சென்னை, ஜூலை 21- “எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மேனாள் அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கி அமலாக்கத்துறை, வருமானவரித் துறையின் பிடியில் இருக்கிற வரை அமித் ஷாவின் பிடியில் இருந்து அதிமுக மீள முடியாது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “2014 மக்களவை தேர்தலில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, நரேந்திர மோடிக்கு எதிராக மோடியா? லேடியா? என்று கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டார். 2016இல் அவர் மறையும் வரை ‘நீட்’, ‘உதய் மின்திட்டம்’ உள்ளிட்ட தமிழ்நாடு மக்கள் விரோதத் திட்டங்களை நிறைவேற்ற மறுத்து வந்தார்.
‘நீட்’ திணிப்பு
ஆனால், அவரது மறைவிற்குப் பிறகு முதலமைச்சராக வந்த எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை சீரழிக்கும் ஒன்றிய பாஜக அரசின் நீட் தேர்வை முதல்முறையாக 2017இல் நடைமுறைக்கு கொண்டுவந்தார். அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி செய்த 2014 வரை தமிழ்நாட்டில் நீட் திணிக்கப்படவில்லை.
உதய் மின் திட்டம்
அதேபோல ‘உதய் மின் திட்ட’த்தை அன்றைய அதிமுக அரசு ஏற்றுக் கொண்டது. அத்திட்டத்தின் படி 75 சதவீத கடனை தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்கவேண்டும். ஆனால், 34.88 சதவீத கடன் தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மீதி கடனை ஈடுகட்ட எடப்பாடி அரசு நடவடிக்கை எடுக்காததால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கடன் சுமை 2011 – 2012இல் இருந்ததை விட 2021இல் ஒரு லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் ஆக உயர்ந்து – அதாவது 332 சதவீதம் அதிகரித்தது. இதனால் மின்சார வாரியம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது.
8 ஆண்டுகளில் மின் கட்டண உயர்வு செய்யாத காரணத்தால் 2022 இல் செய்ய வேண்டிய நிலை திமுக அரசுக்கு ஏற்பட்டது. இதற்கு காரணம் அதிமுக ஆட்சியே தவிர, திமுக ஆட்சி அல்ல.
2021 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக – பாஜக, 2023இல் கூட்டணியை முறித்துக்கொண்டதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 2024 மக்களவை தேர்தல் மட்டுமல்ல, 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளிவந்த உடனே அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
நிர்ப்பந்தம்
ஆனால் காலப்போக்கில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடுத்த நிர்பந்தத்தின் காரணமாக பாஜக கூட்டணியில் சேரவேண்டிய நிர்பந்தம் அதிமுகவுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை எடப்பாடி பழனிசாமி இதுவரை விளக்கவில்லை.
திராவிட இயக்கத்தையும் பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர் களையும் இழிவுபடுத்தி காட்சிப் பதிவு வெளியிட்டபோது மேடையில் அமர்ந்திருந்த உதயகுமார், வேலுமணி உள்ளிட்ட அதிமுக மேனாள் அமைச் சர்கள் வாய் மூடி மவுனியாக இருந்தது ஏன்? திராவிட இயக்கத்தை அழிப்போம், ஆன்மிகத்தை வளர்ப்போம் என்றும், அரசு கட்டுப்பாட்டில் இருந்து கோயில் களை விடுவிக்க வேண்டும் என்றும் முருகன் மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றியபோது அதை எதிர்க்கத் துணிவில்லாமல் அதிமுக ஜால்றா அரசியல் நடத்தியது.
அதேபோல, தமிழ்நாட்டின் கடன் சுமை அதிகரித்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். 2011இல் அதிமுக ஆட்சி அமைந்தபோது, திமுக ஆட்சி வைத்த கடன் ரூபாய் ஒரு லட்சம் கோடி. ஆனால் 2021இல் ஆட்சியை விட்டு அதிமுக விலகுகின்ற பொது வைத்திருந்த கடன் ரூ.5.7 லட்சம் கோடி.
ஒன்றிய அரசின் 3 கருப்பு வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு, சிறுபான்மையினரை குறிவைத்து கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு, உதய் மின் திட்டத்தில் சேர்ந்து மின் கட்டண உயர்வுக்கு காரணமாக இருந்த அதிமுகவை விட ஒரு ஜால்றா கட்சி வேறு எதுவும் இருக்க முடியாது.
அடிமைக் கட்சி
புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் மும்மொழி கொள்கை திணிப்பு, மும்மொழி கொள்கையை ஏற்கவில்லை என்றால் கல்வித்துறைக்கு நிதி வழங்க மறுப்பு, தொகுதி சீரமைப்பு என்று கூறி தென் மாநில நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியை எதிர்க்காத அதிமுகவை விட ஒரு அடிமைக் கட்சி வேறு எதுவும் இருக்க முடியாது, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மேனாள் அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கி அமலாக்கத்துறை, வருமானவரித் துறையின் பிடியில் இருக்கிற வரை அமித்ஷாவின் பிடியில் இருந்து அதிமுக மீள முடியாது.
தற்கொலைக்கு சமமான முடிவை அதிமுக எடுத்திருக்கிறது. எனவே எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணங்களில் மக்கள் முன் நீலிக்கண்ணீர் வடிப்பதை எவரும் நம்பவும் மாட்டார்கள், ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள்” என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.