‘ஒருவர் தன் பெயரின் துணைப் பெயரை மாற்றுவதால், அவருடைய ஜாதி மாறாது. ஒருவரை ஜாதியின் அடிப்படையில் அடையாளம் காணாமல் இருப்பதும், கவுரவத்துடன் வாழ்வதற்கான உரிமையாகும்’ என, புதுடில்லி உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
புதுடில்லியைச் சேர்ந்த ஒருவர், தன் பெயரின் துணைப் பெயராக ஜாதியின் பெயர் இருப்பதால் தினமும் பல பிரச்சினைகளை சந்தித்து வருவதாகக் கூறி, அதை மாற்றிக் கொண்டார். இதையடுத்து, தங்களுடைய பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சான்றிதழ்களில், தங்களுடைய தந்தையின் பெயரை மாற்றக் கோரி அவருடைய இரண்டு மகன்கள், சி.பி.எஸ்.இ., எனப்படும் ஒன்றிய கல்வி வாரியத்தில் விண்ணப்பித்தனர்.
இது ஏற்கப்படாததால், அவர்கள் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த உயர் நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: “தன் பெயரில் ஜாதியின் பெயர் துணைப் பெயராக இருப்பதால், மனுதாரர்களின் தந்தை பல பிரச்சினைகளைச் சந்தித்துள்ளார். இதையடுத்து தன் ஜாதி பெயரை மாற்றிக் கொண்டுள்ளார். இது பதிவு செய்யப்பட்டுள்ளது. தன் ஜாதியின் பெயரை மாற்றிக் கொண்டதால், அவருடைய ஜாதி மாறாது. அவருடைய மகன்களின் ஜாதியும் மாறாது. ஜாதியின் அடிப்படையில் அடையாளம் காணாமல் இருப்பதும், ஒருவர் கவுரவத்துடன் வாழ்வதற்கான உரிமையாகும்.
எனவே, மனுதாரர்கள் கேட்டபடி, அவர்களுடைய சான்றிதழ்களில் அவர்களுடைய தந்தையின் பெயரை மாற்றித் தர வேண்டும்.” இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஹிந்து மதத்தின் மிக மோசமான அடையாளம் ஜாதியே! ஆனால் ஜாதிக்கு ஏதாவது அடையாளம் உண்டா என்றால் அது கிடையவே கிடையாது.
இந்த ஜாதி பிறப்பின் அடிப்படையிலானது. இந்த ஜாதி என்பது குறிப்பிட்டவர்களுக்குப் பிறப்பின் அடிப்படையில் உயர்வையும், கூடுதல் உரிமையையும், சலுகைகளையும் அளிக்கிறது. அப்படிப் பலன் அடைபவர்கள் மூன்று விழுக்காடே உள்ள பார்ப்பனர்கள்தாம்.
பெரும்பாலான மக்கள் ஜாதியின் பெயரால் இழிவு படுத்தப்படுகின்றனர், உரிமைகள் மறுக்கப்படு கின்றனர்.
பெயர்கள் சூட்டப்படுவதிலும்கூட மங்கலம் – அமங்கலங்கள் உண்டு.
பிராமணனுக்கு மங்கலகரமான பெயர்களைச் சூட்ட வேண்டும் – சூத்திரனுக்குத் தாழ்வையும் தாஸன் என்ற தொடர் பெயராகவும் இருக்க வேண்டும் என்கிறது மனுதர்மம் (அத்தியாயம் 2 – சுலோகம் 31,32).
ஊமையன் என்றும், பிச்சைக்காரன் என்றும் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு பெயர் உண்டே தவிர எங்கேயாவது ஊமையன் அய்யங்கார், பிச்சைக்கார அய்யர் என்று கேள்விப் பட்டதுண்டா?
இந்தியாவிலே இந்த வர்ணபேதத்தை எதிர்த்து புத்தர் தொடங்கி, தந்தை பெரியார் வரை போராடி வந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பெயருக்குப் பின்னொட்டாக இருந்த ஜாதி இன்று நீங்கி இருக்கிறது. பெயருக்குப் பின்னால் ஜாதி பின்னொட்டைப் போட்டுக் கொள்வதற்கு வெட்கப் படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றால் அதற்குக் காரணம் தந்தை பெரியாரும் அவர்கள் கண்ட சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமுமே!
டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத் தவர்கள் சொல்லும் காரணம் ஜாதியின் பெயரால் பல பிரச்சினை களையும் இழிவையும் சந்திக்க வேண்டியிருந்தது என்பதால்தான்.
நீதிமன்றமும் அதனை ஏற்றுக் கொண்டது வரவேற்கத் தக்கது. அதே நேரத்தில் பெயரை மாற்றிக் கொள்வதால் ஜாதி மாறப் போவதில்லை என்ற தீர்ப்பிலும் உண்மை இருக்கவே செய்கிறது.
ஜாதியை சட்டப்படி ஒழிப்பதுதான் ஒரே வழி!
சுதந்திர நாடு என்று சொல்லிக் கொண்டு ஜாதியை அனுமதிப்பது கடைந்தெடுத்த வெட்கக்கேடே! ஜாதியை பாதுகாப்பதால் தான், சட்ட எரிப்புப் போராட்டத்தையும் திராவிடர் கழகம் நடத்தி மூன்று ஆண்டு காலம் வரை சிறைத் தண்டனையையும் ஆயிரக்கணக்கான தோழர்கள் ஏற்றனர் என்பது இங்கு சுட்டிக்காட்டத் தகுந்தது.
ஜாதி ஒழிப்பே சமத்துவ சமுதாயத்துக்கு அடையாளம் – மனிதத் தன்மையும் ஆகும்.