திருமலை, ஜூலை 19 போலிக் கணக்குகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
திருமலை– திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஷியாமளாராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரியின் பெயரில் அடையாளம் தெரியாத நபர்கள் முகநூலில் போலி கணக்கை உருவாக்கி, பக்தர்களிடம் இருந்து பணம் கோரி செய்திகளை அனுப்புவதாக தகவல்கள் வருகின்றன.
இது, முற்றிலும் மோசடியான செயலாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள் இவ்வாறான போலி கணக்குகளை நம்ப வேண்டாம். யாருக்கேனும் சந்தேகப்படும்படியாக செய்திகள் வந்தால், தேவஸ்தான பறக்கும் படை பிரிவுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
மேலும் பக்தர்கள் www.tirumala.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது தேவஸ்தான அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகள் மூலம் வரும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும். இதர போலி கணக்குகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்து, பவுத்தர், சீக்கியர்களை தவிர பிறரின் பட்டியல் ஜாதி சான்றிதழ் பறிக்கப்படும்
– மகாராட்டிர முதலமைச்சர் பட்னாவிஸ் அறிவிப்பு!
மும்பை, ஜூலை 19 இந்து, பவுத்தம், சீக்கியம் ஆகிய மதங்க ளைத் தவிர வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் பட்டியல் ஜாதி (SC) சான்றிதழ் பெற்றிருந்தால், அவை ரத்து செய்யப்படும் என மகாராட்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
அத்தகைய சான்றிதழ்கள் மூலம் அரசு வேலைகள் அல்லது ஆதாயங்கள் பெற்றிருந்தால், அவை செல்லாததாக்கப்படும் என்றும், பணப் பலன்கள் இருந்தால் அவை வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பட்டியல் ஜாதி இடஒதுக்கீடு இந்துக்கள், பவுத்தர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்ற உச்ச நீதிமன்றத்தின் 2024 தீர்ப்பை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கட்டாய மதமாற்றங்களைத் தடுக்க வலுவான சட்ட விதிகள் கொண்டுவரப்படும் என்றும் பட்னாவிஸ் கூறினார். வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.