நம்மில் பலர் உள்ளூர் அளவிலும் நாடு தழுவிய அளவிலும் உலக அளவிலும் மானிட நாகரிக வளர்ச்சியின் தொகுப்பாக விளங்கும் அருங் காட்சியகங்களைப் பார்த்திருப்போம் என என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இருப்பினும் சமூக நிறுவனங்களையும் காட்சிப்படுத்த முடியும் என்னும் கருத்தை சிலரே ஏற்கக்கூடும். சமூக நிறுவனங்களைக் காட்சிப்படுத்திக் காட்டுவது என்பது விந்தையான ஒரு கருத்தே; சிலர் இதனை இயல்புக்கு மாறான கருத்தென்றும் கூறலாம். எனினும் இனவரைவியல் ஆய்வில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் என்ற வகையில் நீங்கள் இந்தப் புத்தாக்கத்தைக் கடுமையாக விமர்சிக்க மாட்டீர்கள் என்று கருதுகிறேன். ஏனென்றால், இது அவ்வளவு புதுமையானது இல்லை. உங்களுக்காவது இது விந்தையாக இருக்காது என்று கருதுகிறேன்.
நீங்கள் யாவரும் பாம்பியன் சிதைவுகள் போன்ற சில வரலாற்றுச் சின்னங்களைப் பார்த்து இருப்பீர்கள். இவற்றின் தொன்மைச் சிறப்பையும் வரலாற்றையும் விளக்கும் வழிகாட்டிகளின் நாவன்மையுடன்கூடிய விவரிப்புகளை வியந்து கேட்டிருப்பீர்கள். என் கருத்துப்படி இனவரைவியல் மாணவர்களும் ஒரு வகையில் இந்த வழிகாட்டிகளைப் போன்றவர்களே என்பேன். தனது முன்மாதிரியான வழிகாட்டியைப் போலவே சமூக நிறுவனங்களை விளக்கி உரைப்பதற்குத் தம் சொந்த விருப்பு வெறுப்புகளைக் கடந்து அதேவேளையில் மிகுந்த தீவிரத்தோடும் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தோடும் தம்மால் முடிந்த அளவு அவற்றின் தோற்றுவாயையும் செயல்பாட்டையும் அவர்கள் ஆய்வு செய்கின்றனர்.
தொல்பழங்காலச் சமூகத்தையும் தற்காலச் சமூகத்தையும் ஒப்பிட்டு நோக்குவதில் அக்கறை கொண்ட இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள நம் மாணவ நண்பர்களில் பெரும்பாலோர் இந்த வகையில் தம்மை நிரூபித்துக்கொண்டுள்ளனர். தம்மை ஈர்த்துள்ள பல்வேறு தற்கால மற்றும் தொல்பழங்கால நிறுவனங்களைப் பற்றித் திறம்பட எடுத்துரைத்ததன் மூலம் இதைச் செய்துள்ளனர். இந்த மாலைப் பொழுதில் நானும் என்னால் இயன்றவரை உங்களை மகிழ்விப்பதற்கு முன்வருகிறேன். இந்தியாவில் ஜாதிகள்: அவற்றின் இயங்கியல், தோற்றம், வளர்ச்சி என்னும் தலைப்பிலான ஆய்வுக் கட்டுரை மூலம் அதைச் செய்ய முயல்கிறேன்.
நான் எடுத்துக்கொண்டுள்ள தலைப்பின் சிக்கல் களை உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை. என்னைவிட நுண்ணிய அறிவாற்றலும் திறனுடைய எழுத்தாற்றலும் மிக்கோர் பலர், ஜாதி பற்றிய புதிர்களை விடுவிப்பதற்கு முயன்றுள்ளனர். எனினும் கெடுவாய்ப்பாக இப்புதிர் ‘விளக்கப்படாதது’ என்ற நிலையிலேயே இருந்துவருகின்றது, ‘புரிந்துகொள்ளப்படாதது’ என்ற நிலையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஜாதி போன்ற மிகப் பழைமைதட்டிப்போன நிறுவனத்தின் சிக்கலான நுணுக்கங்களை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன். எனினும், அதனை அறிய முடியாதது என்ற நிலைக்கு ஒதுக்கிவிடும் நம்பிக்கையற்ற மனநிலை எனக்கு இல்லை. அதைப் பற்றி அறிந்துகொள்ள முடியும் என்றே நான் கருதுகிறேன். கோட்பாட்டு அளவிலும், நடைமுறையிலும் ஜாதி என்ற சிக்கல் பரந்து விரிந்ததாகும். நடைமுறையில் ஜாதி என்பது மாபெரும் விளைவுகளைத் தன்னுள் கொண்டுள்ள ஒரு நிறுவனமாகும். அது ஒரு வட்டாரச் சிக்கல். ஆயினும் மிகப் பரந்த அளவில் தீங்கு விளைவிக்கும் வல்லமை கொண்டது.
ஏனெனில் “இந்தியாவில் ஜாதி முறை உள்ளவரை இந்துக்கள் ஜாதிக் கலப்பு மணம் செய்ய மாட்டார்கள். அயலாருடன் சமூக உறவு கொள்ள மாட்டார்கள். இந்துக்கள் உலகின் பிறபகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றால், இந்திய ஜாதி உலகளாவியதொரு சிக்கலாக உருக்கொள்ளும். (கெட்கர், சாதி, பக்.4) தமது சொந்த விருப்பத்தினால், ஜாதியின் தோற்றுவாயைக் கோட்பாட்டு அளவில் தோண்டித் துருவி அறிய எத்தனையோ வல்லுநர்கள் முற்பட்டனர். அவர்கள் அனைவரையும் இந்தச் சிக்கல் திணறடித்துள்ளது. எனவே, இந்தச் சிக்கலை நான் முழுமையாக விளக்கிவிட முடியாது. ஜாதி முறையின் தோற்றம், இயங்கியல், அதன் பரவல் ஆகியவற்றை மட்டும் விளக்கி உரைப்பது என்று நான் வரம்பிட்டுக்கொள்கிறேன். இல்லாவிடில் காலம், இடம், என் அறிவுத்திறன் ஆகிய அனைத்தும் என்னைக் கைவிட்டுவிடக்கூடும் என நான் அஞ்சுகின்றேன். என் ஆய்வுரையின் குறிப்பிட்ட பகுதிகளைத் தெளிவுபடுத்துவதற்குத் தேவை ஏற்பட்டாலன்றி நான் இட்டுக்கொண்ட வரம்புக்கு அப்பாற்பட்டப் பொருட்களைப் பற்றிப் பேச மாட்டேன்.
புகழ்பெற்ற இனவரைவியல் அறிஞர்களின் கூற்றுப்படி ஆரியர்கள், திராவிடர்கள், மங்கோலியர்கள், சித்தியர்கள் ஆகியோர் அடங்கிய கலவையே இந்திய மக்கள் ஆவர்.
ஆய்வுப் பொருளுக்கு வருவோம். புகழ்பெற்ற இனவரைவியல் அறிஞர்களின் கூற்றுப்படி ஆரியர்கள், திராவிடர்கள், மங்கோலியர்கள், சித்தியர்கள் ஆகியோர் அடங்கிய கலவையே இந்திய மக்கள் ஆவர். இவர்கள் அனைவரும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பல்வேறு திசைகளிலிருந்து பலவகைப்பட்ட பண்பாடுகளோடு இந்தியாவுக்குள் நுழைந்த பழங்குடிகளாவர். இவர்கள் அனைவரும் தங்களுக்கு முன்பே இங்கு வாழ்ந்துவந்தோருடன் போரிட்டுத் தங்களது இடத்தைப் பிடித்துக்கொண்டனர். போதுமான அளவு சண்டைகளுக்குப் பிறகு பிறருடன் அண்டை அயலாராக அமைதியாக வாழத் தொடங்கினர். பின்னர் இவர்களுக்குள் தொடர்ந்து ஏற்பட்ட தொடர்பின் மூலமாகவும் கலந்து பழகியதாலும் தத்தமது தனித்தன்மை வாய்ந்த பண்பாட்டினை இழந்து ஒரு பொதுப் பண்பாட்டை உருவாக்கினர். எனினும் இந்திய மக்கள்தொகையின் பகுதியாக அமைந்துள்ள பலவகை இன மக்கள் முற்றிலும் ஒன்றுகலந்துவிடவில்லை என்பதில் அய்யமில்லை. இதனால் இந்திய நாட்டுக்குள் பயணம்செய்யும் பயணி ஒருவர் இந்தியாவின் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள மக்கள் உடலமைப்பிலும் நிறத்திலும்கூட வேறுபட்டிருப்பதைக் காணலாம். அவ்வாறே தெற்கிலும் வடக்கிலும் உள்ள மக்களிடையேயும் வேறுபாடு இருப்பதைக் காணலாம். எந்த மக்களையும் பொறுத்தவரை முற்றிலும் ஒன்றுகலப்பது என்பது மட்டுமே அவர்களது ஒத்த தன்மைக்கான ஒரே அளவுகோலாக ஒருபோதும் இருந்ததில்லை.
இன அடிப்படையில் அனைத்து மக்களுமே பலபடித்தான தன்மை கொண்டவர்களே! அந்த மக்களிடையே நிலவும் பண்பாட்டு ஒருமையே ஒருபடித்தான தன்மைக்கு அடிப்படையாகும். பண்பாட்டு ஒருமைப்பாட்டைப் பொறுத்தவரை இந்தியத் தீபகற்பத்திற்கு இணையாக ஒப்பிட்டுக் கூறக்கூடிய அளவுக்கு வேறு எந்த நாடும் இல்லை என்று நான் துணிந்து கூறுவேன். இந்திய நாடு புவியியல் ஒருமைப்பாட்டினை மட்டுமே கொண்டிருக்கவில்லை. அதனினும் ஆழமான அடிப்படையான இந்திய நாடு முழுவதையும் தழுவிய அய்யத்திற்கு இடமற்ற பண்பாட்டு ஒருமைப்பாட்டினை அது கொண்டுள்ளது. இந்த ஒருபடித்தான தன்மை காரணமாகவே ஜாதி என்பது விளக்கியுரைக்க இயலாத சிக்கலாக உள்ளது. இந்து சமூகம் என்பது ஒன்றுக்கொன்று தனித்தனியே இயங்கும் பிரிவுகளின் கூட்டமைப்பாக மட்டும் இருக்குமேயானால் இந்தச் சிக்கல் எளிதானதாக இருக்கும். ஆனால் ஜாதி ஏற்கெனவே ஒருபடித்தானதாக உள்ள அலகை தனித்தனிக் கூறுகளாகப் பிரிப்பதாக உள்ளதால் ஜாதியின் தோற்றத்தைப் பற்றி விளக்குவது இந்தப் பிரித்து ஒதுக்கும் முறையினை விளக்குவதாக ஆகின்றது.
நமது ஆய்வுக்குள் செல்லுமுன் ஜாதியின் இயல்பு பற்றி தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது. எனவே ஜாதி குறித்துச் சிறப்பாக ஆராய்ந்துள்ள சில ஆய்வாளர்களுடைய வரைவிலக்கணங்களை நான் எடுத்துக்கொள்கிறேன்.
- திரு செனார்ட் எனும் பிரெஞ்சு நாட்டு வல்லுநர்: “ஒரு குறுகிய ஆட்சி மன்றம், கோட்பாட்டளவில் கறாராக மரபு வழியானது; தலைவர் ஒருவரையும் ஓர் அவையையும் கொண்ட மரபுவழியிலான சுயேச்சை யான அமைப்பை உடையது. ஏறத்தாழ முழு அதிகாரம் கொண்ட பேரவைகளில் கூடுவதையும் குறிப்பிட்ட சில திருவிழாக்களின்போது ஒன்றுசேர்வதையும் கொண்டது; குறிப்பாக திருமணத்துடனும் உணவுடனும் சடங்கு அடிப்படையிலான தீட்டுடனும் தொடர்புடைய பொது வேலைகளால் பிணைக்கப்பட்டது. தனது நீதி அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது உறுப்பினர்களை ஆள்வது; இந்த அதிகாரத்தின் வரம்பு வேறுபட்டது. ஆனால், குறிப்பிட்ட சில தண்டனைகளை வழங்குவதன் மூலம் தனது அதிகாரத்தை நிலைநாட்டுவதில் வெற்றியடைகிறது. இந்தத் தண்டனைகளில், ஜாதிக் குழுவில் இருந்து இறுதியாக விலக்கிவைப்பதும் அடங்கும். அத்தகைய விலக்கிவைத்தல் மாற்ற முடியாதது” என்று ஜாதியை வரையறுக்கிறார்.
- திரு நெஸ்பீல்டு என்பார், ஒரு ஜாதி என்பதை “சமூகத்தின் வேறு எந்த ஒரு வகுப்புடனும் எவ்வகையிலும் தொடர்பு கொள்ளாமல் இருக்கும் ஒரு வகுப்பினர். குழுவுக்கு வெளியே திருமணம் செய்துகொள்ளவோ தமது சொந்தக் குழுவைச் சேர்ந்தவர்களோடு தவிர வேறு யாருடனும் உணவு அருந்தவோ குடிக்கவோ முடியாதவர்கள்” என்று வரையறுக்கிறார்.
- சர்.எச். ரிஸ்லி என்பாரின் கருத்துப்படி ‘ஜாதி என்பதனை ஒரு பொதுப்பெயர் கொண்ட குடும்பங் களின் தொகுப்பு அல்லது பல குடும்பங்களை உள்ளடக்கிய குழுக்களின் தொகுப்பு என வரையறுக்கலாம். இந்தப் பொதுப்பெயர், குறிப்பிட்ட தொழில்கள் சார்ந்ததாகவோ அல்லது தொன்மவியல் அடிப்படையிலான மனித அல்லது தெய்வீக முன்னோரின் வழிவந்ததாகச் சொல்லிக்கொள்வதாகவோ அமைந்திருப்பது; ஒரே தொழிலைச் செய்வதாகக் கூறிக்கொள்வது; இது தொடர்பாகக் கருத்து கூறத் தகுதியுள்ளவர்களால் ஒருபடித்தான ஒற்றைக் குழு என்று கருதப்படுவது.”
- முனைவர் கெட்கர், “ஜாதி என்பது இருவகை பண்பியல்புகளைக் கொண்டுள்ள சமூகக் குழு” என்று வரையறுக்கிறார்.
“அ) அந்தக் குழுவின் உறுப்பினராகும் உரிமை, அந்தக் குழுவின் உறுப்பினர்களுக்குப் பிறந்தவர்களுக்கு மட்டுமே உரியது; மேலும் அவ்வாறு பிறந்தவர்கள் அனைவரும் குழுவின் உறுப்பினர்களே. ஆ) இந்தக் குழுவினர் தம் குழுவுக்கு வெளியில் மணவுறவு கொள்ள முடியாதபடி சமூக கட்டுத் திட்டங்களால் தடை செய்யப்பட்டவர்கள்.”
– தொடரும்
‘அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள்’ சாதியம்: வரலாறு – ஆய்வு (தொகுதி 1)