திருப்பூர், ஜூலை 20- முறையாக ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்க தேசத்தினர் 28 பேருக்கு தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
போலி ஆவணங்கள்
தொழில் நகரமான திருப்பூரில் வெளி மாவட்ட, வெளி மாநிலத் தவர்கள் தங்கி தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். இதை பயன்படுத்தி வங்கதேச நாட்டினர், வடமாநிலத்தவர் என்ற போர்வையில் திருப்பூரில் தங்கி பணியாற்றி வருவது அதிகரித்து வருகிறது.
முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருப்பவர்களை காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில், திருப்பூர் அருகே அருள்புரத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வங்கதேசத்தினர் தங்கி வேலை செய்வதாக பல்லடம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து கடந்த 12.1.2025 அன்று பல்லடம் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட பனியன் நிறுவனத்துக்கு சென்று அங்குள்ள தொழிலாளர் தங்கும் விடுதியில் சோதனை நடத்தினார்கள்.
அங்கிருந்தவர்களின் ஆவணங்களை சரிபார்த்த போது வங்கதேசத்தினர் 28 பேர், அங்கு போலி ஆவணங்கள் மூலம் தங்கியிருந்தது கண்டறியப்பட்டது.
கடந்த 6 மாதத்துக்கு முன்பு இவர்கள், வங்கதேச நாட்டில் இருந்து கொல்கத்தா வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து, பின்னர் ரயில் மூலமாக திருப்பூர் வந்து செட்டிப்பாளையம், முருகம் பாளையம் பகுதியில் பனியன் நிறுவனங்களில் வேலை செய்தது தெரியவந்தது.
28 பேர் கைது
இதைத்தொடர்ந்து அங்கிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த முகமது சலீம் (வயது 26), முகமது ஹூசைன் (26) உள்பட 28 பேர் மீது வெளிநாட்டினர் சட்டம் 1946இன்படி வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் மீது திருப்பூர் 2ஆவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பளிக்கப் பட்டது.
முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த குற்றத்துக்காக வங்கதேச நாட்டினர் 28 பேருக்கு தலா 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி சிறீதர் தீர்ப்பளித்தார். நீதிமன்ற தீர்ப்பைதொடர்ந்து, வங்கதேச நாட்டினர் 28பேரும், சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.