சென்னை, ஜூலை 16– அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை பெற சென்னையில் 7 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து பொது மக்கள் விண்ணப்பித்து, மனுக்களை அளித்தனர்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்
பொதுமக்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்களுடைய இல்லங்களுக்கே சென்று வழங்கும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (15.7.2025) சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார்.
அவர் தொடங்கி வைத்த மறு கணமே தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. முன்னதாக அரசு துறைகளின் சேவைகள், திட்டங்களை பெறுவதற்கான பயிற்சி முகாம்கள் எந்தெந்த மாவட்டங்களில்? எங்கெல்லாம் நடக்கும்? என்ற விவரங்கள் வெளியானது.
அதன்படி, சென்னையில் நேற்று தண்டையார்பேட்டை சி.எச்.எஸ்.எஸ். படேல்நகர் பள்ளி (மண்டலம்-4), சிறீமஹாவீர் ஜெயின் பவன், திருவல்லிக்கேணி (மண்டலம்-9) உள்ளிட்ட 7 இடங்களில் இந்த முகாம் நடந்தது.
முகாம் நடைபெறக் கூடிய பகுதிகளையொட்டிய மக்களுக்கு அதுபற்றி அதற்கு முந்தைய நாளில் சம்பந்தப்பட்டதுறை பணியாளர்கள் தெரிவித்தனர். அந்த வகையில் முகாம் நடந்த இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
உதயநிதி ஆய்வு
முகாமில் ஒவ்வொரு துறை சார்ந்த அரங்குகள் தனித் தனியாக அமைக்கப்பட்டு, அதில் அதிகாரிகள், பணியாளர்கள் மக்களுக்கு உதவி செய்தனர்.
அதன்படி, சென்னை திருவல்லிக் கேணி சிறீமஹாவீர் ஜெயின்பவன் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் வெயிலில் காத்துக்கிடந்து விண்ணப்பித்தும்,
அதற்கான மனுக்களையும் வழங்கினர். சிலருக்கு உடனடியாக கிடைக்கக்கூடிய சேவைகள், திட்டங்கள் பெறவும் வழிவகை செய்யப்பட்டது.
இந்த முகாமை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு, மனு, விண்ணப் பங்களை அளிக்க வந்த மக்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா. தயாநிதி மாறன் எம்.பி. உள்பட பலர் உடன் இருந்தனர்.
45 நாட்களில் நடவடிக்கை
முகாமில் பெரும்பாலும் மகளிர் உரிமைத்தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்கவே மக்கள் அதிகம் கூடியதை பார்க்க முடிந்தது.
அதற்கடுத்தபடியாக குடும்ப அட்டை, ஆதார் அட்டை புதிதாக விண்ணப்பிக்க, பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்ற விண்ணப்பித்தும், மனுக்களை வழங்கியும் சென்றனர்.
அவ்வாறு பெறப்படும். விண்ணப் பங்கள். மனுக்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.
இதேபோல் திரு.வி.க.நகர் மண்டல அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்
பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு செய்து பொது மக்களிடம் மனுக்களை பெற்றார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முதல் கட்டமாக அடுத்த மாதம் (ஆகஸ்டு) 14ஆம் தேதி வரை 109 முகாம்கள் நடத்தப்படுகின்றன.