சென்னை, ஜூலை 17- தமிழ்நாட்டில் நடந்த கலந்தாய்வு மூலம் 2,388 பட்டதாரி ஆசிரியர் களுக்கு அவர்கள் விரும்பிய பள்ளிகளில் பணி மாறுதல் வழங்கப் பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
நிகழ் கல்வியாண்டில் ஆசிரியர் களுக்கான பணி மாறுதல் கலந் தாய்வு கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டத்துக்குள்பட்ட பொது மாறுதல் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெற்றது.
இந்தக் கலந்தாய்வில், தமிழ் பாடத்தைச் சேர்ந்த 1,544 பேரும், ஆங்கிலம் 2,260 பேரும், கணிதம் 3,190 பேரும், அறிவியல் 2,378 பேரும், சமூக அறிவியல் 1,791 பேரும் என மொத்தம் 11,163 பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இவர்களில், 2,388 பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான பள்ளிகளுக்கு மாறுதல் ஆணையைப் பெற்றுச் சென்றதாக அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.