சென்னை, ஜூலை 20- திருவண்ணாமலை மாவட்டம், மல்லிகாபுரம் அருகே 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பிற்காலத் தமிழியின் எழுத்து வடிவத்தைக் கொண்டிருப்பதால், தமிழ் எழுத்து வரலாற்றில் ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டுக்கு அருகில் உள்ள மல்லிகாபுரத்தைச் சேர்ந்த அரிஅரன், தமிழ்செல்வன், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பாலமுருகன், பழனிசாமி, தண்டராம்பட்டு சிறீதர் மற்றும் சிற்றிங்கூர் ராஜா ஆகியோர் மல்லிகாபுரம் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு விவசாய நிலத்தில், தலா ஒரு அடி உயரம் மற்றும் அகலம் கொண்ட அய்ந்து வரி கல்வெட்டைக் கண்டு பிடித்தனர்.
கண்டெடுக்கப்பட்ட கல் வெட்டின்படி எடுக்கப்பட்ட தகவல்களை கல்வெட்டறிஞர் ராஜகோபாலுக்கு அனுப்பியபோது, அதன் முக்கியத்துவம் தெரியவந்தது. இந்தக் கல்வெட்டில் உள்ள எழுத்துகள் 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பிற்காலத் தமிழி வடிவில் உள்ளதாக ராஜகோபால் உறுதிப் படுத்தினார்.
கல்வெட்டில்
எழுதப்பட்டது என்ன?
கல்வெட்டில், “கருங்காலி நல்லுாரான் கண்ணந்தைகண் மகன் விண்ணன் ஆன்பூயலுட்பட்டான்” என்று பொறிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், தற்போதுள்ள “கருங்காலிப்பாடியைச் சேர்ந்த விண்ணன் என்பவர், ஆநிறை கவர்ந்த போரில் (மாடுகளைக் கவர்ந்து செல்லும் போர்) வீரமரணம் அடைந்துள்ளார்” என்பதாகும்.
அவருக்கு நினைவாக இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக நடுகல்லில் வீரனின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த நடுகல்லில் வீரனின் உருவம் இல்லாமல் தகவல் மட்டுமே பொறிக்கப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.
இதுபோன்ற மிகவும் பழமையான கல்வெட்டுகள் ஏற்கனவே புலிமான்கோம்பை, பொற்பனைக் கோட்டை, தாதம்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் கிடைத்துள்ளன. மல்லிகாபுரத்தில் கண்டெடுக்கப் பட்ட இந்தக் கல்வெட்டும், தமிழ் எழுத்துகள் மற்றும் சமூக வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் ஒரு முக்கிய ஆவணமாகும். இந்தக் கல்வெட்டை உரிய முறையில் பாதுகாத்து, மேலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.