ஒரு முக அறுவை மருத்துவரின் முத்தான அனுபவங்கள் (அறிவழகன்) – 11 “சிதைந்த கண் சுற்றெலும்பை சீராக்கிய மருத்துவம்”

viduthalai
7 Min Read

மருத்துவர்
இரா.கவுதமன்
இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி

மேகக் கூட்டங்கள் மறைக்காத தெளிந்த இரவு நேர வானம். நீல நிற வெல்வெட் துணியில் வைரங்களை இறைத்தாற்போல் கண் சிமிட்டும் நட்சத்திரக் கூட்டம். ‘என் தன்னொளியை எதனாலும் வெல்ல முடியாது’ என்று பெருமை பொங்க பூமியைப் பார்த்து சிரிக்கும் முழுநிலவு. நேரம் இரவு பத்து மணி. தொலைக்காட்சியில் இனிமையான 60களின் கவியரசு கண்ணதாசனின் பாட்டுக்கு (“நதியெங்கே போகிறது? கடலைத்தேடி”) சிவாஜியும், சரோஜாதேவியும் வாயசைத்துக் கொண்டிருந்தனர். “தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?”என்ற நூலை வாசித்துக் கொண்டிருந்தேன்.

இரவு மணி 10.00. திடீரென அலைபேசி அழைப்பு. நான் வழமையாக செல்லும் மருத்துவமனையில் (உதகை) இருந்து அழைப்பு. அந்த மருத்துவமனை “பணி மருத்துவர்” (Duty Doctor) அழைத்தார். “சார் குட் ஈவினிங், ஒரு பைக் ஆக்சிடென்ட். 18 வயது வாலிபர் மூஞ்சிலே இரத்தம் ஒழுக, வந்திருக்கிறார். நீங்க வர்ரீங்களா?” என்று கேட்டார். நான், “வாறேங்க. நான் வர அரை மணி நேரம் ஆகும். அதற்குள் முதலுதவி செய்யுங்க. தலையிலே ஒன்னும் அடிபடலியே?” என்று கேட்டேன். “இல்ல சார், இடது பக்கம் கண்ணுக்கு மேலத்தான் அடிபட்டு இரத்தம் வந்துக்கிட்டிருக்கு. இடதுகண்ணைச் சுற்றி வீங்கியிருக்கு. கண்ணிலே இருக்கும் வெண்பகுதி, சிகப்பா இருக்கு, நெற்றிப் பகுதியிலே வலி அதிகமாயிருக்குன்னு நோயாளி சொல்றாரு” என செவிலியர் (அருகில் இருந்தவர்) கூறினார்.

கட்டுரை, ஞாயிறு மலர்

துண்டு,துண்டாக உடைந்துள்ள கண் மேல் சுற்றெலும்பு

நான் பணி மருத்துவரிடம், “நோயாளி உணர்வோடு இருக்கிறாரா? இல்ல மயக்கமா (unconscious) இருக்கிறாரா?” என வினவினேன். அவர், “நோயாளி உணர்வோடுதான் இருக்கிறார்” என்று பதில் கொடுத்தார். அவரிடம் வலியைக் குறைக்கும் ஊசியையும், வில்வாத நோய்த் (Tetanus) தடுப்பு ஊசியும் போடச் சொல்லி, நான் அரை மணி நேரத்தில் வருவதாகக் கூறி, ஆடைகளை  மாற்றிக் கொண்டு மகிழுந்தில் புறப்பட்டேன்.

அரை மணி நேரத்தில் உதகையிலிருக்கும் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டேன். நேராக நோயாளி இருக்கும் அவசரப் பிரிவுக்கு (Emergency) சென்றேன். நோயாளியின் இடதுபுறம் கண்களுக்கு மேல் கட்டுப் போடப்பட்டு படுத்திருந்தார். கட்டிலிருந்த பஞ்சு இரத்தம் தோய்ந்து ஈரமாக இருந்தது. கண்ணைச் சுற்றி நல்ல வீக்கம், கண்ணை பாதிதான் திறக்க முடிந்த நிலையில் இருந்தார். மேல் கண் இமையில் அதிக வீக்கம் இருந்தது. நோயாளி முழு உணர்வுடன் இருந்தார். வயது 19 என்று அவரே சொன்னார். பெயர் கேட்டேன். அறிவழகன் என்று சொன்னார். எப்படி கீழே விழுந்ததாகக் கேட்டேன். பைக்கில் சென்றபோது ஒரு திருப்பத்தில் நாய் ஒன்று திடீரென்று குறுக்கே வந்ததால் பைக் சாய்ந்து கீழே விழுந்து விட்டதாகவும், அந்த இடத்தில் இருந்த ஒரு பெரிய கல்லில் நெற்றி மோதியதாகவும் தெளிவாகச் சொன்னார்.

கட்டுரை, ஞாயிறு மலர்

உடைந்த கண் சுற்றெலும்புகளை இணைத்துப்
போடப்பட்டுள்ள ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கம்பிகள்

உடலின் மற்ற இயக்கங்கள் நாடித் துடிப்பு, இரத்த அழுத்தம், மூச்சின் அளவு, உயிர் மூச்சுக் காற்றின் அளவு (Pulse, Blood Pressure, Respiratory rate, SPO2) ஆகியவை இயல்பான நிலையில் இருப்பதைப் பார்த்தேன்.உடலின் வேறு பகுதிகளில் ஏதேனும் காயங்கள் இருக்கிறதா என்று ஆய்வு செய்தேன். கைகளில் லேசான சிராய்ப்புக் காயங்கள் தவிர வேறு பெரிய காயங்கள் என்று எதுவுமில்லை. பிறகு அடிபட்டுக் கட்டுப் போட்டிருந்த பகுதியில் இருந்த கட்டை மெதுவாக அகற்றினேன். கண்ணின் (இடது) மேல் புறம் காயம் இமைகளுக்கு சற்று மேல் ஒரு நீண்ட காயம் இருந்தது. வெட்டுக் காயம் (Incised wound) போல் இருந்த அந்த காயத்தின் தோலை சற்று நீக்கி கண் சுற்று எலும்பைத் தடவி ஆய்வு செய்தேன்.

கட்டுரை, ஞாயிறு மலர்

தையல் போடப்பட்ட அடிபட்ட பகுதி

மேல்புற சுற்றி எலும்பு பல துண்டுகளாக உடைந்திருப்பது தெரிந்தது. அறுவை மருத்துவம்தான் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். அறிவழகனின் அப்பா, அம்மா ஆகியோர் அவசரப் பகுதி அறைக்கு வெளியே நின்றிருந்தனர். அவர்களிடம் நோயின் நிலையை விளக்கி, அதைச் சீராக்க அறுவை மருத்துவம்தான் ஒரே வழி என்று கூறினேன். அந்த அம்மா, “சார், என் பையன் நல்லா ஆனா போதும். எப்படியாவது குணப்படுத்திக் கொடுங்க” என்று கண்ணீரோடு கூறினார். அவர் அப்பா கவலைதோய்ந்த முகத்தோடு அருகில் நின்று கொண்டிருந்தார். “முதல்ல ஒரு CT எடுக்கணும்மா, அதில் மண்டை ஓட்டில் ஏதாவது எலும்பு முறிவு இருக்கான்னு பாக்கணும். மூளையில் ஏதாவது பாதிப்பு இருக்கான்னு பாக்கணும். அதுக்கப்புறம்தான் என்ன மருத்துவம் என்று முடிவு செய்யணும்” என்று கூறினேன். அவருடைய அப்பா, “சார், கண்ணுக்கு ஒன்னும் ஆபத் தில்லையே” என்றார். நான் மற்ற ஆய்வுகள் செய்தபொழுதே பார்வையையும் ஆய்வு செய்திருந்தேன். அவரிடம், “கண்ணிலெல்லாம் பிரச்சினை இல்லை. பார்வை நார்மலாத்தான் இருக்கு. பயப்பட வேண்டாம்” என்று கூறிவிட்டு, நோயாளியின் தலைப் பகுதியையும், முகத்தையும் CT எடுக்க அனுப்பினேன். CT எடுத்து, முடிவுகள் வருவதற்குள் இரத்தம், சிறுநீர் ஆய்வுகள் செய்யப்பட்டன. அரை மணி நேரத்தில் CT படங்கள் வந்தன. அவற்றில் முகத்தின் இடது கண் சுற்று எலும்பு பல துண்டுகளாக உடைந்திருந்தது தெளிவாகத் தெரிந்தது. அந்தப் பகுதி தவிர மண்டையோட்டில் எந்த எலும்பு முறிவும் இல்லை. மூளையிலும் எந்த பாதிப்பும் இல்லை என்பதும் உறுதியானது. வழமையான இரத்தம், சிறுநீர் போன்ற ஆய்வுகளும் முடிந்து முடிவுகள் வந்தன. அவை இயல்பு நிலையில் இருந்தன.

அறுவை மருத்துவத்திற்கு முன் செய்ய வேண்டிய ஆய்வு முடிவுகள் முழுவதும் வந்து சேர்வதற்குள் மணி இரவு பன்னிரெண்டு ஆகிவிட்டது. மயக்குநருக்கு வரச்சொல்லி வேண்டினேன். அவரும் பத்து நிமிடங்களில் வந்து விட்டார். அறுவை மருத்துவம் துவக்கினேன். ஏற்கெனவே அடிபட்ட காயத்திலேயே கீறி பெரிதாக்கி, சதைப் பகுதிகளை விலக்கி, அடிபட்ட எலும்புப் பகுதியை அடைந்தேன். கண் சுற்று எலும்பின் மேல் புறம் எலும்பு பல துண்டுகளாக உடைந்திருந்ததைக் கண்டேன்.

இந்த எலும்பு மண்டை ஓட்டின் மேல் முன்பகுதி (Frontal bone) எலும்பு – மூளையின் முன் பகுதியையும், கண்ணையும் பாதுகாக்கும் எலும்பு. பொதுவாக இந்த எலும்பு முறிவுக்கு ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பட்டைப் போட்டு, எலும்புகளை இணைத்து (Fixation), எலும்பின் உடைந்த பகுதிகள் நகராமல் (Immobilisation) செய்வதுதான் மருத்துவம், அல்லது ஸ்டெய்ன்லெஸ் கம்பி போட்டுக் கட்டி எலும்புகளை இணைப்போம். எலும்புகள் பல துண்டுகளாக உடைந்திருந்ததால் ஸ்டீல் பட்டையைப் போட்டு மருத்துவம் செய்வது கடினம் என்பதால் கம்பி போட்டு இணைப்பது என்று முடிவெடுத்தேன். கம்பி போட்டுக் கட்டுவது மிகவும் சிக்கலான ஓர் அறுவை மருத்துவம். அடிபட்ட எலும்புப் பகுதியில் ஒரு துளை போட வேண்டும். அதே போல் உடையாத கண் சுற்று எலும்பில் ஒரு துளை போடவேண்டும். துளைகள், கண் சுற்று எலும்பின் வெளிப் புறத்திலிருந்து, கண் இருக்கும் உட்புறம் வரை செலுத்த வேண்டும். துளையிடும் கருவி ஒரு நிமிடத்திற்கு 25,000 முதல் 40,000 சுற்றுகள் சுற்றக் கூடியது. உட்புறத் துளை கண் எலும்பின் உட்புறம் வரும்போது மிகவும் எச்சரிக்கையாக, பாதுகாப்பாகச் செய்ய வேண்டும். சற்று தவறினாலும் அந்த வேகத்தில் இயங்கும் துளையிடும் கருவி, கண்ணைத் துளைத்து விடும் ஆபத்து ஏற்பட்டு விடும். இதனால் கண் பார்வையே போகும் நிலை கூட ஏற்பட்டு விடும்.

மிகவும் ஆபத்தான இந்த மருத்துவத்தைத்தான் நோயாளிக்கு செய்ய முடிவெடுத்தேன். மயக்குநர் தன் பணியைத் துவக்கினார். மயக்க மருந்து கொடுக்கும் முன் மருந்துகள் நோயாளிக்கு செலுத்தப்பட்டன. மூச்சுக் குழாய்க்குள், வாய் வழியே மயக்க மருந்துக் குழாய் செலுத்தப்பட்டிருந்ததால் முகத்தின் மேல் பகுதியில் மருத்துவம் செய்வது சற்று எளிதாக இருந்தது. திட்டமிட்டபடியே திறந்திருந்த அடிபட்ட எலும்புப் பகுதியை எச்சரிக்கையாக இயல்பான நிலையில் பொருத்தினேன் (Reduced). பின் அதிக எச்சரிக்கையோடு கண் சுற்று எலும்பின் வெளிப்புறத்திலிருந்து, கண்குழியின் உட்புறம் வரை, கண்ணை எச்சரிக்கையாக, பாதுகாத்து துளைகள் போட்டேன். பின் மெல்லிய ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் கம்பிகளை (2 கம்பிகள்) அந்தத் துளைகள் வழியே, செலுத்தினேன். கண் குழியின் உட்புறம் அந்தக் கம்பிகள் வரும் பொழுது, தப்பித் தவறி கூட கண்ணை குத்தி விடக் கூடாது. கூர்மையான அந்த கம்பிகள் கண்ணையே குருடாக்கிவிடும். கண் குழியிலிருந்து மெதுவாக அந்தக் கம்பிகளை வெளியே இழுத்து ஏற்கெனவே பொருத்தப் பட்டிருந்த எலும்புகளை இறுக்கி இழுத்துக் கட்டினேன் (Fixation). இப்பொழுது உடைந்த எலும்புகள் இயல்பு நிலைக்கு மீண்டும் சீராகப் பொருத்தி விட்டன.

பின் சதைகளை இணைத்து, கீறல் போட்டத் தோல் பகுதியை தையல் போட்டு இணைத்தேன். நோயாளியின் இயக்கம் இயல்பான நிலையில் இருப்பதை ஆய்வு செய்து, மயக்க மருந்துக் குழாய், மூச்சுக் குழாயிலிருந்து அகற்றப்பட்டது. நோயாளி படுக்கைப் பகுதிக்கு மாற்றப்பட்டார். ஒரு வாரத்தில் தையல்கள் அகற்றப்பட்டது. கண்ணில் அறுவை மருத்துவத்தால் பார்வைக் கோளாறு ஏதும் உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது. கண்ணில் குறைபாடுகள் இல்லை. நோயாளி பாதுகாப்புடன் வழிமுறைகள் அறிவுறுத்தலோடு வீட்டிற்கு அனுப்பி வைக்கப் பட்டார்.

அளவிறந்த மகிழ்ச்சியுடன் அறிவழகனும், அவரின் பெற்றோரும் சென்ற நெகிழ்ச்சியான தருணம் என்னையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்று சொல்லவும் வேண்டுமா? இதைப் போன்ற அறுவை மருத்துவம் இதுவரை நான் ஆயிரத்திற்கு மேல் செய்துள்ளேன். “நம்மால் முடியாதது, யாராலும் முடியாது! யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்” என்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யாவை நன்றியோடு நினைக்கிறேன்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *