்றி மறைந்திருக்கும். இவர்களுக்கு நெஞ்சுவலியோ, மாரடைப்பு சார்ந்த எந்தவித தொல்லைகளும் இருக்காது. ஆனால், இ.சி.ஜி.யில் மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வரும். இதை வலியின்றி வரும் மாரடைப்பு (Silent heart attack) என்று கூறுவார்கள். வயதானால் இதெல்லாம் வாயுத் தொல்லை என்று அலட்சியப்படுத்த வேண்டாம். அலட்சியம் மரணத்தில் கூட முடியலாம்.

மருத்துவம்

பத்மசிறீ டாக்டர்
வி.எஸ்.நடராஜன்
(முதியோர் நல மருத்துவர்)

நெஞ்சுவலி இல்லாமலும்
மாரடைப்பு வரக் காரணங்கள்

முதுமையில் நரம்புகள் தளர்வடைவதால் வலியை உணரும் திறனை அவை இழக்கின்றன. முக்கியமாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நெஞ்சுவலி அதிகமாகத் தெரிவது இல்லை.

வயதாக ஆக மூன்று பெரிய இரத்தக் குழாய்களைத் தவிர, சிறிய ரத்தக் குழாய்களின் மூலமும் இதயத்துக்கு ரத்தம் செல்கிறது. அதனால் பெரிய ரத்தக் குழாய்கள் அடைபட்டாலும் சிறிய ரத்தக் குழாய்கள் வாயிலாக ரத்தம் செல்கிறது. ஆகவே நெஞ்சுவலி மிகுதியாக வருவதில்லை.

முதுமையில் சிலருக்கு மறதி நோய் இருக்கும். ஆனால், தனக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியை சிலர் சொல்ல மறந்து விடுகிறார்கள்.

கேள்வி: நெஞ்சுவலி என்று சில நாட்களுக்கு முன்பு மருத்துவரிடம் போனேன். அவர் இ.சி.ஜி. எடுத்துப் பார்த்துவிட்டு, இதில் எந்த வித்தியாசமும் இல்லை. எதற்கும் ரத்தப் பரிசோதனை செய்து பார்க்கலாம் என்று கூறினார். அதன்படி ரத்தப் பரிசோதனை செய்ய, அதில் எனக்கு லேசான மாரடைப்பு இருப்பதாகத் தெரிந்தது. அதற்குண்டான சிகிச்சையை அளித்தார். எனக்கு ஒரு சந்தேகம். இ.சி.ஜி.யில் எந்த மாற்றமும் இல்லாமல் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டா?

பதில்: நெஞ்சுவலி ஏற்பட்டு, முதல் 2-4 மணி நேரத்திற்குள் இ.சி.ஜி. எடுத்தால் அதில் மாரடைப்பு ஏற்பட்டதற்கான அறிகுறி இல்லாமல் இருக்கலாம். இதுபோன்ற காலத்தில் தொடர்ந்து ஒன்றுக்கு மேற்பட்ட இ.சி.ஜி. எடுப்பதன் மூலம் மாரடைப்பு ஏற்பட்டதை உறுதி செய்யலாம். சிலருக்கு இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களை திடீரென்று சுருங்கும்போது இதயத்திற்கு ரத்த ஓட்டம் குறைய, மாரடைப்பின் அறிகுறியான நெஞ்சுவலி ஏற்படலாம். ஆனால், அந்த ரத்த நாளங்களில் ஏற்பட்ட சுருக்கம் உடனே விரிவடைந்து இதயத்திற்கு ரத்த ஓட்டம் சீராகும்பொழுது நெஞ்சுவலி உடனே மறைந்துபோகும்.

ஆகையால், வலி வரும்போது அந்த ஒரு சில நிமிடங்களில் எடுக்கும் இ.சி.ஜி.யில்தான் மாரடைப்புக்கான அறிகுறி தெரியும். நெஞ்சுவலி இல்லாத நேரத்தில் எடுக்கும் இ.சி.ஜி.யில் எந்த மாறுதலும் இருக்காது.

ஆனால், மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்ய ரத்தப் பரிசோதனை மற்றும் டிரெட்மில் பரிசோதனை மிகவும் உதவியாக இருக்கும்.

கேள்வி: எனக்கு வயது 74. இருமல் தொல்லை இருக்கிறது. இருமினால் சளி வருகிறது. சளி வந்தபின் இருமல் வருவதில்லை. பல மருத்துவர்களை பார்த்து வைத்தியம் பார்த்து வந்தேன். எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் நுரையீரலில் கோளாறு இல்லை என்றனர். சிறிது தூரம் நடந்தால் மூச்சு வாங்குகிறது. இருமலும் ஏற்படுகிறது. குனிந்து நிமிர்ந்து வேலைகளில் ஈடுபட்டால் பெருமூச்சும் இருமலும் ஏற்படுகிறது. இருமலுக்கு மருத்துவம் பார்த்தேன். தற்காலிகமாக நிவாரணம் கிடைத்திருக்கிறது. இதிலிருந்து மீள்வதற்கு என்ன வழி?

பதில்: உங்களுடைய தொல்லைகளை பார்க்கும் போது அனேகமாக இது, இதயம் சார்ந்த காரணத்தினால் வரலாம். அதாவது நீங்கள் நடக்கும் போதும், குனிந்து நிமிரும் போதும், வேலைகளில் ஈடுபடும் போதும் மூச்சு வாங்குகிறது. அனேகமாக இதயம் பலவீனம் அடைந்தால் இத்தொல்லைகள் வரலாம். நீங்கள் இதய மருத்துவ நிபுணரை அணுகினால் ஈ.சி.ஜி. எக்கோ போன்ற பரிசோதனைகள் செய்து உங்களுக்கு தக்க சிகிச்சை அளிப்பார். அவர் செய்த பரிசோதனை விவரங்களையும், கொடுத்த மருந்துகளையும் தெரிவித்தால் மேற்கொண்டு ஆலோசனையை உங்களுக்கு வழங்க முடியும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *