தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும், மத நம்பிக்கையின் பெயரில் மக்களை ஏமாற்றி, பகுத்தறிவை மழுங்கடித்து, பயத்தை விதைத்து ஆதாயம் தேடும் போலிச் சாமியார்களின் தொல்லைகள் தொடர்ந்து நீடிக்கின்றன. ஜோதிடம், அருள்வாக்கு, தாயத்து, மந்திரம், ஏவல், பில்லி சூனியம், வசியம், ஆவியுலகத் தொடர்பு எனப் பல முகங்களுடன் இவர்கள் மக்களை மயக்கி, தன்னம்பிக்கையை இழக்கச் செய்கின்றனர். இதனால், மக்கள் தங்கள் பகுத்தறிவு எனும் முதுகெலும்பை பயன்படுத்தாமல், எதிலும் பயந்து, சாமியார்களை அணுகி முடிவெடுக்கும் அவலநிலை உருவாகியுள்ளது.
இந்தப் போலிச் சாமியார்களின் தொல்லை புதிதல்ல. 1939ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் வெளியான ‘போலிச் சாமியார்’ என்ற திரைப்படம் இதற்கு ஒரு சான்று. என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் டி.ஏ.மதுரம் ஆகியோர் நடித்த இந்தப் படம், அன்றைய காலகட்டத்தில் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மக்களிடையே இத்தகைய மோசடி சாமியார்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. ஆனால், இன்றளவும் இத்தகைய மோசடிகள் தொடர்கின்றன.
புதிய போலிச் சாமியார்கள் தோன்றும்போது, அவர்களை முதலில் ஆதரித்து, தூக்கி வைப்பவர்கள் பார்ப்பனராகவே இருக்கின்றனர். இதன் மூலம், எளிய மக்களிடையே இவர்களை எளிதாகக் கொண்டு சேர்க்க முடியும் என்ற சூழ்ச்சி இதன் பின்னணியில் உள்ளது.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, பல்வேறு மோசடிக் குற்றச்சாட்டுகளில் சிக்கிய நித்யானந்தா. இவர் நாட்டை விட்டு தப்பி, மேற்கு அட்லாண்டிக் பகுதியில் உள்ள தீவுக் கூட்டத்தில் ஆடம்பரமாக வாழ்ந்து வருகிறார். சமீபத்தில், நித்யானந்தாவை ஆதரிக்கும் கூட்டம் நீதிமன்றத்தையே ஆக்ரமித்தது, அப்படி வந்தவர்களில் பெரும்பாலும் உயர்ஜாதி சாமியாரிணிகள் தான்
வட மாநிலங்களிலும் இதேபோன்ற போலி சாமியார்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குர்மீத் சிங், அசராம் பாபு, ராதே மா, ஓம் பாபா, சச்சிதானந்தகிரி, நிர்மல்ஜித் சிங், இச்சாதாரி பீமானந்த், ராம்பால் உள்ளிட்ட 14 பேர் இதில் அடங்குவர். இவர்கள் மக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி, மோசடியில் ஈடுபட்டு, சமூகத்தில் பயத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளனர்.
போலி சாமியார்களின் முகமூடியை அகற்றுவதற்கு, மக்கள் பகுத்தறிவையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மத நம்பிக்கையின் பெயரில் மக்களை ஏமாற்றுவோரை அடையாளம் காண்பது, சமூக விழிப்புணர்வு மற்றும் கல்வியின் மூலமே சாத்தியமாகும். அந்தக்கல்வி சாமானியர்களின் கைகளில் சென்று சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஆர்.எஸ்.எஸ். அரசியல் பிரிவான பாஜக கல்வித்தடை போட்டு புதிய கல்விகொள்கை போன்றவற்றை கொண்டுவந்துள்ளது.