இந்தியாவில் ஹிந்துத்துவ குழுக்களின் நடவடிக்கைகள் சமீப காலமாக சர்ச்சையை கிளப்பி வருகின்றன. குறிப்பாக இஸ்லாமியர்களின் இறைச்சி கடைகளை குறிவைத்து அவர்களின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது கார்ப்பரேட் உணவு நிறுவனங்களும் இந்த தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த உலகப்புகழ் பெற்ற கோழி இறைச்சி உணவு நிறுவனம் KFC. உலகெங்கிலும் பல கிளைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனம், இந்தியாவிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. கோழி உள்ளிட்ட இறைச்சி உணவுகளை சுவையுடன் விற்பனை செய்வதில் KFC பிரபலம்.
இந்த சூழலில், தற்போது வட இந்தியாவில் “சாவன்” மாதம் தொடங்கியுள்ளது. இந்த மாதம் சிவபெருமானுக்கு உகந்த மாதமாக ஹிந்துக்களால் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அசைவம் உண்பதை ஹிந்துக்கள் தவிர்ப்பது வழக்கம்.
இதை சாதகமாக்கிக் கொண்ட ஒரு ஹிந்துத்துவ அமைப்பின் குண்டர்கள் காஜியாபாத்தில் உள்ள ஒரு KFC கடையை சூறையாடி மூடுமாறு வற்புறுத்தியுள்ளது. சாவன் மாதத்தில் இறைச்சி விற்கக்கூடாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
“காவல்துறை மீண்டும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள், தனிநபர்களின் உணவுத் தேர்வுகளில் தலையிடுவது மட்டுமல்லாமல், வணிக நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கும் இடையூறு விளைவிக்கின்றன. மத உணர்வுகளை காரணம் காட்டி பிறரின் உரிமைகளை மீறுவதும், வன்முறையில் ஈடுபடுவதும் கண்டிக்கத்தக்கது. சட்டத்தின் ஆட்சியும், தனிமனித சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே பரவலான எதிர்பார்ப்பாக உள்ளது.