மாற்றுத் திறனாளிகளிடமிருந்து வாழ்நாள் சான்றிதழ் பெற வேண்டாம்
தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, ஜூலை 15- மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை பெறுவோரிடமிருந்து வாழ்நாள் சான்றிதழ் பெற வேண்டாம் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் எம்.லட்சுமி அனைத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் பின்வருவன குறிப்பிடப்பட்டுள்ளன:
பராமரிப்பு உதவித் தொகை
மனவளர்ச்சி குன்றியவர்கள், கடுமையான பாதிப்பு உடையவர்கள், முதுகுத் தண்டுவட பாதிப்பு, பார்கின்சன் நோய், தண்டுவட மரப்பு நோய், தொழுநோய் பாதிப்பு, மற்றும் புறஉலக சிந்தனையற்ற மதி இறுக்கம் உள்ளவர்கள் ஆகியோருக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
பயனாளிகளின் தரவுகள் தமிழ்நாடு மின்னாளுமை முகமை மூலம் சரிபார்க்கப்பட்டு, இறந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உதவித் தொகை நிறுத்தப்படுகிறது. இதன்மூலம் தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆகவே, இனி பராமரிப்பு உதவித் தொகை பெறும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து வாழ்நாள் சான்றிதழ் பெற வேண்டிய அவசியமில்லை என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 8 இடங்களில்
சிறிய துறைமுகங்கள் அமைக்க
சிறிய துறைமுகங்கள் அமைக்க
தமிழ்நாடு அரசு திட்டம்
சென்னை, ஜூலை 15- தமிழ்நாட்டில் எட்டு இடங்களில் புதிய சிறிய துறைமுகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. செங்கல்பட்டு (முகையூர், பனையூர்), மரக்காணம், கடலூர் (சிலம்பிமங்கலம்), மயிலாடுதுறை (வானகிரி), நாகப்பட்டினம் (விழுந்தமாவடி), தூத்துக்குடி (மணப்பாடு), மற்றும் கன்னியாகுமரி கடற்கரை பகுதிகள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்த துறைமுகங்களை உருவாக்குவதற்கு தனியார் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விருப்பம் தெரிவிக்கும் முதலீட்டாளர்களுக்கு தொழில் கொள்கை அடிப்படையில் அனுமதிகள் வழங்கப்படும். துறைமுகங்கள் 30 முதல் 99 ஆண்டுகள் வரை நீண்டகால குத்தகைக்கு வழங்கப்படும்.
மேலும், சுற்றுலா, கப்பல் கட்டும் தளம், மற்றும் கடல் உணவு உற்பத்தி தொழில்களை தொடங்குவதற்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது.