ஜப்பான், ஜூலை 18– ஜப்பானில் வெப்பமான சூழலில் பணிபுரிபவர்களுக்கு ‘மின்விசிறி’ பொருத்திய மேலாடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சிறப்புத் தடை
இவ்வகை ஆடைகள் வேலையிடத்தில் ஏற்படும் அதீத வியர்வையைக் கட்டுப்படுத்தி, வெப்பமான சூழலில் வேலை செய்வோருக்கு குளிர்ச்சியை தந்து உதவுகிறது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலையில், இதுபோன்ற காற்றாடி மேலங்கிகள் உடல் வெப்பத்தைத் தணிப்பதில் பேருதவியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சிறப்பு ஆடையை சோனி நிறுவனத்தின் முன்னாள் பொறியாளர் ஒருவர் வடிவமைத்துள்ளார். அதிக எரிசக்தியைச் செலவழிக்காமல் உடல் வெப்பநிலையைக் குறைப்பது எப்படி என்று நீண்ட நாட்களாகச் சிந்தித்து வந்த அவர், வேலை நிமித்தமாக ஆசியாவின் பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார். ஜப்பான் திரும்பியதும், அவர் சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, தனது முதல் மேலாடையை உருவாக்கினார்.
சார்ஜ் செய்யும் வசதி
ஆரம்பத்தில், அந்த ஆடையில் வாட்டர் கூலர் எனப்படும் மெல்லிய திவாலைகளை வீசும் வகையில் வடிவமைத்தார். இப்போது அதை அகற்றிவிட்டு காற்றாடி மட்டும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காற்றாடிகள் சுழலும்போது, உடலுக்குக் காற்று கிடைத்து வியர்வையைச் சமாளிக்க உதவுகிறது. இந்த காற்றாடி தொழில்நுட்பம் தற்போது தலைக்கவசங்கள் முதல் குழந்தைகளுக்கான தள்ளுவண்டிகள் வரை பல்வேறு பொருட்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மிகவும் குறைவான விலையில் எளிதில் சார்ஜ் செய்யவும் இது வடிவமைக்கப்பட்டு வெப்பமான சூழலில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சிறந்த ஆடையாக அமைந்துள்ளது.