அவசர அவசரமாக பீகாரில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி ஏன்?

viduthalai
3 Min Read

பீகார் மாநிலத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. “குடிமக்கள் பதிவேட்டைச் சரிபார்க்க தேர்தல் ஆணையத்துக்கு யார் அதிகாரம் கொடுத்தது?” என ஆளும் பாஜகவின் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கேள்வி எழுப்பியுள்ளன.

பீகாரில் தேர்தல் ஆணையத்தின் இந்தச் சிறப்புத் திருத்த நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்த நிலையில், தற்போது பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்தனர். அப்போது, “இன்னும் 6 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்குள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்த வேண்டாம். வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்குப் போதுமான அவகாசம் வழங்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கையானது குடியுரிமை சரிபார்ப்புடன் தொடர்புடையது இல்லை என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்” என்றும் தேர்தல் ஆணையத்திடம் ஒரு மனுவைக் கொடுத்து வலியுறுத்தியுள்ளனர். ‘பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும்போது பீகார் நடைமுறைகளை தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ எனவும் தெலுங்கு தேசம்  கூறியுள்ளது

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார் இது குறித்துக் கூறுகையில், “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் தேர்தல் ஆணையம் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) நடவடிக்கையைத் தொடங்கக்கூடாது. வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய வேண்டும் என்றால், அது வெளிப்படைத்தன்மையுடன் செய்யப்பட வேண்டும். சரியான நேரம் ஒதுக்கப்பட வேண்டும். 3 மாதங்களில் என்ன செய்ய முடியும்? அதற்கு அவகாசம் 13 மாதங்கள் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மேல் வழங்கப்பட வேண்டும். வாக்காளர் பட்டியலைத் திருத்த வேண்டுமே தவிர, குடியுரிமைச் சான்றைக் கேட்கக்கூடாது. அது உள்துறை அமைச்சகத்தின் வேலை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஒரு பெரிய அரசியல் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

ஒன்றிய பிஜேபியைப் பொருத்தவரை அது எது செய்தாலும் அதற்குள் ஆர்.எஸ்.எஸின் மதவாதம், ஜாதியவாதம் குடி கொண்டிருக்கும்.

அதைத் தெளிவாகப் புரிந்து கொண்ட நிலையில் தான்  காங்கிரசும், எதிர்க்கட்சிகளும் போர்க் கொடி தூக்கியுள்ளன.

2025 நவம்பர் மாதத்திற்குள் பீகாரில் சட்டப் பேரவைத் தேர்தல் நடந்தாக வேண்டும்.

இந்த நிலையில் அவசர அவசரமாக தேர்தல் ஆணையம் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை மேற்கொள்வது, பெரும் அச்சத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநில ராஷ்டிரிய ஜனதா தள முக்கிய தலைவர் தேஜஸ்வி யாதவ் வாக்காளர் பட்டியலிலிருந்து 35 லட்சம்  நீக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். நீக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பீகாரைப் பொறுத்தவரை முஸ்லீம்களின் மக்கள் தொகை 1.75 கோடி (16.9 விழுக்காடு). இது 2011ஆம் ஆண்டு கணக்கீடு – இப்பொழுது இன்னும் அதிகரித்திருக்கும் அல்லவா!

பிஜேபிக்கு இது கண்ணை உறுத்தக் கூடிய ஒன்றே! தேர்தல் ஆணையம் தன்னதிகாரமுள்ள அமைப்பாக பிஜேபி ஆட்சியில் இல்லை என்பது நாடறிந்த உண்மையாகும். தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி என்றால், அது இந்தியா முழுமைக்குமாக அல்லவா நடத்தப்பட வேண்டும்! பீகாரில் மட்டும் அவசர அவசரமாக நடத்தப்பட வேண்டியதன்  நோக்கம் என்ன? எல்லாம் தேர்தல் கண்ணோட்டம்தான்!

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *