திருச்செங்கோட்டில் நடைபெற்ற திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியரின் சிறப்புரை

6 Min Read

ஏன், தி.மு.க. ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்று நினைக்கிறார்கள்?
‘‘அனைவருக்கும் அனைத்தும்’’, ‘‘எல்லோருக்கும் எல்லாம்’’ என்று சமூகநீதிக் கொள்கையைக் கடைப்பிடிப்பதினால்தானே!
தி.மு.க. ஆட்சி என்றால், பெரியார் கொள்கை, திராவிடக் கொள்கைகள்தான்!

திருச்செங்கோடு, ஜூலை 20-  ஏன், தி.மு.க. ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்று நினைக்கிறார்கள்?  தி.மு.க. ஆட்சி என்றால், பெரியார் கொள்கை, திராவிடக் கொள்கைகள்தான். “அனைவருக்கும் அனைத்தும்’’, “எல்லோருக்கும் எல்லாம்’’ என்று சமூகநீதிக் கொள்கையைக் கடைப்பிடிப்பதினால்தானே! “இன்னார்க்கு இன்னதுதான்’’ என்று சொல்வதுதான் மனுதர்மம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

திருச்செங்கோட்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு நிறைவு விழா!

கடந்த 28.6.2025 அன்று மாலை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு நிறைவு விழா,  திறந்த வெளி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

எந்தக் கடவுளும்
உங்களுக்குப் பயன்படாது!

ஆட்சியை ஏதாவது வித்தைகளைச் செய்து அகற்றலாம் என்று எண்ணி, கடவுளையெல்லாம் அழைத்து வந்திருக்கின்றீர்கள். அந்தக் கடவுள்கள் உங்களுக்குப் பயன்படாது.

ஏற்கெனவே இராமரை கூட்டிக் கொண்டு வந்தீர்கள்; சேலம் மாவட்டத்தில், கலைஞர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில்.

இராமனைச் செருப்பால் அடித்தார்கள் என்று நடக்காத ஒன்றைச் சொல்லி, பிரச்சாரம் செய்தனர்.

தி.மு.க.காரர்களே என்ன நினைத்தார்கள் என்றால், ‘‘போச்சு, போச்சு, தி.மு.க. ஆட்சிக்கு வராது’’ என்று.

இராமனை செருப்பாலடித்தவர்களுக்கா உங்கள் ஓட்டு?

இராமனை செருப்பாலடித்தவர்களுக்கா உங்கள் ஓட்டு? என்று எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய போஸ்டர்களை அடித்து ஒட்டினார்கள்.

‘‘பெரியாரால் போயிற்று, திராவிடர் கழகத்தால் ஓட்டு போயிற்று’’ என்று தி.மு.க. தோழர்களே சில பேர் சங்கடத்தோடு சொன்னார்கள்.

தேர்தல் முடிந்து, வாக்குப் பெட்டியை எண்ணினார்கள். அதற்கு முன்பு சட்டப்பேரவையில் தி.மு.க. உறுப்பினர்களின் எண்ணிக்கை 138. ஆனால், இராமனை செருப்பாலடித்தவர்களுக்கா உங்கள் ஓட்டு? என்றெல்லாம் பிரச்சாரம் செய்த பிறகு, இன்னும் சொல்லப்போனால், அதற்கும், தி.மு.க.விற்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. வேண்டுமென்றே தி.மு.க.வை அந்தப் பிரச்சினையில் சம்பந்தப்படுத்தினார்கள்.

அந்தத் தேர்தல் முடிவு என்னாயிற்று என்றால், 184 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது.

கரண்ட்’ பத்திரிகையில் செய்தி வந்தது!

வடநாட்டு பத்திரிகையில் எழுதினார்கள்; “இங்கே ராம், ராம் என்று சொல்கிறார்கள். ஆனால், முழுக்க முழுக்க அதிலிருந்து வேறுபட்டு இருக்கிறதே தமிழ்நாடு. அதுபோன்று செய்தால், அதிக ஓட்டு வாங்கலாம் போலிருக்கிறதே” என்று ‘கரண்ட்’ பத்திரிகையில் செய்தி வெளியிட்டார்கள்.

கடப்பாரையைத் தூக்கிக் கொண்டு போய் எந்தக் கோவிலையாவது இடித்திருக்கின்றோமா?

ஆகவே, திராவிடர் கழகம் கடவுள் இல்லை என்று சொல்கின்ற இயக்கம்தான். ஆனால், இதுவரையில் நண்பர்களே, கடப்பாரையைத் தூக்கிக் கொண்டு போய் எந்தக் கோவிலையாவது இடித்திருக்கின்றோமா? என்பதை நன்றாக நினைத்துப் பாருங்கள்!

இன்னுங்கேட்டால், மூவாயிரத்து சொச்சம் கோவில்களில் குடமுழுக்கு நடத்தியிருக்கின்றோம் என்று ‘திராவிட மாடல்’ அரசு கணக்குச் சொல்கிறது. இதை நாங்கள்தான் எதிர்க்கவேண்டியவர்கள்; அதனால் மகிழ்ச்சியடையக் கூடியவர்கள் அல்ல நாங்கள்.

அதற்குக் காரணம் என்ன?

மக்கள் அந்த வேலையைக் கொடுத்தார்கள். அந்த வேலையை மிகச் சிறப்பாகச் செய்கிறார்கள். அவர்களுக்கு அந்த கடமை உண்டு. அந்த அடிப்படையில் செய்கிறார்கள்.

‘தமிழ், தமிழ்’ என்று சொல்லிப் பார்த்தார்கள்; ஆனால், அவர்களுடைய வித்தை தமிழ்நாட்டில் எடுபடவில்லை.

தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்த பெருமை முத்தமிழறிஞர் கலைஞருக்கும், தி.மு.க. ஆட்சிக்கும்தான் உண்டு!

2004 ஆம் ஆண்டு தமிழ் மொழி செம்மொழித் தகுதி பெற்றதால்தான், அதற்கடுத்த ஆண்டே சமஸ்கிருத மொழிக்கும் செம்மொழித் தகுதி கிடைத்தது.

ஒன்றியத்தில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்ததினால் கிடைத்த பெருமை அது.

இராமேசுவரம் தொகுதியில், இராமர்கூட அவர்களுக்குக் கைகொடுக்கவில்லை!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி அவர்கள் ரோடு ஷோ நிறைய நடத்தினார். தமிழ்நாட்டிற்கும் வந்து ரோடு ஷோ நடத்தினார். ரோடு ஷோ நடத்தியது மட்டுமல்ல, எல்லாக் கோவில்களுக்கும் போனார். சிறீரங்கம் கோவிலுக்குச் சென்றார்; அங்கேயும் ரோடு ஷோ நடத்தினார். இராமேசுவரம் கோவிலுக்குச் சென்று அங்கேயும் ரோடு ஷோ நடத்தினார். கடைசி நாளில், ‘தியானம்’கூட செய்தார். இராமேசுவரம் தொகுதியில், இராமர்கூட அவர்களுக்குக் கைகொடுக்கவில்லை. ஓரிடத்தில்கூட அவர்கள் வெற்றி பெறவில்லை. 40-க்கும் 40 இடங்களிலும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற கூட்டணி திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியாகும்.

தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியை, ஒன்றிய பா.ஜ.க. அரசு தர மறுக்கிறது. அதற்காக உச்சநீதிமன்றம் வரை செல்லக்கூடிய நிலையில் நாம் இருக்கின்றோம்.

அரசு உதவி பெறக்கூடிய பள்ளிகளுக்கும் காலைச் சிற்றுண்டித் திட்டம்

இன்றைக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் என்று சொன்னேன் அல்லவா!

இப்படிப்பட்ட சூழ்நிலையில், காலைச் சிற்றுண்டி திட்டத்தை முதலில் அரசுப் பள்ளிகளுக்கும், பிறகு கிராமப் பள்ளிகளுக்கும் படிப்படியாக நிறைவேற்றி, இன்றைக்கு அரசு உதவி பெறக்கூடிய பள்ளிகளிலும் அந்தத் திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினுடைய கொள்கை என்ன?

இதோ என்னுடைய கைகளில் இருப்பது அசல் மனுதர்ம புத்தகம்.

ஏன், தி.மு.க. ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்று நினைக்கிறார்கள்?

தி.மு.க. ஆட்சி என்றால், பெரியார் கொள்கைகள், திராவிடக் கொள்கைகள்தான்.

“அனைவருக்கும் அனைத்தும்’’, “எல்லோருக்கும் எல்லாம்’’ என்று சமூகநீதிக் கொள்கையைக் கடைப்பிடிப்பதினால்தானே!

“இன்னார்க்கு இன்னதுதான்’’ என்று சொல்வதுதான் மனுதர்மம்.

டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசமைப்புச் சட்டத்தை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் மனுதர்மத்தை வைக்கவேண்டும்.

அதற்காகத்தான் ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது.

கட்சியை அடமானம் வைத்துவிட்டு – நிர்ப்பந்தத்திற்குப் பயந்து போயிருக்கிறார்கள்!

இந்தப் பிரச்சினைகள் புரியாமல், அண்ணா பெயரில் கட்சி நடத்திக் கொண்டிருக்கின்றவர்கள்;  பா.ஜ.க.விடம் கட்சியை அடமானம் வைத்துவிட்டு, அவர்கள் சொல்கின்ற நிர்ப்பந்தத்திற்குப் பயந்து போயிருக்கிறீர்களே!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள முகவுரையில் உள்ள சோசியலிசத்தை எடுக்கவேண்டுமாம். சமதர்மம், சமத்துவத்தை எடுத்துவிட வேண்டுமாம்!

ஒரே மதம், ஹிந்து மதம்தான் இருக்கவேண்டுமாம்.

ஒரே கலாச்சாரம், ஆரியக் கலாச்சாரம்தானாம்!

மனுதர்மத்தை அமல்படுத்தவேண்டுமாம்.

இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் பதில், மனுதர்மம்தான்  இருக்கவேண்டுமாம்!

ஆர்.எஸ்.எஸ். இதழான ‘ஆர்கனைசர்’ பத்திரிகையில் எழுதினார்கள் – இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் பதில், மனுதர்மம்தான்  இருக்கவேண்டும் என்று.

‘திராவிட மாடல்’ ஆட்சி போய்விட்டால், மனுதர்மம்தான், இந்திய அரசமைப்புச் சட்டம் இருக்கின்ற இடத்தில் வரும். அப்படி மனுதர்மம் வந்தால் என்னாகும்?

உங்கள் பிள்ளைகள் படிக்க முடியாது.

எல்லாவற்றையும் ஆதாரத்தோடு சொல்லி பழக்கப்பட்டவர்கள்தான் திராவிடர் கழகத் தோழர்கள். அவதூறாகப் பேசமாட்டோம்; ஆதாரமில்லாமல் பேசமாட்டோம்.

‘‘ஹிந்து மதம் எங்கே போகிறது?’’

இதோ என் கைகளில் உள்ள புத்தகம் நானோ, தி.மு.க.காரர்களோ எழுதிய புத்தகம் அல்ல.

‘‘ஹிந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற தலைப்பில் அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய புத்தகம். நூறு வயதைத் தாண்டியவர் அவர்.

மனுதர்மத்தை இந்திய அரசமைப்புச் சட்டமாக வைக்கவேண்டும் என்று  ஏன் சொல்கிறார்கள்?

மனுதர்மம்தான் இருக்கவேண்டும் என்று வெளிப்படையாகச் சொல்கிறது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு.

பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள்; ஆனால், மனுஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்

இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்,

‘‘ஆரியர்கள் சிந்து நதி இமயலை என பள்ளத்தாக்குகளைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். நம்மூர் மலைச் சாலையைவிட அந்த மலைச்சாலை எவ்வளவு கடினமாக இருக்கும்?

நதிக்குக் கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் – இவற்றையெல்லாம் தாண்ட ஆரியப் பெண்களுக்குத் தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது.

வரும் பெண்கள் வரலாம் – வராதவர்கள் இங்கேயே இருக்கலாம். ஆப்கானிஸ்தானத்தை விட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்தபோது, கூட வந்த பெண்கள் கம்மி.’’

‘‘ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள். ஆனால், மனுஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.’’

வேதங்களை எல்லோராலும் படிக்க முடியாது;

“…. பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை ‘மனு’ பிளவாக்கியது. கூடவே இவர்களைத் தாண்டி ‘சூத்திரர்கள்’ என்ற பிரிவினை உருவாக்கி, அவர்களை வெறும் வேலைக்காரர்களாக ஆக்கியது மனு. ’’

பிராமணனுக்குத் தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மனு – சூத்திரனைப் பற்றி இப்படி எழுதியது.

“சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மாபதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை” இப்படிப் பேசுகிறது மனு.

(தொடரும்)

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *