அதிகார எல்லையை மீறுபவர்தான் ஆளுநரா?

Viduthalai
4 Min Read

ஆளுநர் அறிவித்த விருது கேடயத்தில் ‘மோசடித் திருக்குறள்!’
தமிழ் மொழி, தமிழர் பண்பாட்டின் மீது
ஆளுநரால் நிகழ்த்தப்படும் தொடர் தாக்குதல்கள்!
அதிகார எல்லையை மீறுபவர்தான் ஆளுநரா?

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி  அறிவித்த விருது கேடயத்தில் மோசடித் திருக்குறள் அச்சடிக்கப்பட்டிருப்பது – தமிழ் மொழி, தமிழர் பண்பாட்டின் மீது ஆளுநரால் நிகழ்த்தப்படும் தொடர் தாக்குதல்கள் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

கடந்த 13 ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.இரவி பங்கேற்று மருத்துவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருக்கிறார்கள். அதில் பாராட்டி வழங்கப்பட்ட கேடயத்தில் 944 ஆவது திருக்குறள் என்று ஒன்றைப் பதித்திருக்கிறார்கள்.

‘‘செருக்கறிந்து சீர்மை பயக்கும் மருப்பொடு

மன்னுஞ்சொல் மேல்வையப் பட்டு’’

– திருவள்ளுவர்  (திருக்குறள் 944)

இப்படி ஒரு திருக்குறளை இதுவரை எவரும் கேட்டதும் இல்லை; படித்ததும் இல்லை. ஏனென்றால் 1330 குறள்களில் இப்படி ஒரு திருக்குறளே இல்லை.

இரண்டு குறள்கள்தான்!

‘செரு’ என்ற வார்த்தையில் தொடங்கப்படும் இரண்டு குறள்கள்தான் இருக்கின்றன.

ஒன்று,

‘‘செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்

வெருவந்து வெய்து கெடும்.’’ (குறள் 569)

இரண்டாவது,

‘‘செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்

பெருக்கம் பெருமித நீர்த்து.’’ (குறள் 431)

மருந்து என்ற அதிகாரத்தில் உள்ள குறள் எண் 944 -இல் உள்ள உண்மையான குறள் பின்வருமாறு:

‘‘அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து.’’  (குறள் 944)

குறள் எண்களில், எழுத்துகளில் பிழையிருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இல்லாத ஒன்றை உருவாக்கி அதைத் திருவள்ளுவர் தலையில் கட்டும் மோசடியை இதுவரை எங்கும் யாரும் கண்டதில்லை.

இதுகுறித்து மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் ட்விட்டர் மூலம் கேள்வி எழுப்பி உள்ளார். பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

தொடரும் ஆளுநர் ஆர்.என்.இரவியின்
அடுத்த மோசடியா இது?

திருவள்ளுவரின் உருவம் அரசால் அங்கீ கரிக்கப்பட்ட படம் என்று 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வரும் படத்தை மாற்றி, போலியாக உள்நோக்கத்துடன் திருவள்ளுவருக்குக் காஷாயம் – காவி ஆடை, பட்டை, கொட்டை அணிவித்து, காவித் திருவள்ளுவர் ஆக்கிய காவிக் கும்பலின் படத்தைப் பயன்படுத்துவது, ‘திருவள்ளுவர் திருநாள்’ என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நாளுக்கு மாற்றாக வேறொரு நாளை முன்னிறுத்துவது  என்று தொடரும் ஆளுநர் ஆர்.என்.இரவியின் அடுத்த மோசடியா இது?

நாடெங்கும் திருக்குறள், வீடுகள் தோறும் இருக்கும்போது, இணைய வெளியில் ஏராளமான தளங்களில் தட்டிய உடனே திருக்குறள் கிடைக்கும் போது, இவ்வளவு விழிப்போடு இருக்கும் கால கட்டத்திலேயே தமிழர்கள் அனைவரும் அறிந்த திருக்குறளில் இப்படி ஒரு மோசடி நிகழ்த்தப்படுகிறது என்றால், காலங்காலமாக எத்தனை இடைச் செரு கல்களை இவர்கள் பகவத் கீதையிலும் இன்ன பிற வேத, புராண, இதிகாசங்களிலும், வரலாற்றிலும் செய்தி ருப்பார்கள் என்பதற்கு இதுவே சான்று அல்லவா?

குறைந்தபட்சம் ஆளுநர் பொறுப்பேற்க வேண்டாமா?

பல இடங்களில் இருந்தும் கண்டனங்கள் எழுந்ததற்குப் பிறகு, ஆளுநருக்கும், இந்த மோசடிக் குறளுக்கும் தொடர்பில்லை என்று இப்போது அறிக்கை வெளியிடுகிறார்கள். நாட்டில் எந்த மூலையில் ஏதோ ஒரு சிறு நிகழ்வு நடந்தாலும் முதலமைச்சர் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுபவர்கள், ஆளுநர் மாளிகைக்குள்ளேயே அவர் நடத்திய நிகழ்வில் அவர் வழங்கிய விருதில் பொறிக்கப்பட்டுள்ள திருக்குறள் தவறானது என்றால் அதற்கு குறைந்தபட்சம் ஆளுநர் பொறுப்பேற்க வேண்டாமா?

‘‘அவர் திருக்குறளின் மீது திடீர் குபீர் ஆர்வம் கொண்டவர் – தமிழைக் கூர்ந்து, ஆழ்ந்து, விரும்பித் தெரிந்து கொள்கிறார்’’ என்றெல்லாம் அவ்வப்போது செய்தி வெளியிடுகிறார்கள்! இல்லாத திருக்குறளை மோசடியாக உருவாக்கி – விருதுக் கேடயமாக வழங்கு வதை ஆளுநர் அறிய மாட்டாரா?

ஆளுநர் ஆர்.என்.இரவி மற்றும் அவரது அதிகார பீடத்தில் இருந்து செய்யப்படும் இத்தகைய மோசடிகளுக்கு நமது கடும் கண்டனத்தைத் தெரி வித்துக் கொள்கிறோம்.

முன்பு, ஆளுநர் மாளிகை நடத்தும் பொங்கல் விழாவுக்கான அழைப்பிதழில் ‘தமிழ்நாடு ஆளுநர்’ என்று அதுவரை அச்சடிக்கப்பட்டு இருந்த நிலையில், ‘தமிழக ஆளுநர்’ என்று வேண்டுமென்றே மாற்றியது இவர்தானே? தமிழ்நாடு என்று அரசமைப்புச் சட்டப்படி ஏற்கப்பட்டுள்ள ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றுகிற அதிகாரம் இவருக்கு எங்கிருந்து முளைத்தது?

தமிழ்நாட்டு மக்களின்
ஒட்டுமொத்த உணர்வு

தெரியாமல் அல்ல… தெரிந்தே தொடர்ந்து இத்த கைய மோசடிகளும், அதிகார அத்துமீறல்களும், வீண் வம்புச் சண்டைகளும் ஆளுநர் மாளிகையின் போக்காக இருக்கின்றன. அரசமைப்புச் சட்ட ரீதியாக செய்ய வேண்டிய கடமைகளை உரிய காலத்தில் செய்வதை விட்டுவிட்டு, தன் அதிகார எல்லைக்கு மீறிய செயல்களை மிகுந்த ஆர்வத்தோடும், அதைவிட அதிகமான உள்நோக்கத்தோடும் தனியான அதிகார மய்யம் போல தன்னைக் காட்டிக் கொள்வதற்காக செய்து கொண்டிருக்கிறார்கள். பட்டியலிட்டால் நீண்டு கொண்டே செல்லும். அதை இனியும் நீள விடக்கூடாது என்பதே தமிழ்நாட்டு மக்களின் ஒட்டு மொத்த உணர்வாகும்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

 

சென்னை

17.7.2025

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *