சென்னை, ஜூலை 17– தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. மொத்தம் 3,274 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஓட்டுநர் – நடத்துநர் பணிக்கு எழுத்துத் தேர்வு
தமிழ்நாட்டில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் (சென்னை), விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய 8 அரசுப் போக்கு வரத்து கழகங்கள் செயல்பட்டு கொண்டு இருக்கின்றன. இவற்றின் கீழ் மொத்தம் 25 மண்டல வாரியாக 20 ஆயிரத்திற்கு அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த 8 அரசுப் போக்குவரத்து கழகங்களில் இருக்கும் 3,274 ஒட்டுநர் உடன் கொண்ட நடத்துநர் (Driver Cum Conductor) காலிப்பணியிடங்கள் தற்போது நிரப்பப்படுகிறது.
வயது வரம்பு
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 3,274 பணியிடங்களுக்கு 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். அதிகபடியாக ஒசி (OC) பிரிவை சேர்ந்தவர்கள் 40 வயதைக் கடந்திருக்கக் கூடாது. பிசி, எம்பிசி, டிசி, எஸ்சி மற்றும் எஸ்டி (BC/MBC/DNC/SC/ST) பிரிவை சேர்ந்தவர்கள் 45 வயதைக் கடந்திருக்கக்கூடாது.
மேனாள் ராணுவ வீரர்கள் ஓசி அதிகபடியாக 50 வயதைக் கடந்திருக்கக் கூடாது. பிசி, எம்பிசி, டிசி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் 55 வயதைக் கடந்திருக்கக் கூடாது.
கல்வித்தகுதி
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழில் எழுதப் படிக்க பேச தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமம் கட்டாயமாக தேவை. மேலும், குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் பெற்றிருக்க வேண்டும். முதலுதவி சான்றிதழ், பேட்ஜ் மற்றும் நடத்துநர் உரிமம் ஆகியவை 01.01.2025 தேதியின் அல்லது அதற்கு முன்பு பெற்றிருக்க வேண்டும்.
சாலைப் போக்குவரத்து நிறுவனம் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களுக்கு குறைந்தபட்சம் வயது 24 மற்றும் 18 மாத அனுபவம் தேவை என்ற நெறிமுறை பொருந்தாது.
உடற்தகுதி
ஓட்டுநர் உடன் கொண்ட நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் குறைந்தபட்சம் 50 கிலோ எடை இருக்க வேண்டும். உயரம் குறைந்தபட்சம் 160 செ.மீ இருக்க வேண்டும். நல்ல உடல்நலத்துடன் தெளிவான கண் பார்வையுடன் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப் பிக்கும் நபர்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விவரங்களை https://www.arasubus.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.