1958-ஆம் ஆண்டு வாக்கில், தன் தந்தையோடு நடுக்காட்டில் குடியேறிவிட்ட தங்கவேலன், அந்தப் பகுதிக்கு, பெரியாரை அழைத்து பெயர் வைக்க விரும்பினார். ஆனால், காமராசர் மீது பெரியார் தீவிரப் பற்றுக் கொண்டிருந்த காலம் அது என்பதால், பெரியாரிடம் பெயர் கேட்டால் காமராசரின் பெயரையே வைத்துவிடுவாரோ என்ற எண்ணம் தங்கவேலனுக்கு இருந்தது. அதனால், விடுதலைபுரம், சுயமரியாதைபுரம் என்று இரண்டு பெயர்களை எழுதி, அருகாமை பகுதியில் இருந்த படித்த சிலரிடம் கேட்டுள்ளார். அதில் பலரும் ‘விடுதலைபுரம்’ என்ற பெயரைச் சொல்ல, அதையே ஊரின் பெயராக வைக்க முடிவு செய்தார்.
அந்தக் காலகட்டத்தில்தான் 10.06.1964 அன்று அருகே உள்ள பெருவளப்பூருக்கு வருகை தந்தார் தந்தை பெரியார். மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. அப்போது, மேடையில் பெரியாருக்கு எடைக்கு எடை மிளகாய் வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்குச் சென்று பெரியாரைச் சந்தித்த தங்கவேலன், “எங்கள் குடியிருப்புப் பகுதி வழியாகத்தான் நீங்கள் திரும்பச் செல்ல வேண்டும். செல்லும் போது, ஊர்ப் பெயர்ப்பலகையைத் திறக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார். அதேபோல திரும்பும் வழியில், அங்கே நின்ற பெயர்ப் பலகையைத் திறந்து வைத்த தந்தை பெரியார் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்.
‘என்னங்க அய்யா ரெண்டு மூனு வீடுதான் இருக்குது. ‘விடுதலைபுரம்’ என்று பேர் வைத்துவிட்டீர்களே, ஊராகிவிடுமா? என்று கேட்டுள்ளார் பெரியார். ‘நான் ஊர் ஆக்கி விடுவேன் அய்யா’ என்று உறுதி அளித்தார் தங்கவேலன்.
« விடுதலைபுரத்தில் எக்காலத்தி லும் கோயிலோ, மசூதியோ, தேவாலயமோ கட்டக்கூடாது.
« ஜாதி-மத வேறுபாடுகளைக் கடை பிடிக்கக் மதக்குறியீடுகளை அணிதல் கூடாது.
« ஒருவரையொருவர் அடிமைப்படுத்தி வாழக்கூடாது.
– என்பன உள்ளிட்ட 11 சட்டதிட்டங்களை வகுத்து, கல்வெட்டு ஒன்றையும் நிறுவினார். அந்தக் கல்வெட்டும், கட்டுப்பாடுகளும் இன்றும் அப்படியே இருக்கின்றன.
இந்தக் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டு வருவோர், விடுதலைபுரத்தில் குடியேறலாம் என அழைத்தார் தங்கவேலன். அப்படி வருவோருக்கு வீடுகளை அமைத்துத் தருவதையும் தன்னுடைய கடமையாகக் கருதினார். இந்தச் சூழலில்தான் 1970-ஆம் ஆண்டில் குடிசை மாற்று வாரியத்தையும், 1974-ஆம் ஆண்டில் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தையும் (தாட்கோ) நிறுவினார் கலைஞர். இவற்றின் மூலம் தங்கள் ஊரில் குடியிருப்புகளை ஏற்படுத்திட, உள்ளூர் நிர்வாகம் முதல் மாவட்ட நிர்வாகம் வரை முட்டி மோதிப் பார்த்தார் தங்கவேலன். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படாததால், நேராக சென்னை புறப்பட்டு அன்னை மணியம்மை யாரைச் சந்தித்தார். ஆசிரியர் கி.வீரமணியுடன் சென்று முதல் அமைச்சர் கலைஞரைச் சந்திக்க அறிவுறுத்தினார் மணியம்மையார். கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்று கலைஞரைச் சந்தித்தனர். விடுதலை புரத்தின் வரலாற்றை அறிந்தவுடன் அகமகிழ்ச்சி அடைந்த கலைஞர், மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு உடனடியாக குடியிருப்புகள் ஏற்படுத்தித் தர ஆணையிட்டார்.
தங்கவேலன் ஊருக்குச் செல்வதற்கு முன்பாக, அரசு நிர்வாகம் விடுதலைபுரத்தில் இருந்தது. கட்டி முடிக்கப்பட்டன. ஊர்ப் பெயரை பெரியார் திறந்துவைத்தது போல, குடியிருப்புகளை கலைஞர் திறந்துவைக்க வேண்டுமென விரும்பினார் தங்கவேலன். 35 குடியிருப்புகளுக்காக கலைஞரை அழைத்து வர வேண்டுமா என உள்ளூர் தி.மு.க. நிர்வாகிகளுக்குத் தயக்கம். ஆனாலும் கலைஞருக்காகக் காத்திருந்தது விடுதலைபுரம்…
– ந. பிரகாசு
நன்றி: ‘முரசொலி’, 18.7.2025