சென்னை, ஜூலை 21 அ.தி.மு.க. மேனாள் சட்டமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (21.7.2025) காலை தி.மு.க.வில் இணைந்தார். அதிமுக – பாஜக கூட்டணி மீது வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைத்து தன் அதிருப்தியை அன்வர் ராஜா வெளிப்படுத்தியிருந்த நிலையில் அவர் திமுகவில் இணைவார், அதுவும் இவ்வளவு சீக்கிரம் இணைவார் என்பதெல்லாம் எதிர்பாராத அரசியல் நகர்வாகவே இருந்தது.
அன்வர் ராஜா திமுகவில் இணையப்போகிறார் என்ற செய்திகள் அரசல்புரசலாக வந்த நிலையில், அதை உறுதிப்படுத்துவதுபோல் முதலில் அன்வர் ராஜாவை அதிமுகவில் இருந்து நீக்கியதாக அறிவிப்பு வெளியானது. அதன் தொடர்ச்சியாக சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்த அன்வர் ராஜா, திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தி யாளர்களை சந்தித்த அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்? என்று விரிவாக விளக்கினார்.
அன்வர் ராஜா பேட்டி!
அன்வர் ராஜா கூறியதாவது: பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்போவதாக அதிமுக முடிவெடுத்த நாள் முதலே அது வேண்டாம் என்று எனது ஆதங்கத்தைத் தெரிவித்தேன். ஆனால் அது எடுபடவில்லை. அதிமுக – பாஜக கூட்டணி அமைந்துவிட்டது. இந்தக் கூட்டணி அமைந்து இத்தனை நாட்கள் ஆகியும்கூட எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று அமித் ஷா சொல்லவில்லை. பாஜக என்பது தமிழ்நாட்டில் ஒரு நெகடிவ் சக்தி. பாஜக அதிமுகவை அழிக்க நினைக்கிறது. அதற்காகவே இப்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணி அமைந்ததன் மூலம் அதிமுக பாஜகவின் கையில் சிக்கியுள்ளது. அதிமுகவை அழித்துவிடுவதே பாஜகவின் நோக்கம்! தமிழ்நாட்டில் அதிமுகவை அழித்துவிட்டு திமுகவுக்கு நேரடி போட்டியாக வேண்டும் என்று பாஜக திட்டமிடுகிறது.
மராட்டியத்தில் என்ன நடந்தது?
ஒருவேளை அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி அமைந்து, அதில் பாஜகவின் 5 பேர் அமைச்சர்களானாலும் கூட போதும், அதிமுகவை அடக்கி பாஜக அதிகாரத்தைக் கைப்பற்றும். இதுபோன்ற செயல்களை பாஜக மகாராட்டிராவில் செய்திருக்கிறது. தேசியவாத காங்கிரஸ், சிவசேனாவை அழித்துவிட்டு ஆட்சியைப் பிடித்தது நினைவிருக்கலாம். அதே பாணியில்தான் அதிமுகவை அழிக்க நினைக்கிறது.
அதிமுக – பாஜக கூட்டணியை மக்கள் விரும்பவில்லை. ஏன் அதிமுகவிலும் பலருக்கு அதிருப்தியே! மேனாள் அமைச்சர்கள் 7 பேர் எடப்பாடியை நேரில் சந்தித்து பாஜக கூட்டணி வேண்டாம் எனப் பேசியுள்ளனர். ஆனால், அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
பாஜகவுக்கு இந்தத் தேர்தல் இலக்கே அல்ல. அவர்கள் இலக்கு அதிமுகவை அழிப்பது மட்டுமே. தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் இந்தத் தேர்தல் எங்கள் இலக்கல்ல, நாடாளுமன்றத் தேர்தலே எங்கள் இலக்கு என்று கூறியுள்ளார். எனவே, தேர்தல் வெற்றி பாஜக நோக்கம் அல்ல, அதிமுக அழிப்பே அதன் நோக்கம்
இந்தச் சூழ்நிலையில்தான் கருத்தியல் ரீதியாக ஒற்றுமை கொண்ட திமுகவில் நான் இணைந்துள்ளேன். நான் சந்தர்ப்பவாதி அல்ல, கொள்கைவாதி. திராவிடக் கொள்கைகயை, தமிழ் மொழியை, இனத்தைக் காப்பாற்றும் கொள்கை கொண்டவன். இந்தக் கொள்கைகளின் காரணமாக திமுகவில் இணைய விரும்பியதாக நான் கூறியதும், தளபதி ஸ்டாலின் என்னை அன்போடு வரவேற்று ஏற்றுக் கொண்டார். அவருக்கு நன்றி!
ஸ்டாலின் இந்தியாவின் வலிமையான தலைவர்
ஸ்டாலின் இந்தி யாவின் வலிமையான தலைவர்களில் மிக முக்கியமானவர். பாஜக எதிர்ப்பை தேசிய அளவில் கூர் மைப்படுத்திய தலைவர். அவர் முன்னெடுத்துள்ள கருத்தியல் ரீதியான பயணத்தில் நான் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன்.
தமிழ்நாடு வாக்காளர்கள் காலங்காலமாக மக்களின் அன்பைப் பெற்ற தலைவர்களைத் தான் ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள். அந்த வகையில் மக்கள் அன்பைப் பெற்ற ஸ்டாலின் தான் மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சராவார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நிகராக அதிமுகவில் மக்கள் அபிமானம் பெற்ற தலைவர் யாரும் இல்லை. இனியும் இருக்கப்போவதில்லை. அதனால் வரும் தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.
திராவிட இயக்கக் கொள்கைகளில் உறுதியானவரான அன்வர்ராஜா சரியான இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.