தஞ்சாவூர், ஜூலை 16- எந்தச் சூழலிலும் பொதுத்துறை வங்கிகள் மற்றும் காப்பீட்டு துறைகளை தனியார் மயமாக்கும் எண்ணத்தை ஒன்றிய அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும் என இந்திய ஸ்டேட் வங்கியின் மேனாள தொழிற்சங்க தலைவர்களின் கூட்டமைப்பு (AFCCOM) வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.
இக்கூட்டமைப்பின் ஒன்பதாவது பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூர் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாளிகை சரோஜ் நினைவகத்தில் 13.7.2025 அன்று இந்த அமைப்பின் தலைவர் எஸ்.பி.இராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ஓய்வூதிய மறு சீரமைப்பை…
எட்டு லட்சம் வங்கி ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மறு சீரமைப்பையும் ஆண்டுதோறும் வழங்க வேண்டிய கருணைத் தொகை உயர்வையும் தாமதமின்றி வழங்க இந்திய வங்கிகள் நிர்வாகம் (IBA) முன்வர வேண்டும்.
வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்ட தன் நோக்கங்களை பலப்படுத்த வேண் டுமே தவிர பலவீனப்படுத்தி விடக்கூடாது. எந்த சூழலிலும் பொதுத்துறை வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் (காப்பீட்டுத் துறை) களை தனியார் மயமாக்கும் எண்ணத்தை ஒன்றிய அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும் என இக்கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
தொழிலாளர் நலசட்டங்கள்
தொழிலாளர் நலத்தை சீரமைப்பதற்கு பதிலாக சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ள நான்கு தொழிலாளர் நல சட்டங்களை ஒன்றிய அரசு விருப்பு வெறுப்பின்றி ஆழ்ந்து பரிசீலனை செய்ய முன்வர வேண்டும்.
வரிவிதிப்பை குறைக்க வேண்டும்
கடந்த நிதியாண்டில் மட்டும் அரசு பெற்ற ஜி.எஸ்.டி. தொகை 22.08 லட்சம் கோடி என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பெருந்தனக்காரர்கள், செல்வ செருக்கு மிக்கோர் வாங்கும் தங்கத்துக்கு 3 சதவிகிதமும் வைரத்துக்கு 1.5 சதவிகிதமும் வரி விதித்து விட்டு, ஏழை எளிய, நடுத்தர வர்க்கத்தினர் வாங்கும் பொருள்களுக்கு அதிகபட்சமாக 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வரி விதித்துவரும் நடைமுறையை பாசீலித்து கணிசமாக குறைக்க ஒன்றிய அரசு தாமதமின்றி முன் வரவேண்டும்.
நாடாளுமன்ற கூட்டத் தொடரில்..
மகத்தான மக்கள் சேவையாற்ற வரும் பொதுத்துறை அமைப்பான எல்.அய்.சி.யை பலவீனப்படுத்தும் மசோதாக்களை ஒன்றிய அரசு கைவிடவேண்டும்.
வர இருக்கின்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஆயுள் காப்பீட்டு கழக சட்டம், காப்பீட்டு ஒழுங்கு முறை மேம்பாடு ஆணைய சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்து வர்த்தகச் சூதாடிகளும், வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய காப்பீட்டு துறையில் நுழைய அனுமதிக்கும் சட்ட திருத்த மசோதாக்களை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என இக்கூட்டமைப்பு வலியுறுத்துகிறது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக இப்பொதுக்குழு கூட்டத்திற்கு துணைத் தலைவர் டி.வி.சந்திரசேகரன், துணைச் செயலாளர் எம்.முருகையா, உதவி பொருளாளர் வீ.பூமிநாதன், டி.சிங்காவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.சந்திரா கில்பர்ட் வரவேற்றார்.
AFCCOM அமைப்பின் செயலாளர் எம்.கே.மூர்த்தி, நிர்வாகக்குழு உறுப்பினர் கோவை எம்.ரகுநாதன், பரவை எஸ்.பாலசுப்பிர மணியன், அகமது உசைன், ரத்தினவேல், வி.சம்பத், ஆர்.சந்திர சேகரன் ஆகியோர் பங்கேற்றனர். இறுதியில்
என்.பாண்டுரங்கன் நன்றி கூறினார்.