சென்னை, ஜூலை.18– பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் வாயிலாக புதிய கண்டு பிடிப்புகளில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் அசத்தினார்கள்.
புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம்
தமிழ்நாடு அரசு, அரசு – உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கக் கூடிய மாணவ-மாணவிகளின் புத்தாக்க கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், அதன் மூலம் அவர்களை தொழில் முனை வோராக உருவாக்கவும் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் (எஸ்.அய்.டி.பி.) தொடங்கி வைக்கப்பட்டது.
கடந்த 2022-ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில்கள் துறை மூலம் பள்ளிக்கல்வித் துறை மற்றும் யுனிசெப் ஆகியவை இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த திட்டத்தின் கீழ் மாவட்ட, மண்டல மாநில அளவுகளில் கண்டுபிடிப்புகளை மாணவ-மாணவிகள் காட்சிப் படுத்தவும் அதில் சிறந்தவற்றுக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
கண்டுபிடிப்புகள்
மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட 10 கண்டுபிடிப் புகளை காட்சிப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடை பெற்றது. இதில் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் புருவத்தை உயர்த்தி பார்க்கும் அளவுக்கு இருந்தன.
அதிலும், தமிழ்நாடு முழுவதும் பொது கழிப்பறைகளை பயன்படுத்திவிட்டு, அதை முறையாக பராமரிக்காமல் விட்டுச் செல்வதும், இதனால் ஏற்படும் சுகாதாரக் கேடுகளுக்கு தீர்வு காணவும் அரசு பள்ளி மாணவிகள் புதிய கண்டுபிடிப்பை கையாண்டுள்ளனர்.
அதன்படி, கழிப்பறையை பயன்படுத்துபவர், தண்ணீரை முறையாக செலவழித்து அடுத்து வருபவர் பயன்படுத்த ஏதுவாக வெளியே வரும் வகையில் கண்டுபிடிப்பு ஆச்சரியப்படுத்தியது. கழிப்பறையை பயன்படுத்திவிட்டு தண்ணீரை செலவழிக்காமல் அப்படியே சென்றால், கதவு திறக்காது மேலும் தண்ணீரை பயன்படுத்துங்கள் என்ற அறிவிப்பும் வரும் வகையில் அந்த கண்டுபிடிப்பு இருந்தது.
அறுவடைக் கருவி
இதுதவிர, விவசாயிகளுக்கு உதவும் வகையில், அன்னாச்சி பழம் அறுவடை செய்வதற்கு ஏதுவாக ஒரு கருவியை கண்டுபிடித்திருந்தது ஆச்சரியமூட்டியது. அன்னாச்சி பழத்தை வெறும் கையினால் அறுவடை செய்யும் போது அதில் உள்ள முட்கள் குத்துவதாலும், விஷப்பூச்சிகள் தாக்குவதாலும் உடல் அளவில் பாதிப்பை விவ சாயிகள் சந்திக்கின்றனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில் அந்த அறுவடை கருவி அமைந்திருந்தது. மேலும் இந்த கண்டுபிடிப்பு குழுவில் இடம்பெற்றிருந்த மாணவி சத்யாவின் தாயார் இது போன்ற பாதிப்புகளை நேரில் சந்தித்தவர் என்பதால், அந்த மாணவி அதில் அதிகஆர்வம் காட்டியுள்ளார். இந்த கண்டுபிடிப்புக்குதான் முதல் பரிசும் கிடைத்தது. இதுபோல பிற கண்டுபிடிப்புகளும் அசத்தும் வகையில் இருந்தன.