கோ. கருணாநிதி
ஜூலை 10, 11 தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்குள் யூனியன் வங்கியின் கிளைகளில் தோழர்களைச் சந்தித்த பின்பு நெல்லை திரும்பும் வழியில், “சேரன்மகாதேவி” என்ற பெயர் பலகையை பார்த்ததும், என்னுடன் பயணித்த தோழர் வினோத்திடம், “இந்த ஊருக்கொரு வரலாறு உண்டு தெரியுமா?” என்று கேட்டேன். அவர் “தெரியாது” என்றார். உடனே வாகனத்தை நிறுத்தச் சொல்லி, “இந்த பெயர் பலகையின் முன் ஒரு படம் எடுக்கலாம்; பிறகு வரலாற்றைச் சொல்கிறேன்” என்று கூறினேன். படம் எடுத்த பின் தொடர்ந்தேன்…
சேரன்மகாதேவி, தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி நகரம். இது தனித்துவமான வரலாற்றைப் பெற்றது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊரில் நிகழ்ந்த ஒரு முக்கியமான நிகழ்வு, தமிழ்நாட்டின் வரலாற்றை புரட்டிப் போட்டது. அந்த நிகழ்வே திராவிடர் இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்ற புரட்சிகளைத் தோற்றுவிக்கச் செய்த முக்கியமான நிகழ்வாக அமைந்தது.
என்ன நிகழ்வு?
சுதந்திரப் போராட்ட வீரர் என அறியப்பட்ட வ.வே.சு. அய்யர் (வ.வே.சுப்ரமணிய அய்யர்) 1923-இல் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் தமிழ் குருகுலம், பாரத்வாஜ ஆசிரமம் ஆகிய அமைப்புகளைத் தொடங்கினார். இவை 1924-இல் சேரன்மகாதேவிக்கு மாற்றப்பட்டன. அந்தக் குருகுலத்திற்கு காங்கிரஸ் கட்சி ரூ.10,000 நிதியாக வழங்கியது (அந்தக் காலத்தில், அது மிகப் பெரிய தொகை).
ஆனால், அங்கு கடுமையான ஜாதிப் பாகுபாடு நடைமுறையில் இருந்தது. பார்ப்பன மாணவர்கள் தனி இடத்திலும், பார்ப்பனரல்லாத மாணவர்கள் வேறு இடத்திலும் அமர்ந்து உண்ண வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. இது ஓமந்தூர் ராமசாமி (ரெட்டியார்) அவர்களின் மகன் சுந்தரத்தின் மூலம் வெளியானது.
இதைத் தந்தை பெரியார் கடுமையாக கண்டித்தார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் வரதராஜுலு நாயுடு அவர்கள் இதை உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொண்டு, “இது நம்முடைய கட்சி தடை செய்ய வேண்டிய செயல்” என்று தெரிவித்தார். பிரச்சினை காந்தியார் வரை சென்றது. அவரின் முடிவாக – “சமையல்காரர்கள் மட்டும் பார்ப்பனராக இருக்கலாம்” என்ற சமாதானம் முன்மொழியப்பட்டது. ஆனால் பெரியார், வரதராஜுலு மற்றும் பார்ப்பனரல்லாத தலைவர்களின் எதிர்ப்பை அந்தக் குருகுலம் தொடர்ந்து சந்தித்தது. வ.வே.சு. அய்யர் விலகினார். 1926-இல் மகாதேவ அய்யர் பொறுப்பேற்றார். அவர் நிலைக்கவில்லை. பின்னர் சங்கர நாராயண அய்யர் தலைமையிலான காலகட்டத்தில் குருகுலம் முற்றிலும் அழிந்தது.
இது வைக்கம் போராட்ட வெற்றிக்குப் பிறகு, பெரியார் நேரடியாக ஜாதி முறைகளுக்கு எதிராக களம் இறங்கிய முக்கிய கட்டமாகும்.
தந்தை பெரியார் அவர்கள் ‘குடிஅரசு’ ஏட்டில் 5.7.1925 அன்று எழுதியவை இன்றும் நினைவில் இருக்க வேண்டியவை:
“வைக்கம் சத்தியாகிரகமும், குருகுலப் போராட்டமும் அந்த வீதிகளில் நடப்பதினாலும், ஒரு குழந்தை உண்பதை பார்ப்பதினாலும் தமிழர்களுக்கு மோட்சம் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தால் அல்ல. ‘வீதியில் நடக்கக்கூடாது’, ‘என் முன்னால் வரக்கூடாது’ என்று சொல்லும் போதெல்லாம் அவர்கள் என்ன சிந்தனை கொண்டு பேசுகிறார்கள் என்று யோசிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து, நாட்டையே தன்னுடையதாக கொண்ட தமிழனை – ‘நீ என் முன் நடக்கக் கூடாது’ என்று சொல்வதை, மனித குணமுள்ள உயிர் எவ்வாறு சகிக்க முடியும் என்பதே வைக்கம், குருகுலப் போராட்டங்களின் தத்துவமாகும்.”
அதனால்தான் திராவிட இயக்கம் ஒவ்வோர் ஊரிலும் ஆழமாக வேர் ஊன்றி உள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் போராடிய தலைவர்கள், நிகழ்த்திய போராட்டங்கள் மறைந்தும் மறையாமல் வாழ்வதே இன்று நம் சமூக மேம்பாட்டின் அடித்தளமாக திகழ்கிறது.