சென்னை, ஜூலை 16– சென்னை சைதாப் பேட்டையில் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது,
வீடு தேடி சேவைகளை தரும் திராவிட மாடல் அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் (15.7.2025) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 109 முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
முதல் நாளே மக்கள் இதனை வரவேற்று பாராட்டுகின்றனர். தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் 15 துறைகளை சார்ந்த 45 சேவைகளும் நகர்புறங்களில் 13 துறைகளை சேர்ந்த 43 சேவைகளும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நடத்தப்பட்டு வருகின்றன.சென்னை முழுவதும் 400 முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு எளிதாக சேவைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அரசுப் பணி பதவி உயர்வில்
மாற்றுத் திறனாளிகளுக்கு
4 சதவீத இட ஒதுக்கீடு
4 சதவீத இட ஒதுக்கீடு
தமிழ்நாடு அரசு ஆணை!
சென்னை, ஜூலை 16- அரசுப் பணிகளில் பதவி உயர்வு பெற காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு நற்செய்தியாக அரசுப் பணி பதவி உயர்வில், மொத்த பணியிடங்களில் 4% இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலாளர் எஸ்.மதுமதி இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம் 2016இல் உரிய சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இந்த இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த இட ஒதுக்கீடு பின்வரும் பிரிவுகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்குப் பொருந்தும்: பார்வையற்றவர்கள் மற்றும் குறைந்த பார்வைத்திறன் உடையவர்கள். செவித்திறன் அற்றவர்கள் மற்றும் குறைந்த அளவு ஒலியை உணரும் திறன் பெற்றவர்கள். அமில வீச்சால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சக்கர நாற்காலிகள் உதவியுடன் அன்றாட வாழ்வை நகர்த்துவோர். ஆட்டிசம், அறிவுத்திறன் குறைபாடு, கற்றலில் குறைபாடு மற்றும் மனநல பாதிப்பு உடையவர்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்குப் பதவி உயர்வு தொடர்பான அம்சங்களை ஆராய துணைக்குழுக்கள் அமைக்க அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
இந்த துணைக்குழுவின் அறிக்கை, மனிதவள மேலாண்மைத் துறைச் செயலரைத் தலைவராகக் கொண்ட உயர்நிலைக் குழுவின் பரிந்துரைக்காக எடுக்கப்படும். உயர்நிலைக் குழு பரிந்துரைக்கும் நிலையில், மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு 4% ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி, அவர்களின் பணி முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.