இவருக்கு வயது 94. நடவடிக்கையைப் பார்த்தால் அப்படி சொல்ல முடியாது. நீடாமங்கலத்தையடுத்த ஒரத்தூர் இவரின் சொந்த ஊர். இந்த வயதிலும் ஒரத்தூர் கிராமத்திலிருந்து நீடாமங்கலத்துக்கு நடந்தே வருகிறார் பெரியவர் மாணிக்கம்.
கடந்த 10ஆம் தேதி நீடாமங்கலத்தில் பெரியாரியல் பயிற்சி முகாம் நடைபெற்றபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது.
பேட்டி தொடர்கிறது!
கேள்வி: உங்கள் பெற்றோர்கள்?
பதில்: தந்தையார் கிருஷ்ணன், தாயார் பொன்னம்மாள். துணைவியார் செல்லம்மாள். மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். தொழில் விவசாயம்.
கேள்வி: பெரியாரை எப்பொழுது சந்தித்தீர்கள்?
பதில்: நீடாமங்கலத்தில் சரவணன் திருமணத்துக்குப் பெரியார் வந்தார். சரவணன் படித்தவர் – பிற்காலத்தில் அரசு அதிகாரியாக ஆனவர். ஏராளமான இளைஞர்களை இயக்கத்துக்குக் கொண்டு வந்தார்.
அந்தத் திருமணத்தில் பெரியார் பேச்சு என் மனதில் ஒரு மாற்றத்தைக் கொடுத்தது.
கேள்வி: திராவிடர் கழகத்தில் சேர்ந்த காரணம்?
பதில்: ஜாதி ஆதிக்கக்காரர்களின் ஆணவம் தலைவிரித்து ஆடியது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று சில இளைஞர்கள் யோசித்தோம். பெரியார் பேச்சைக் கேட்டவுடன், கழகத்தை உருவாக்கினோம். என்னுடைய சீர்திருத்தத் திருமணம் தஞ்சை இராசகோபால தலைமையில் நடைபெற்றது.
கேள்வி: கழகத்தில் என்ன பொறுப்பு?
பதில்: பொருளாளராக இருந்து வந்திருக்கிறேன். எங்கள் ஊரே திராவிடர் கழகமாக மாறியது.
கேள்வி: தந்தை பெரியாரை உங்கள் ஊருக்கு அழைத்ததுண்டா?
பதில்: ஒருமுறை அழைத்திருக்கிறோம். அப்பொழுது 150 ரூபாய் பண முடிப்புக் கொடுத்தோம். அந்தக் காலகட்டத்தில் அது மிகப் பெரிய தொகைதான். ரொம்ப சந்தோஷப்பட்டார். பெரியார் அன்னியில் கழகப் பேச்சாளர்களை அழைத்துப் பிரச்சாரக் கூட்டங்களை அவ்வப்போது நடத்தி இருக்கிறோம்.
கேள்வி: திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்களில் பங்கேற்றதுண்டா?
பதில்: ஓ, தாராளமாக. சென்னையில் நடைபெற்ற ‘முரளீஸ் கபே’ பிராமணாள் போர்டு அழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு நான்கு வாரம் சிறை.
1957இல் தந்தை பெரியார் அறிவித்த ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு 6 மாதம் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டோம். என்னுடன் கழகத் தோழர்கள், பக்கிரி, வேலாயுதம், நாகூரான், இரத்தினம், மாணிக்கம், தங்கராசு, சின்னப்பிள்ளை, கோவிந்தராசு, தங்கவேலு ஆகியோரும் அந்த ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு திருச்சி சிறையில் இருந்தோம்.
சட்ட எரிப்புப் போராட்டத்தில் சிறை சென்ற பெ.தங்கராசு, சின்னபிள்ளை ஆகியோர் மன்னார்குடி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணியின் தலைவர் த.வீரமணியின் பெற்றோர்கள் ஆவர். சிறை சென்ற த.கோவிந்தராசன் தோழர் வீரமணியின் அண்ணன் ஆவார்.
கழகம் நடத்திய போராட்டங்களில் எல்லாம் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறேன். ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி.
நீடாமங்கலம் அ.ஆறுமுகம் வீட்டுத் திருமணம் – தந்தை பெரியார் தலைமையில் நடந்தது.
அங்கு கும்பகோணம் கே.கே.நீலமேகம் அவர்கள் ஒரு மூட்டை பஞ்சாங்கத்தைக் கொண்டு வந்து பெரியார் முன்னிலையில் தொப்பென்று போட்டு அவற்றை எரிக்கச் சொன்னார். அந்தக் காலத்தில் தோழர்கள் தீவிரம் அதிகம்.
கேள்வி: உங்கள் சிறைவாசம் எப்படி இருந்தது?
பதில்: கஷ்டம்தான். ஆனாலும், அதைப் பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை.
ஒரு கொள்கைக்காக தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு வந்த பிறகு, அதற்குக் கட்டுப்பட்டுத்தானே நடந்துகொள்ள வேண்டும். அதில் குறை சொல்லுவது சரியில்லை! (எத்தகைய அப்பழுக்கற்ற கருஞ்சட்டைத் தோழர்கள் என்பதை எண்ணிப் பார்த்தால் உடல் ரோமமெல்லாம் சிலிர்க்கிறது)
94 வயதிலும் கொள்கையில் இளமைக் குன்றா இத்தகைய பெரியார் பெருந்தொண்டர்களை இன்றைய நமது கழகத் தோழர்கள், குறிப்பாகப் புதிய தலைமுறையினர் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஆங்காங்கே முதுமை நிலையில் தடுமாற்றத்துடன் (கொள்கையில் அல்ல) காலந்தள்ளும் இத்தகைய வணக்கத்துக்குரிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்களை அடிக்கடி சந்திக்க வேண்டும், அளவளாவ வேண்டும், இயன்ற உதவிகளையும் செய்ய வேண்டும்.
பேட்டி கண்டவர்: கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன். உடன் இருந்தோர்: கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மன்னார்குடி மாவட்டக் கழகத் தலைவர் ஆர்.பி.சித்தார்த்தன், செயலாளர் கணேசன், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சிவஞானம், ஆசிரியர் வீரமணி, அதிரடி அன்பழகன், மா.அழகிரிசாமி உள்ளிட்டோர்.