தமிழ்நாட்டுக்கு வெளியே நடைபெற்ற சுயமரியாதை மாநாடுகளில் மிக முக்கியமான மாநாடு, பம்பாயில் நடைபெற்ற ‘மகாராட்டிர முதல் சுயமரியாதை மாநாடு’. 1929-ஆம் ஆண்டு மே மாதம் 26-ஆம் தேதி, நாசிக் சமூக சமத்துவ சங்கத்தின் ஆதரவுடன் இம்மாநாடு நடைபெற்றது. பம்பாயில் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது என்பதே சிறப்புக்குரியதுதான். ஆனால், அதைவிட குறிப்பிடத்தக்க மாபெரும் சிறப்பு இம்மாநாட்டில் தலைமைப் பேருரையை நிகழ்த்தியவர் புரட்சியாளர் அம்பேத்கர்.
‘நாசிக் கலாசாலை’ ஆசிரியராக இருந்த சாப்னிஸ், ‘சமத்துவம்’ பத்திரிகை ஆசிரியர் டி.வி.நாயக், எம்.பி.தேசமுகி உட்பட பம்பாயின் முக்கிய பிரமுகர்கள் பலர் மாநாட்டிற்கு வருகை வந்திருந்தனர். பொதுமக்கள் அய்ந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். புரட்சியாளர் அம்பேத்கருக்கு ரயில் நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டு, மாநாட்டுப் பந்தலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். நண்பகல் 1.30 மணிக்கு மாநாடு தொடங்கியது.
மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த ராக்கேட் என்பவர். உடல்நலம் சரியின்மை காரணமாக, வரவேற்புரையை வாசிக்கவில்லை. தலைமை உரையாற்றிய அம்பேத்கர், ‘நாட்டில் தாழ்த்தப்பட்டோர் நிலைமை என்னவாக இருக்கிறது’ என்பதை எடுத்துக்கூறினார். “இந்து மதத்தில் நிலவும் உயர்வு- தாழ்வு பேதங்கள் சுயமரியாதையை அழித்துவிட்டன. ஒடுக்கப்பட்ட- பிற்படுத்தப்பட்ட மக்கள்தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்க நகைகள் அணிவதற்குகூட ஜாதி பேதம் பார்க்கப்படுகிறது. சில வகுப்பார் தங்க நகைகளை அணியக்கூடாது, தாழ்ந்த உலோகத்தால் செய்யப்பட்ட நகைகளைத்தான் அணிய வேண்டும் என்கிறார்கள். பணம் இருந்தால்கூட தாழ்த்தப்பட்டவர்கள் தங்க நகை அணியக்கூடாதாம்! இந்த தீய வழக்கத்தை மீறி, தங்க நகை அணிந்த தாழ்த்தப்பட்டோருக்கு பலவித கொடுமைகள் இழைக்கப்பட்டுள்ளன” என்று அம்பேத்கர் கூறியது அந்த காலகட்ட ஜாதியப் பாகுபாடுகளை கண்முன் நிறுத்துகிறது.
மேலும், “தாழ்த்தப்பட்டோரின் சிறுமை நிலையை மாற்ற வேண்டுமானால், அவர்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி உண்டாகச் செய்ய வேண்டும். தங்கள் உரிமைகளை அனுபவிப்பதற்காகத் துணிந்து நீங்கள் முயல வேண்டும் என்று அவர்களைத் தூண்டி விட வேண்டும். படிப்பினால் மாத்திரம் சமத்துவம் ஏற்பட்டுவிடும் என்று கருதுவது பைத்தியக்காரத்தனமாகும். படிப்பினால் ஒடுக்கப்பட்ட மக்களின் துன்பங்கள் பெரிதும் நீங்கும். ஆனால், சமூக வாழ்க்கையில் அவர்கள் நிலைமை உயர்வடைய கல்வி மாத்திரம் போதாது. நான் உயர்ந்த கல்வி கற்றிருக்கிறேன்.
அப்படியிருந்தும், தீண்டத்தகாதவனாகவே கருதப்படுகிறேன். ஜாதி பேதம் என்ற கொடிய வருணாசிரமக் கோட்பாட்டை அடியோடு ஒழித்தால்தான் நாம் மேன்மையடைய முடியும்” என்று அம்பேத்கர் ஆற்றிய உரையின் சாராம்சத்தை ‘குடிஅரசு’ ஏட்டில் பதிவு செய்திருக்கிறார் பெரியார்.
அதன்பிறகு மாநாட்டில், பெரியாரைப் பாராட்டி அம்பேத்கர் அளித்திருந்த கடிதமும், எம்.கே.ரெட்டியார் அளித்திருந்த கடிதமும் மேடையில் வாசிக்கப்பட்டன.
குழந்தைத் திருமண முறை ஒழிக்கப்பட வேண்டும். ஜாதி- பேதங்கள் ஒழிக்கப்பட வேண்டும். புரோகித முறை கூடாது. மனுசாஸ்திரம், புராண நூல்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். கோயில் பூசைகள், உற்சவங்களுக்கு சர்க்கார் செய்யும் செலவுகளை நிறுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
ர. பிரகாசு
நன்றி: ‘முரசொலி’ 15.7.2025)