சென்னை, ஜூலை 17– பாம்பு மீட்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காக ‘நாகம்’ என்ற புதிய செயலி விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வனத் துறை கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறது.
விழிப்புணர்வு செயலி
“பாம்பை கண்டால் படையும் நடுங்கும்” என்பார்கள். அந்தவகையில் பாம்பு நாம் வாழும் இருப்பிடங்களுக்குள் வந்துவிட்டால், அதனை அடித்து கொல்வதை பலரும் பார்த்து இருக்கிறோம். ஆனால் சிலர் அதற்காக தீயணைப்புத் துறை, வனத்துறை, பாம்பு பிடி வீரர்களை தொடர்பு கொண்டு பாதுகாப்பாக அகற்றி வனப்பகுதிகளுக்குள்ளும் விடுகின்றனர்.
இந்த நிலையில் இதனை ஒரு வரைமுறைப்படுத்தவும், பாம்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றை மனிதர்கள் வாழக்கூடிய பகுதிகளுக்குள் வந்தால் பாதுகாப்பாக மீட்கவும், பாம்பு கடியால் ஏற்படும் இறப்புகளை குறைக்கவும் வனத்துறை புதிய செயலி ஒன்றை உருவாக்கி உள்ளது.
இதற்கு முன்னதாக இது போன்ற செயலியை கேரளா மற்றும் ஒடிசா மாநிலம் உருவாக்கி இருக்கிறது. கேரள வனத்துறை இந்த செயலிக்கு “சர்ப” என்று பெயரிட்டிருக்கிறது. அதேபோல், தமிழ்நாடு வனத்துறை இந்த செயலிக்கு ‘நாகம்’ என்று தற்போது பெயர் சூட்டியுள்ளது.
பயிற்சி: செயலியின் பீட்டா பதிப்பை அதிகாரப்பூர்வமாக வனத்துறை அறிமுகம் செய்து வைத்தாலும், அதில் சில தகவல்கள், விஷயங்களை சேர்த்து முழுவதுமாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வனத்துறை திட்டமிட்டு இருக்கிறது. உதாரணமாக பாம்பு பிடி வீரர்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் வகையில் பிரத்தியேக பயிற்சியை வனத்துறை வழங்கி வருகிறது. மேலும் அவர்களுக்கான பாம்பு பிடி உபகரணங்களும் வழங்கப்பட உள்ளன.
இந்த செயலி வாயிலாக ஒரு வீட்டில் பாம்பு வந்துவிட்டால் புகாராக தெரிவிக்கலாம். இந்த புகார் கிடைத்த உடனே பாம்பு பிடி வீரர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு பயணப்பட்டு அதனை பிடித்து வனப்பகுதிகளில் கொண்டு விடுவார்கள். அவ்வாறு விடச் செல்லும்போது, ஏற்கெனவே அதே பகுதியில் அந்த வகையான பாம்பை விட்டு இருந்தாலும் அதுவும் செயலியில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனால் பாம்பு பிடி வீரர்கள் வேறு இடத்தில் கொண்டு விடுவார்கள்.
எந்த வகையான பாம்புகள்?
மேலும் எந்தவகையான பாம்புகள் மக்கள் வாழும் பகுதிகளில் எங்கு அதிக நடமாட்டம் இருக்கிறது? என்ற விவரங்களும் இதன் மூலம் தெரியவரும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் எத்தனை வகையான பாம்பு வகைகள் இருக்கின்றன? அதுபற்றிய சுவாரஸ்ய தகவல்கள் என்ன? பாம்பு கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவிகள் என்ன? பாம்புகளை பிடிக்க யாரை அணுகுவது? என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இந்த செயலியில் இடம்பெறச் செய்ய இருக்கின்றனர்.