ஜெயங்கொண்டம், ஜூலை16- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று (15.7.2025) கல்வி வளர்ச்சி நாள் மற்றும் தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா முதல்வர் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பெருந்தலைவர் காமராசரின் அரும்பெரும் சாதனைகளை மாணவிகள் அழகாக எடுத்து ரைத்தனர். மாணவர்கள் காமராசரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை நாடகமாக நடித்துக்காட்டினர்.
போட்டிகள்
தமிழ் இலக்கிய மன்றத்தின் நோக்கம் மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தையும் தமிழ்ப் பற்றையும் வளர்ப்பதே ஆகும் மாணவர்கள் கட்டுரைப் போட்டி, கவிதை போட்டி ,ஓவியப் போட்டி, கையெழுத்துப் போட்டி ஆகியவற்றில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு அவர் களின் தனித் திறமைகளை வெளிக் கொணர்ந்தனர்.
நாடகங்கள்
மேலும் இவ்விழா வரவேற்பு நடனத்துடன் இனிதே தொடங்கியது. மாணவர்கள் வேலுநாச்சியார், நேரு, சுபாஷ் சந்திர போஸ், ஜான்சி ராணி போன்று பல்வேறு வேடங்களில் வருகை புரிந்து அனைவரையும் மகிழ்வித்தனர். அதுமட்டுமின்றி தமிழ்மொழியின் சிறப்புகளை மாணவி அற்புதமாக எடுத்துரைத்தார்.
ஒயிலாட்டம்
மாணவிகள் தமிழின் இனிமையை இனிய பாடலாக பாடி செவிகளுக்கு விருந்தளித்தனர். தமிழர்களின் பாரம்பரிய கலையான ஒயிலாட்டத்தை மாணவர்கள் துள்ளிக் குதித்து அருமையாக ஆடினர்
திருக்குறளின் சிறப்புகளையும், அவற்றில் அடங்கியுள்ள அரிய செய்திகளையும் மாணவி எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து பாஞ்சால நாட்டு சிங்கம் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை மிகச் சிறப்பாக மாணவர்கள் நடித்துக்காட்டினர்.
மாணவி நன்றியுரை வழங்க நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.