‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் ஒரே நாளில் 1.25 லட்சம் மனுக்கள் குவிந்தன

2 Min Read

சென்னை, ஜூலை 17-– மக்கள் வசிப்பிடங்களுக்கே அதிகாரிகள் சென்று, அரசின் சேவைகளை வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடங்கப்பட்ட ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் 1.25 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

‘உங்களுடன் ஸ்டாலின்’

முதலமைச்சரின் முகவரி துறையின் கீழ் பல்வேறு சேவைகளை ஒருங்கிணைத்து, பொதுமக்களின் மனுக்களைப் பெற்று தீர்வுகாணும் திட்டங்கள் அவ்வபோது அரசால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில், அரசுத் துறைகளின் சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை சிதம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாநிலம் முழுவதும் இந்த திட்டத்துக்கான முகாம்கள் தொடங்கின.

தமிழ்நாடு முழுவதும் வரும் நவம்பர் மாதம் வரை 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. முதல்கட்டமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நகர்ப்புறத்தில் 1,428, ஊரகப் பகுதிகளில் 2,135 முகாம்கள் நடத்தப்படுகின்றன.

வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய 4 நாட்கள் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் அன்று தொடங்கிய முகாம்களில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, எரிசக்தித் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை உள்ளிட்ட 13 அரசுத் துறைகள் மூலம் மக்களிடமிருந்து மனுக்கள் பெற்று, அதற்கான ஒப்பமும் வழங்கப்பட்டது.

1.25 லட்சம் மனுக்கள்

இதுதவிர, ஏற்கெனவே அறிவிக் கப்பட்டபடி, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறத் தகுதியுள்ள, விடுபட்ட மகளிர் இந்த முகாமில் விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து வழங்கினர்.

15.07.2025 அன்று கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கோரி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் உட்பட 1.25 லட்சம் மனுக்களை அதிகாரிகள் பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *