சென்னை, ஜூலை.18– சட்டமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ள நகராட்சி பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் நிறைவேற்றி, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை
சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையில் நேற்று (17.7.2025) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில் அதிகாரி களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகள் 144 நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பேசியதாவது:-
மழை நீர் வடிகால் பணிகள்
அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேற் கொள்ளப்பட்டு வரும் பல்வேறு உள்கட்டமைப்பு உருவாக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட காலம்
நகர்ப்புற உள்ளாட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் வினியோகம், துப்புரவுப் பணி மற்றும் தெருவிளக்குகள் பராமரிப்புப் பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும். சட்டமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அப்பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலஅளவுக்குள் நிறைவேற்றி, பொது மக்களின் பயன்பாட்டுக்கு அதிகாரிகள் கொண்டுவர வேண்டும்.
கடந்த 4 ஆண்டுகளில் ரூ.8 ஆயிரம் கோடிக்கும் அதிகமான செலவில் 15 ஆயிரம் கி.மீ.க்கும் அதிகமான சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் நகர்ப்புற மக்களுக்கு பயனளிக்கக் கூடிய பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளான மெட்ரோ ரயில் திட்டங்கள், புதிய குடிநீர் திட்டங்கள், மழைநீர் வடிகால் பணிகள் போன்ற பல்வேறு முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாநகராட்சிகளில் 3,199 பணிகளும், நகராட்சிகளில் 4,972 பணிகளும் தொடங்கப்பட உள்ளன என்று அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இப்பணிகள் அனைத்தையும் விரைவில் தொடங்கி, வடகிழக்கு பருவமழைக்காலத்துக்கு முன்பே முடிக்க வேண்டும். இறுதிக்கட்டத்தில் இருக்கிற பணிகள், பாதி முடிவுற்ற பணிகளை எல்லாம் போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க, மின்வாரியம், குடிநீர் வழங்கல் வாரியம், நெடுஞ்சாலைகள் துறை, மாநகராட்சி நிர்வாகங்கள் ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம்.
பருவ மழைக்கு முன்னரே…
பருவமழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும்.
குறிப்பாக தாழ்வான பகுதிகள், வெள்ள அபாயம் இருக்கிற பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதலில் அங்கு பணிகளை முடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, தலைமைச்செயலாளர் முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மைச்செயலாளர் கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், மாநகராட்சி ஆணையர்கள், துணை ஆணையர்கள் கலந்து கொண்டனர்.