ஆசிரியர் விடையளிக்கிறார்

viduthalai
5 Min Read

கேள்வி 1: ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் கள்ளப் பணமும், அதிகாரமும் கையில் இருப்பதால் வாக்காளர் பட்டியலில் முறைகேடாகத் திருத்தம் செய்ய அரசமைப்புச் சட்டம் அனுமதிக்குமா?

– இரா.முல்லைக்கோ, பெங்களூரு

பதில் 1: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் சிறப்பாகச் சொல்வதுபோல, தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசினுடைய ஓர் அங்கமாகவும், அதேநேரத்தில், வாக்குகளைத் திருடுவதற்கான ஓர் அமைப்புமாகவும் செயல்படுகிறது என்று சொல்லியிருக்கின்றார். இந்த நிலையில், நியாயத்தை எங்கிருந்து எதிர்பார்க்க முடியும்?

• • • •

கேள்வி 2: டெக்சாஸில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்படும் தனியார் இறுதிச் சடங்கு நிறுவனம் ஒன்று, விண்கலம் மூலம் அஸ்தியைக் கொண்டு சென்று விண்வெளியில் வைத்திருந்து மீண்டும் பூமிக்குக் கொண்டு வரும் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாகவும், இதன் மூலம் 166 பேரின் அஸ்தியுடன் விண்கலத்தை ஜூலை 8 ஆம் தேதி திட்டமிட்டபடி  வானில் செலுத்திய போது அது வெடித்து பசிப்பிக்கடலில் விழுந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாகச் செய்தி வெளிவந்துள்ளதே?

மன்னை சித்து, மன்னார்குடி – 1.

பதில் 2: ‘இன்றைய நவீன காலத்திலும், இவர்கள் இன்னமும் அஸ்தி காலத்திலேயே இருக்கிறார்கள்.’ அதை வைத்துக்கொண்டு மூடநம்பிக்கைகளைப் பரப்புவதற்காகத்தான் முயற்சிக்கிறார்களே தவிர, வேறொன்றும் கிடையாது.

விண்வெளிக்குச் சென்று, மேலுலகத்தைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறார்களா? அங்கே யாரையாவது சந்தித்தார்களா?

• • • •

கேள்வி 3: மக்கள் நலன் கருதி கோயில் சொத்துக்களைக் கல்வி, சுகாதாரத்திற்கு பயன்படுத்துவதற்குச் சில அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பது சரியா?

க.துரை,  கண்ணதாசன் நகர்

பதில் 3: பார்ப்பனர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். காலங்காலமாக அவர்கள் கொள்ளையடித்துக் கொண்டு வந்ததை எதிர்த்துத்தான், இந்து சமய அறநிலையத் துறையை உருவாக்கி பனகல் அரசர் அவர்கள் நீதிக்கட்சி ஆட்சியில் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

அதைத் தொடர்ந்து அந்த நிலை, பல மாநிலங்களிலும் வந்துவிட்டது. இந்த நிலையில், இப்போது அவர்கள் கூறுவது எவ்வளவு தவறு என்பதை அவர்களே உணர்ந்து கொள்வார்கள்.

சட்டப்படிதான் ‘திராவிட மாடல்’ அரசு நடந்துகொண்டிருக்கின்றது. இந்து சமய அறநிலையத்  துறைச் சட்டமும் அதற்குச் சரியாக இருக்கிறது.

எனவே, மீண்டும் மீண்டும் இதுபோன்ற கோரிக்கைகளை அவர்கள் எழுப்புவது, மக்கள் மத்தியிலே பக்தியைக் காட்டி ஓட்டு வாங்கவேண்டும் என்கின்ற உள்நோக்கத்தோடுதான். ஆனால், அது தமிழ்நாட்டில் எடுபடாது.

• • • •

கேள்வி 4: பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள் மூலம் பகுத்தறிவு விதைகளைப் பாரெங்கும்  பரப்பும் முயற்சியில் வெற்றிக்கனி பறிப்பது எப்போது??

கி.மணிவண்ணன், சென்னை

பதில் 4:  இப்போதே நடந்துகொண்டிருக்கின்றது. தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது ஒரு நல்ல தொடக்கம். இது கொள்கைப் பட்டறை. அதில் யாரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொண்டு நடத்த முடியாது.

இந்தக் கொள்கைகளை உணரக்கூடியவர்களும், உள்வாங்கக் கூடியவர்களும், அதைச் சிறப்பான வகையில் மக்கள் மத்தியில், இளைஞர்கள் மத்தியில் எடுத்துச் சொல்லக்கூடிய வாய்ப்பை உருவாக்கவேண்டும்.

• • • •

கேள்வி 5: பாலங்கள் இடிந்து விழுதல், ரயில் விபத்துகள், விமான விபத்துகள் ஆகியவைக்கு சீர்கேடான நிருவாகத்தைத் தரும் பி.ஜே.பி. ஆட்சிதானே பொறுப்பு?

இரா.ம.ரமேசு, செம்பியம்

பதில் 5: கல்வி வள்ளல் காமராசர் ஒரு பழமொழி சொல்வார். ‘என் வீட்டில் நடந்தால், அது இழவு! ‘உன் வீட்டில் நடந்தால், அது திருமணம்!’

• • • •

கேள்வி 6: அறிவியல் வளர்ச்சியில் ஒரு மைல் கல்லான செயற்கை நுண்ணறிவால் (AI) மனித மூளை மந்தமாகும் என்கிறார்களே, அது மனித குலத்துக்கு நன்மையா? தீமையா?

த.நெடுஞ்செழியன், சென்னை-23

பதில் 6: மனித குலத்திற்கு செயற்கை நுண்ணறிவு என்பது மந்தமாகாது; சொந்தமாகும். அதன் மூலமாக அறிவுக்கும், நமக்கும் பந்தம் அதிகமாக ஏற்படும்.

• • • •

கேள்வி 7: மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக, சோதனை முறையில் சில வகுப்பறைகளில்  ‘ப’ வடிவில் மாணவர்களுக்கு இருக்கைகள் அமைத்து பாடங்களை நடத்தும் நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ளதை  கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் வரவேற்று மகிழ்வது ‘திராவிட மாடல்’ அரசின் தொலைநோக்குப் பார்வைக்குக்  கிடைத்த அங்கீகாரமாக எடுத்துக் கொள்ளலாமா?

– கோ.நண்பன், நன்னிலம்.

பதில் 7: ‘திராவிட மாடல்’ ஆட்சியில் ஒவ்வொரு நாளும் அதனுடைய  மகுடத்தில், குறிப்பாக கல்வி, மருத்துவம் போன்ற பல துறைகளில், சாதனைகளுக்குமேல் சாதனைகளாக வைரக் கற்கள் பதியப்படுகின்றன. அதில், இது குறிப்பிடத்தகுந்த நல்ல சோதனை முயற்சி.

காலைச் சிற்றுண்டி எவ்வளவு முக்கியமோ, அதுபோல, கவனத்தை ஈர்ப்பதும் மாணவர்களுக்கு மிக முக்கியமானதாகும். அதற்கு இதுபோன்ற சோதனை முயற்சிகளைச் செய்து, சரியானவற்றைப் பரவலாக்கலாம்.

• • • •

கேள்வி 8: மக்களை ஏமாற்ற மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விதிகளைத் தளர்வு செய்திருப்பதாக தி.மு.க. அரசு மீது எடப்பாடி பழனிசாமி அபாண்டமாக குற்றம் சாட்டியிருப்பதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?

– கி.மல்லிகா, மாங்காடு.

பதில் 8: ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேச்சு பேசும் எடப்பாடியார், ‘‘முதலில், மகளிர் உரிமைத் தொகை கொடுக்க முடியுமா?” என்று கேட்டார். ‘திராவிட மாடல்’ ஆட்சி அதனைச் செய்து காட்டியவுடன், ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ரூ.1500 கொடுப்போம்” என்று சொல்லவேண்டிய நிலையில் இருப்பவர்கள், இப்படிப் பேசுவது எவ்வளவு பெரிய மோசடி என்பதை வாக்காளர்கள் தெளிவாக உணருவார்கள்.

• • • •

கேள்வி 9: தஞ்சையில் புதிதாக கட்டப்பட்டு வருகின்ற கோவிலான அங்காள முனீஸ்வரனுக்கு, 216 கிலோ எடையில் 27 அடி உயரத்தில் செய்யப்பட்ட அரிவாள் கிரேனில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டதை கண்ணுற்ற மக்கள் தம் மனதில், என்ன எண்ணுவார்கள்?

– கு.குப்புசாமி, கும்பகோனம்.

பதில் 9: ‘‘எல்லாம் கிரேன் செயல்; கடவுள் செயல் அல்ல’’ என்பதைத் தெரிந்துகொள்வார்கள்.

• • • •

கேள்வி 10: “75 வயதானதும் மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும்” என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசி இருப்பதை பிரதமர் மோடி ஏற்றுக்கொள்வாரா?

– த.திருநாவுக்கரசு, திருநெல்வேலி.

பதில் 10: மோகன் பகவத்திற்கு என்ன வயது என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருப்பார். அவ்வளவுதான்! தொடக்கத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ். தலைவரும், மோடியும் எதிரும், புதிருமாக இருக்கிறார்கள். எனவே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு வேறொரு தலைவரைக் கொண்டுவர முயற்சிப்பார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *