அதிமுக பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி இப்பொழுது படு குழப்பத்தில் இருப்பது உறுதியாகி விட்டது. நேற்று என்ன பேசினார் – அதற்கு முதல் நாள் என்ன பேசினார்? இன்று என்ன பேசுவார்? நாளைக்கு என்ன பேசுவார் என்பது எல்லாம் அவருக்கும் தெரியாது, அவர் கட்சியினருக்கும் தெரியாது!
அவ்வளவுக் குழப்பத்தில் அதிமுகவை அந்தரத்தில் தொங்க விட்டுள்ளார்.
திருமதி சசிகலாவிடம் தண்டனிட்டு, முதலமைச்சர் ஆனதும், கட்சியிலிருந்து திரு. ஓ. பன்னீர்செல்வத்தை ஓரங் கட்டியதும், அதன் பின் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் மக்கள் மத்தியில் அக்கட்சியின்மீது முகச் சுளிப்பை ஏற்படுத்தி விட்டது.
பொது மக்களையும் கடந்து, கட்சியினர் மத்தியிலும் கடும் அதிருப்தியும், உற்சாகமின்மையும் காணப்படுகிறது.
ஆளுமை மிக்க தலைமை என்பது கேள்விக் குறியாகி வி்ட்டது. அதிமுகவுக்காக தொலைக்காட்சிகளில் விவாதம் செய்பவர்கள்கூட திணறும் நிலைமை ஏற்பட்டு விட்டது.
2026 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மக்கள் நலன் சார்ந்ததாக இருப்பதால், ஆட்சியின் மீதான பொது அபிப்ராயம் நாளும் மேலோங்கி வருகிறது.
அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் ஒவ்வொருவர் வீட்டின் கதவையும் தட்டுகின்றன – அரசின் வளர்ச்சித் திட்டங்கள்!
மக்கள் தொகையில் கிட்டதட்ட சரிபகுதியாக இருக்கக் கூடிய பெண்கள் வளர்ச்சிக்கும், நலனுக்கும், உரிமைக்கும் தி.மு.க. ஆட்சியில் செய்துள்ள அளவோடு ஒப்பிட – இந்தியாவில் எந்த மாநிலமும் கிடையவே கிடையாது.
பெண்கள், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் என்று ஒட்டு மொத்தமான மக்கள் கட்சிக் கண்ணோட்டங்களுக்கு அப்பாற்பட்டு, ‘‘திராவிட மாடல்’’ அரசை உச்சி மோந்து பாராட்டுகின்றனர் – இது நமக்கான நமது அரசு என்று உரிமை கொண்டாடி வருகின்றனர்.
கூட்டணிக் கட்சிகளும் கொள்கை சார்ந்து ஓரணியில் நிற்பதால், தி.மு.க. ஆட்சிக்கும், கூட்டணிக்கும் இரட்டிப்பு மடங்கு பலம் கூடி விட்டது.
தமிழ் மண்ணைப் பொருத்தவரை மதவாத சக்திகளுக்கு கிஞ்சிற்றும் இடமில்லை என்ற உறுதிப்பாட்டை அஸ்திவார பலத்தோடு தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும், திராவிட இயக்கங்களும் உருவாக்கி வைத்துள்ள நிலையில், அந்த மதவாத ஹிந்துத்துவ பிஜேபியோடு அதிமுக கூட்டணி வைத்துள்ளதால், தடுக்கி விழுந்தவன் அரிவாள்மனையில் விழுந்த கதை’யாகி விட்டது அதிமுகவுக்கு!
பிஜேபியோடு கூட்டணி வைத்துள்ளதால், தவளையும், எலியும் ஒன்று சேர்ந்து ஆற்றைக் கடந்த கதையாகி விட்டது; பிஜேபி மீதுள்ள வெகு மக்களின் எதிர்ப்பை, வெறுப்பை, வலிய போய் தானும் வாங்கிக் கட்டிக் கொண்ட நிலைதான் அதிமுகவுக்கு.
அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த – மேனாள் அமைச்சர் திரு. ஜெயக்குமார் பிஜேபியோடு அதிமுக கூட்டணி வைத்துக் கொண்டதால் மைனஸ் 60 ஆயிரம் வாக்குகளோடு தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது என்று மனம் வெதும்பிக் குமுறவில்லையா?
2024 ஜனவரி 7ஆம் தேதியன்று மதுரையில் ‘மதச் சார்பின்மை வெல்லட்டும்!’ என்ற தலைப்பில் எஸ்.டி.பி.அய்., என்ற அமைப்பால் கூட்டப் பெற்ற மாநாட்டில் இதே எடப்பாடி பழனிசாமி என்ன பேசினார்?
‘ஆத்மார்த்த வடிவில் நாம் தொடர்ந்து சிறுபான்மை மக்களோடு இணக்கமாகப் பின் தொடர்ந்து வருகிறோம். பிஜேபியோடு கூட்டணி என்பது 2026 சட்டமன்ற தேர்தலிலும் சரி, 2029 மக்களவைத் தேர்தலிலும் சரி, கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று ஓங்கி ஒலித்து அடித்துப் பேசவில்லையா?
அந்த உணர்வு இப்பொழுது எங்கே போயிற்று? இடையில் நடந்தது என்ன? பிஜேபியோடு கூட்டணி என்ற இணைப்புக் கயிறுக்குள் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன?
இது சாதாரணமாக கடைக்கோடி மனிதனின் வரையிலான பேசு பொருளாகி விட்டதே!
சரி, அதுதான் போகட்டும், டில்லிக்குச் சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இரகசியமாக சந்தித்தது, அமித்ஷா சென்னை வந்து, எடப்பாடி பழனிசாமியோடு உரையாடியது, அதன் பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்.டி.ஏ.) அதிமுக இணைந்தது என்றும், வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக – பிஜேபி கூட்டணி ஆட்சி அமையும் என்றும், செய்தியாளர்களிடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினாரா இல்லையா? பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி நாற்காலியில் ஏதோ உட்கார்ந்திருந்தார் – அவ்வளவுதான் என்று சொல்லும் அளவுக்கு அதிமுக பலகீனப்பட்டுப் போனது ஏன்?
அதிமுக தலைமையில் ஆட்சி – அதில் பிஜேபி அங்கம் வகிக்கும் என்று ஒரு முறை இருமுறையல்ல – செல்லும் இடங்களில் எல்லாம் பிஜேபியின் அமித்ஷா சொல்லிக் கொண்டுதானே இருக்கிறார்.
இது – வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவைப் படுகுழியில் தள்ளி விடும் என்ற அச்சம் உலுக்க எடப்பாடி பழனிசாமி, தலை கீழாகப் புரட்டிப் பேசுகிறார்.
அதிமுக தலைமையில் தனித்த ஆட்சிதான் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சுருதி பேதம் செய்வது – அவரின் பரிதாப நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
இப்போது நிலை என்ன? திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை வருந்தி வருந்தி அழைக்கிறார். அவர்களோ அதிமுகவைக் கடுமையாக விமர்சிக்கின்றனர்.
ஏற்கெனவே கூட்டணியில் இருந்த கட்சிகளும், கூட்டணி கட்சியில் எங்களுக்கு இடம் வேண்டும் என்று கிடுக்கிப்பிடி போடுகின்றன.
இலையே போடவில்லை – அதற்குள் இலையில் ஓட்டை என்று சொல்லுவதா என்று ஏகடியம் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி.
எதிரிகள் கண்ணுக்கு எட்டிய தூரம் தெரியவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அம்மையார் சொன்னதுண்டு. இப்போது திமுக அதைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான் நிதர்சனம்!