சென்னை, ஜூலை 21- தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் கோபால சுந்தர ராஜ் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப் 4 பணி) பணிகளில் அடங்கிய வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எட்டாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 25ஆம் தேதி சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மூலச்சான்றிதழ் சரி பார்ப்பு மற்றும் கலந் தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம் மற்றும் இதர விவரங்கள் அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய அழைப்பாணையை தேர்வர்கள் தேர்வாணையம் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மூலச் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அதற்கான விவ ரம் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். அழைப்பாணை தனியே அஞ்சல் மூலம் அனுப்பப்பட மாட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்கள்
தடை ஆணைக்குப் பிறகு
ரூ.21.47 கோடி அபராதம் விதிப்பு
உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிக்கை
உதகை, ஜூலை 21- பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்த பிறகு 17 லட்சத்திற்கு மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டு 2,586 டன் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு 21.47 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஊட்டியில் கடந்த மே மாதம் நடந்த நாய் கண்காட்சியில் பெட் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து 2019ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் தமிழகம் முழுவதும் 17 லட்சத்து 23,567 சோதனைகள் நடத்தப்பட்டு, 2,586 டன் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம் 21 கோடியே 47 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள கோவை, நீலகிரி, நெல்லை, குமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில், 636 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 7 கோடியே 12 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த 261 தொழிற்சாலைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதில் 176 தொழிற்சாலைகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள 13 மாவட்டங்களில் இயங்கி வந்தன என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கைகளையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மாவட்டங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 636 டன் பிளாஸ்டிக் பொருட்கள் எப்படி அப்புறப்படுத்தப்பட உள்ளது என்பது குறித்தும், மூடப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொழிற்சாலைகள் குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
தமிழ்நாட்டில் பகுதி நேர ஆசிரியர்களின் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது
சென்னை, ஜூலை 21- பணிநிரந்தம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 12 நாட்கள் மேற்கொண்ட தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது.
பகுதி நேர ஆசிரியர்கள்
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012ஆம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவார்கள். அதற்கு ரூ.12,500 மாத ஊதியமாக தரப்படுகிறது. மேலும், பணிநிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தொகுப்பூதியம் உயர்வு
இதற்கிடையே ஆட்சிக்கு வந்தால் தற்காலிக ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. அந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பகுதி நேரஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் சென்னையில் கடந்த ஜூலை 8ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஸ் எங்களது கோரிக்கைகளை ஏற்று நல்ல முடிவை தருவதாக கூறியுள்ளார் இதனால் போராட்டத்தை தற்காலிகமாக முடித்து கொள்கிறோம் என்றனர். இந்த நிலையில் பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தை சற்று உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.