கேள்வி: திருத்த வேண்டியது எது? திருத்த முடியாதது எது?
பதில்: திருத்த வேண்டியது காங்கிரஸ். திருத்த முடியாதது தி.மு.க.
‘துக்ளக்’, 9.7.2025,
பக்கம் 29
நமது பதிலடி: காங்கிரஸ் தலைவராக இருந்தவர் காமராசர்; காமராசரை ‘துக்ளக்’ குருமூர்த்தி புகழ்ந்து தள்ளிக் கொண்டு இருக்கிறார்.
அவர் ஒன்றை மறந்துவிட்டார் போலும்! உடம்பெல்லாம் மூளை என்று இராஜகோபாலாச்சாரியாரை ‘துக்ளக்’ பார்ப்பனக் கூட்டம் தலையில் தூக்கி வைத்துக் கரகாட்டம் ஆடுகிறதே, அந்த ஆச்சாரியாரை (ராஜாஜியை) அரசியலிலிருந்து துண்டைக் காணோம், வேட்டியைக் காணோம் என்று விரட்டியடித்தவர் காமராசர் என்பதை மறந்துவிட்டனரா?
‘‘எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். யார் பேசுகிறார்கள் தெரியுமா? இதைக் கூர்ந்து கவனிக்கவேண்டும்.
கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு, ஏழை மக்களை மேலும் ஏழையாக்குபவர்களே இதைக் கூறுகிறார்கள். நீ ஏழையாய் இருப்பது, இருக்கவேண்டும் என்பது உன் தலையெழுத்து, கடவுள் கட்டளை என்று கூறி, ஏமாற்றுகிறார்கள். தங்கள் நிலையை உயர்த்திக் கொண்டே இருக்கும் சூழ்ச்சி இது.
அந்தத் தலையெழுத்தை அழித்து எழுதுவோம்!
கடவுள் பெயரைச் சொல்லி, உங்களை ஏமாற்றுகிறவர்கள்தான் என்னைக் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்று சொல்லுகிறார்கள்.
ரஷ்யாவிலும், அமெரிக்காவிலும் செல்வம் செழித்து வருகிறது. அங்கு இவையெல்லாம் குறுக்கிடவில்லை. அந்த நாடுகளைப் போன்று நம் நாட்டிலும் செல்வம் பெருகவேண்டுமானால், கடவுள் நம்பிக்கை இருந்தால் மட்டும் போதாது. மாறாகப் பாடுபடவேண்டும், அதிகம் உழைக்கவேண்டும். சோம்பேறித்தனமாக இருந்தால் பயன்படாது. கடவுளை எண்ணிக் கைகட்டிக் கொண்டிருந்தால் எப்படி சாப்பிடுவது?’’
– இவ்வாறு பேசியவர்தான் காமராசர்! எங்குப் பேசினார்? இராயக்கோட்டையில் (26.4.1966).
அதைத்தான் இன்று எதிரொலிக்கிறார் காங்கிரஸ் இளந்தலைவர் ராகுல் காந்தி – இதனைத் திருத்தவேண்டும் என்கிறார் ‘துக்ளக்’ குருமூர்த்தி அய்யர்வா(ல்)ள், புரிகிறதா?
அடுத்து, திருத்த முடியாதது தி.மு.க. என்று எழுதுகிறது ‘துக்ளக்’ – தி.மு.க.வுக்கு இதைவிட உயர்ந்த நற்சான்றிதழ் இருக்கவே முடியாது. ஆரியர் – திராவிடர்பற்றி தி.மு.க.தானே பேசுகிறது – ‘முரசொலி’தானே எழுதுகிறது!
புரிகிறதா, பூணூல் ஏட்டின் புத்தியும், புலம்பலும்!
– மயிலாடன்