சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! திருப்புமுனை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்க மாநாடுகள் (13) மன்னார்குடி மகாநாடு

viduthalai

தஞ்சை ஜில்லாவின் இரண்டாவது சுயமரியாதை மகாநாடு, சென்ற 18, 19-06-1932 சனி, ஞாயிறுகளில் மன்னார்குடியில் நடைபெற்றது. அம்மகா நாட்டுடன் தொண்டர் மகாநாடும் நடைபெற்றது. தஞ்சை ஜில்லாவின் முதலாவது மகாநாடு சென்ற ஆண்டில் தரங்கம்பாடியில் நடைபெற்றபின் சென்ற ஆண்டிலேயே நன்னிலம் தாலூகா மகாநாடு நன்னிலத்திலும் நாகப்பட்டிணம் தாலூகா மகாநாடு நாகப்பட்டிணத்திலும், சென்னை மாகாணச் சுயமரியாதைத் தொண்டர் மகாநாடு திருவாரூரிலும் நடைபெற்றன. இன்னும் பல பொதுக்கூட்டங்களும் நடைபெற்றி ருக்கின்றன. இவ்வாறு தஞ்சை ஜில்லாவில் பல சுயமரியாதை மகாநாடுகளும், அடிக்கடி பல ஊர்களில் பல பொதுக் கூட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், கிணற்றுத் தவளைகளாக இருந்து கொண்டிருக்கும் நமது வைதிக எதிரிகளில் பலர் தஞ்சை ஜில்லாவில் சுயமரியாதை இயக்கம் ஆதரவற்று மாண்டு போய் விட்டதென்று கனவு கண்டு கொண்டும், அக்கனவை உண்மையென்று அறியாமையால் நம்பிப் புரளி பண்ணிக் கொண்டும் இருந்தனர். இத்தகைய அறிவற் றோர்க்கு மன்னார்குடி மகாநாடு நல்ல புத்தி கற்பித்திருக்கும் என்பதில் அய்யமில்லை.

தஞ்சை ஜில்லாவில் சிறந்த வைதிகக் கோட்டையாக இருப்பது மன்னார்குடியே யாகும். அனேகமாக நமது மாகாணத்திலேயே மன்னார் குடியைப் போல பார்ப்பனர்கள் நிறைந்த இடமும், வேறு ஒன்றும் இல்லை என்று சொல்லலாம். இதுவும் அல்லாமல் தற்சமயம் காங்கிரஸ் பெயரால் ஏதாவது கிளர்ச்சி செய்து கொண்டிருக்கின்றவர்கள் சிலராவது இருக்கின்றார்கள் என்று சொல்லக்கூடிய இடம் தஞ்சாவூர் ஜில்லாவில்  ஒன்று இருக்கின்றது என்று யாரேனும் சொல்லுவார்களேயானால் அது மன்னார்குடியேயாகும். தஞ்சாவூர் ஜில்லாவில் காங்கிரஸ் கிளர்ச்சி பலமாக இருக்கின்றது என்று சொல்லப்பட்டு வந்த காலத்தில் அவ்வாறு சொல்லுவதற்குக் காரணமாக இருந்தது மன்னார்குடியே யாகும். இத்தகைய வைதிகமும், பார்ப்பனர்களும், காங்கிரஸ்காரர்களும் நிறைந்த ஒரு ஊரில் நமது மகாநாடு நடைபெறுவதென்றால் அது ஒன்றே நமது இயக்கம் எவ்வாறு பரவி வருகிறது என்பதற்குத் தகுந்த உதாரணமாகும். மன்னார்குடியில் நமது மகாநாடு நடைபெற்றதைக் கொண்டு இனி எந்த வைதிகமானாலும் சரி, வேதங்களானாலும் சரி, குருமார்களானாலும் சரி, மதஸ்தர்களானாலும் சரி, இயக்கங்களானாலும் சரி, பிரசாரங் களானாலும் சரி, நமது இயக்கத்தை ஒழித்து விட முடியாது,

இவ்வியக்கத்தின் தத்துவ மாகிய சமதர்ம வெள்ளம், மதங்கள் புரோகிதம், ஜாதிகள், சாத்திரங்கள், உயர்வு தாழ்வுகள், சுய நலங்கள், மூட நம்பிக்கைகள், குருட்டுப் பழக்க வழக்கங்கள் ஆகிய அணைகளை யெல்லாம் அடியோடு பெயர்த்துக் கொண்டு எல்லா மக்களையும் இழுத்துக் கொண்டு பகுத்தறிவுச் சுதந்திர கடலில் போய்ச் சேருவதில் எள்ளளவும் அய்ய மில்லையென்று அறியலாம்.

மன்னார்குடி, மகாநாடு மற்றொரு வகையில் குறிப்பிடத்தகுந்த ஒரு பெருமையுடைய மகா நாடாக விளங்கினது போற்றத்தக்கதாகும். இது வரையிலும் நடைபெற்ற மகாநாடுகளாலெல்லாம் பெண்கள் மகாநாட்டைத் தவிர சுயமரியாதை மகாநாடு களில் ஆண்களே தலைமை வகித்து வந்தார்கள். ஆனால் மன்னார்குடி மகாநாட்டிலோ, நமது இயக்கத் தின் உண்மை தோழர்களில் ஒருவராகிய திருமதி. குஞ்சிதம்  பி. ஏ., எல். டி.,  அவர்கள் தலைமை வகித்தது நமது இயக்கம் எவ்வாறு பெண்களின் சமத்துவத்திற்கு உண்மையோடு உழைத்து வருகிறது என்பதைக் காட்டுவதற்கு ஒரு உதாரணமாகும்.

இவ்வியக்கத்தின் தத்துவ மாகிய சமதர்ம வெள்ளம், மதங்கள்
புரோகிதம், ஜாதிகள், சாத்திரங்கள், உயர்வு தாழ்வுகள், சுய நலங்கள்,
மூட நம்பிக்கைகள், குருட்டுப் பழக்க வழக்கங்கள் ஆகிய அணைகளை
யெல்லாம் அடியோடு பெயர்த்துக் கொண்டு எல்லா மக்களையும்
இழுத்துக் கொண்டு பகுத்தறிவுச் சுதந்திர கடலில் போய்ச் சேருவதில்
எள்ளளவும் அய்ய மில்லையென்று அறியலாம்.

மன்னார்குடி மகாநாட்டில் பலதரப்பட்ட அரசியல் அபிப்பிராய முடையவர்களும் பலதுறையிலிருந்து கொண்டு சமுகச் சீர்திருத்தம் புரிந்து வருபவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தகுந்த மற்றொரு விசேஷமாகும். இதனால் வேறு, வேறு துறையிலிருப்பவர்களும்கூட சுயமரியாதை இயக்கத்தின் தத்துவங்களை மறுக்க முடியாதவர்களாக அதன் கொள்கைகளுக்கு ஆதர வளிக்கும்படியான நிலைமை நமது இயக்கம் உண்டாக்கி விட்டதென்ற உண்மையை யார் மறுக்க முடியும்?

நமது இயக்கத்தின் உண்மைத் தத்துவங்களைத் தெரிந்து கொள்ள முடியாத அறிவற்றவர்களும், நமது இயக்கக் கொள்கைகள் எங்கும் பரவி விடுமானால் தங்களின் தனிமதிப்புக்கும் சுயநலத்திற்கும் இடமில்லாமல் போய்விடுமே என்ற பயமும் சுயநலமும் உடையவர்களும் ‘காந்தி’ ‘காங்கிரஸ்’ ‘சுயராஜ்யம்’ என்ற பெயர்களைச் சொல்லி தலைவர் பட்டமும் தேசாபிமானப் பட்டமும் பதவிகளும் அடைய விரும்பும் போலிகளும், தற்சமயம் நமது இயக்கத்தைப் பற்றித் தப்புப் பிரசாரம் பண்ணிக் கொண்டு வருகிறார்கள்; இக்கூட்டத்தார்கள் தாம், நம்மைத் ‘தேசத்துரோகிகள்’ என்றும், ‘நாஸ்திகர்கள்’ என்றும் ‘வகுப்புத் துவேஷிகள்’ என்றும் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். இவர்கள் கூற்று சுயநலமுடையதும் யோக்கியப்பொறுப்பு இல்லாததும் ஆனது என்பதை மகாநாட்டின் தலைவர் திருமதி. குஞ்சிதம் அவர்கள் தமது முன்னுரையில்: “காங்கிரஸ்காரர்கள் அடிக்கடி ‘அந்நிய ஆட்சி’ என்றும், ‘அந்நியத் துணி’ என்றும் ‘அந்நிய பாஷை’ என்றும் சொல்லி நமது மக்களை ஏமாற்றுகிறார்கள். ஆங்கிலேயர்கள் அந்நியர்கள் என்றால் பார்ப்பனர்கள் (ஆரியர்கள்) யார்? என்று கேட்கிறேன். ‘இங்கிலீஸ்’ அந்நிய பாஷை என்றால் சமஸ்கிருதம் எந்தப் பாட்டன் வீட்டுப்பாஷை? என்று கேட்கிறேன்.

ஆகையால் அவர்கள் சொல்லுகிறபடி பார்த்தாலும், 400 வருஷத்திற்கு முந்தி வந்த அந்நிய பாஷையை ஒழிப்பதற்கு முன் 2000 வருஷங்களுக்கு முந்தி வந்த “அந்நிய ராகிய பார்ப்பனர்களின் ஆட்சியை ஒழிக்க வேண்டியது இன்னும் அவசியமல்லவா? அதுபோலவே 400 வருஷத்திற்கு முந்தி வந்த அந்நிய பாஷையை ஒழிப்பதற்கு முன் 2000 வருஷமாக நமது சமுகத்தில் ‘பராசரஸ்மிருதி’ ‘மனுதர்மம்’ முதலிய கொடூரச் சட்டங்களைச் செய்த அந்நிய பாஷையாகிய ‘சமஸ்கிருத பாஷை’யை அடியோடு அழிக்க வேண்டாமா? என்று கேட்கிறேன். ஆகையால் இந்த பசப்பு வார்த்தைகளி லெல்லாம் மயங்கிவிடாமல் நிதானப் புத்தியோடு ஆவேசங் கொள்ளாமல்; எந்தகாரியத் தையும் யோசித்துச் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசியிருப் பதிலிருந்து அறியலாம்.

மன்னார்குடியில் நமது மகாநாட்டை நடத்த வொட்டாமல் செய்ய வைதிகர்களும், அவர்களுக்கு ஆதரவாயுள்ள பார்ப்பன உத்யோகஸ்தர்களும், எவ்வளவோ முயற்சி செய்தும் பலிக்காமல் மகாநாடு மிகவும் வெற்றியோடு முடிவு பெற்றது பாராட்டத் தக்கதாகும். பெரிய மனிதர்களின் ஆதரவின்மையும், வைதிகர்களின் விஷமப் பிரசாரத்தையும், அதிகாரிகளின் அக்கிரமங்களையும் சிறிதும் பொருட்படுத் தாமல் மகாநாட்டை வெற்றியுடன் நடத்துவதற்கு காரணமாக இருந்தவர்கள் மன்னார் குடியிலுள்ள நமது இயக்க வாலிப வீரர்களே என்பது குறிப்பிடத் தகுந்ததாகும். ஆகவே எத்தகைய கஷ்ட நஷ்டங்களையும் லட்சியம் பண்ணாமல் மகாநாட்டை வெற்றியோடு நடத்திய நிர்வாகிகளையும் மகாநாட்டின் நடவடிக்கைகளில் பங்கெடுத்துக் கொண்டவர்களையும் பாராட்டுகிறோம்.

– குடிஅரசு – தலையங்கம் – 26.06.1932

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *