சென்னை, ஜூலை 20- பெரம்பூர்-அம்பத்தூர் இடையே ரூ.182 கோடியில் 6.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு 5 மற்றும் 6ஆவது புதிய ரயில் பாதைகள் அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
ரயில் பாதை
வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து செல்லும் ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வடமாவட்டங்களுக்கு சென்டிரலில் இருந்து தான் பெரும்பாலான ரயில்கள் இயக்கப்படுகிறது.
எனவே, பெரம்பூர் வழியாக கூடுதல் ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டது. இதற்காக, பெரம்பூர் ரயில் நிலையம் ரூ.360 கோடியில் 4ஆவது புதிய ரயில் முனையமாக மாற்றப்பட உள்ளது. இங்கு பல்வேறு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட இருக்கிறது.
பெரம்பூர் ரயில் நிலையத்தை ரயில் முனையமாக மாற்றிட, ரயில்வே வாரியத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியது.
பெரம்பூர்- அம்பத்தூர் இடையே ரூ.182 கோடியில் 6.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு 5, 6ஆவது புதிய ரயில் பாதைகள் அமைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நிலையில், பெரம்பூர் ரயில் நிலையத்தை 4ஆவது புதிய முனையமாக மாற்றவும், கூடுதலாக 5, 6ஆவது பாதைகள் அமைக்கவும் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
4ஆவது முனையம்
இதுகுறித்து. தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
பெரம்பூர் ரயில் நிலையத்தை 4ஆவது ரயில் முனையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து ரயில்வே வாரியத்திடம் வழங்கப்பட்டது.
ரூ.360 கோடியில் 4ஆவது புதிய முனையம் அமைப்பதற்கான இந்த விரிவான திட்ட அறிக்கைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, 2028ஆம் ஆண்டு இறுதிக்குள் புதிய ரயில் முனைய பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
பெரம்பூர் – அம்பத்தூர் இடையே 5, 6ஆவது புதிய ரயில் பாதைகளும் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய பாதைகள் அமையும்போது, அம்பத்தூரில் இருந்து பெரம்பூருக்கு தடையின்றி ரயில்களை இயக்க முடியும்.
பெரம்பூரில் தற்போது, 4 நடைமேடைகள் உள்ளன. கூடுதலாக 2 நடை மேடைகள் அமைக்கப்படும். இதனால் விரைவான ரயில் சேவை வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு வருமானம் அதிகரிப்பாம்!
புதுடில்லி, ஜூலை 20- இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட, ஆனால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் வருமானம் 2022-2023 நிதியாண்டில் 223 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR – Association for Democratic Reforms) தெரிவித்துள்ளது.
இந்த அதிர்ச்சி தரும் தகவல்கள் அடங்கிய அறிக்கையை ADR நேற்று முன்தினம் வெளியிட்டது.
501 கட்சிகளின் வருமானம் அதிகரிப்பு
அந்த அறிக்கையின்படி, நாட்டின் 22 மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள 739 அங்கீகரிக் கப்படாத அரசியல் கட்சிகளின் 2022-2023 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன.
இதில், 501 கட்சிகளுக்கு மட்டுமே தணிக்கை மற்றும் பங்களிப்பு அறிக்கைகள் கிடைத்துள்ளன. இந்த 501 கட்சிகளின் மொத்த வருமானம் கணிசமாக 223 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வருமான அதிகரிப்பில், முதல் 10 இடங்களில் உள்ள கட்சிகளில் குஜராத்தைச் சேர்ந்த அய்ந்து கட்சிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
வருமானம் எவ்வளவு?
முதல் 10 இடங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் மொத்த வருமானம் 1,582 கோடி ரூபாயாக உள்ளது. இவற்றுள் சில முக்கிய கட்சிகளின் வருமான விவரங்கள்:
பாரதிய தேசிய ஜனதா தளம் கட்சி: 576 கோடி ரூபாய் வருமானத்துடன் முதலிடத்தில் உள்ளது.
சத்யவாடி ரக்ஷக் கட்சி: 416 கோடி ரூபாய் வருமானத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
நியூ இந்தியா யுனைடெட் கட்சி: 404 கோடி ரூபாய் வருமானத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்தக் கட்சிகள் தங்கள் வருமானம் அனைத்தும் நன்கொடை கள் மூலம் பெறப்பட்டதாகத் தெரிவித்துள்ளன.
அதிகபட்ச அங்கீகரிக்கப்படாத கட்சிகள் உத்தரப் பிரதேசத்தில் உள்ளதாக அறிக்கை கூறுகிறது. அதைத் தொடர்ந்து டில்லி மற்றும் பீகாரில் அதிக எண்ணிக்கையிலான அங்கீகரிக்கப்படாத கட்சிகள் உள்ளன.