ராணிப்பேட்டை, ஜூலை.18– நெமிலி அருகே டேங்கர் லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கோவிலில் சாமி தரிசனம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சுவால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 52), கார் மெக்கானிக். இவருக்கு லதா (43) என்ற மனைவியும், தினேஷ் (23) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று (17.7.2025) காலை வெங்கடேசன், மனைவி, மகனுடன் காரில் காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி, அகரம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றனர். அங்கு அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு காரில் திரும்பி கொண்டிருந்தனர். தினேஷ் காரை ஓட்டி வந்தார். நெமிலியை அடுத்த பள்ளூர் பருவமேடு அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. அப்போது அரக்கோணத்தில் காஞ்சிபுரம் நோக்கி சென்ற டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
டேங்கர் லாரி கவிழ்ந்தது
இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் கார் மீது மோதி விடக்கூடாது என்பதற்காக டேங்கர் லாரியை டிரைவர் வேகமாக திருப்பினார். அப்போது சாலையை விட்டு விலகிய டேங்கர் லாரியும் கவிழ்ந்தது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி காரில் வந்த லதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வெங்கடேசன், தினேஷ் இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் விரைந்து சென்று, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காரின் இடிபாடுகளில் சிக்கிய வெங்கடேசனை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவ மனைக்கும், தினேசை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தந்தை- – மகன் பலி
அங்கு சிகிச்சை பலனின்றி தந்தை வெங்கடேசன், மகன் தினேஷ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.